2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களுக்கு வைத்தியப் பரிசோதனை செய்யப்பட வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்களின் உடம்பில்; விஷம் கலந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்;றது. எனவே, வெளிநாட்டு வைத்தியர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு வைத்தியப் பரிசோதனை செய்யப்பட்டு உண்மையைக் கண்டறிய வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பிரஜைகள் சபைத் தலைவர் எம்.வாமநாதன் தெரிவித்தார்.

நல்லிணக்கப் பொறிமுறைக்கான பொதுமக்களிடம் கருத்தறியும் அமர்வு,  மட்டக்களப்பு, மண்முனை வடக்குப் பிரதேச செயலகத்தில்; சனிக்கிழமை (13) நடைபெற்றது.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'சிறுபான்மைச் சமூகங்களின் நியாயமான கோரிக்கைகளை புறந்தள்ளி, இனங்களை பிரித்தாளும் சம்பவங்களே இந்நாட்டில் இடம்பெற்ற அழிவுக்கும் யுத்தத்துக்கும் காரணமாகும். இது தொடராமலிருப்பதற்காக இனங்களுக்கிடையில் பரஸ்பர புரிந்துணர்வை வளர்த்தால் மட்டுமே நம்பிக்கையை கட்டியெழுப்பமுடியும்' என்றார்.

'இனங்களுக்கிடையில் பயமும் சந்தேகமும் நம்பிக்கையீனமும் காணப்படுகின்றன. இவை இருக்கும்வரையில் நாம் ஒற்றுமையாக வாழமுடியாது. இது களையப்பட வேண்டும். இதற்கான வழிகாட்டல்களை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும்;.

மேலும், தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டிருந்தால், இந்நாட்டில் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது. சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென்பதுடன், பயங்கரவாதச் தடைச்சட்டத்தையும் நீக்கவேண்டும்.

இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டு இராணுவம் வெளியேறும்போதே, மக்களின் மனங்களில் நம்பிக்கை ஏற்படும். இராணுவம் இருக்கவேண்டுமென்று அரசாங்கம் தீர்மானிக்குமாயின், சிறிய நிலப்பரப்பிலும் சிவில் நிர்வாகத்தில் தலையிடாது பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் இருந்தால் மட்டுமே தமிழ் மக்களுக்கு ஓரளவுக்கேனும் பயம் இல்லாத நிலையேற்படும்.

காணாமல் போனோரைக் கண்டறியும் ஆணைக்குழு விசாரணைகளில் மக்கள் சந்தேகம் கொண்டுள்ளனர். இந்நிலையில், எதிர்காலத்தில் நடைபெறும் விசாரணைகளின்போது, ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படும் பட்சத்தில் இலங்கையின் நீதித்துறையில் சந்தேகம் ஏற்படாத நிலையேற்படும். உள்நாட்டு விசாரணையில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படப்போவதில்லை. எந்தளவு மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுமோ அந்தளவுக்கு இந்த விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும்.

தமிழ் மக்களுக்கு என்ன தீர்வுத்திட்டம் வேண்டுமென்பதை தமிழர்களே தீர்மானிக்கவேண்டும்' எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X