2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

'பிரச்சினைகள் வேண்டுமென்றே திணிக்கப்படுகின்றன'

Niroshini   / 2016 ஜனவரி 21 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் அவர்கள் மிக மும்முரமாக விடயங்களைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால், எமது வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குத் தான் பிரச்சினைகள் வேண்டுமென்றே திணிக்கப்படுகின்றன என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கிருஸ்ணபிள்ளை துரைரசசிங்கம் தெரிவித்தார்.

புதன்கிழமை (20) அம்பாறையில் இடம்பெற்ற மீனவ சங்கங்களுடனான கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
 
தற்போது இடம்பெறுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் பலவிதமாக நோக்க வேண்டியுள்ளது. சட்ட சம்மந்தப்பட்ட அல்லது திணைக்களத்தினூடான பிரச்சினை, மீனவர்களுக்கிடையிலான பிரச்சினைகள், அடுத்து மத்திய மாகாண அரசுகளின் பிரச்சினை இவ்வாறு பல விடயங்கள் நோக்கப்படுகின்றன. 2,030 ஏக்கர் பரப்பாக இருந்த இங்கிருக்கின்ற குளமொன்று மெல்ல மெல்ல சுருங்கிக் கொண்டு வருகின்றது என்ற விடயம் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும். இங்கிருக்கின்ற மீனவர் சங்கங்களுக்கு யார் அதன் உறுப்பினர்கள், அவர்களின் மீன்பிடி எல்லைகள் எது என்பவை தொடர்பில் அவர்களுக்குள்ளேயே பல பிரச்சினைகள் இருக்கின்றன.
 
13ஆவது அரசியலமைப்புச் சட்டத்தில் மூன்று நிரல்கள் இருக்கின்றன. ஒன்று மத்திய அரசாங்கத்துக்கு முழுமையானது மற்றையது மாகாண அரசாங்கத்துக்கு முழுமையானது மூன்றாவது நிரல் மாகாண அரசாங்கமும் மத்திய அரசாங்கமும் கையாளுகின்ற விடயங்கள் என இருக்கின்றன.

மாகாண அரசாங்கத்துக்குரிய விடயங்களையே மத்திய அரசாங்கம் விழுங்கிக் கொண்டிருக்கின்றது. அவ்வாறு இருக்கும்போது இந்த மாகாண அரசாங்கத்துக்கும் மத்திய அரசாங்கத்துக்குமான விடயத்தைக் கையாளுவது தொடர்பில் மத்திய அரசாங்கம் எந்தளவுக்கு விடாப்பிடியாக இருக்கும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் அவர்கள் மிக மும்முரமாக விடயங்களைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
 
ஆனால், எமது வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குத் தான் பிரச்சினைகள் வேண்டுமென்றே திணிக்கப்படுகின்றன. ஆளுனர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது எல்லாம் எங்களுக்கு எந்தளவுக்கு அதிகாரத்தைக் கொடுக்காமல் இருக்க முடியுமோ அந்தளவுக்குக் கொடுக்காமல் இருப்பதற்குத்தான் என்கின்ற விடயம் அண்மையில் வாதுவையில் இடம்பெற்ற விவசாயம் சம்மந்தமான கலந்துரையாடலின் போது முன்வைக்கப்பட்டது.

அந்த அடிப்படையில் தான் மீனவர்கள் தொடர்பான விடயத்தில் மத்திய அரசாங்கம் இதுவரை நடந்துகொண்டது.
 
இருந்த போதிலும், இப்போது ஏற்பட்டிருக்கின்ற நல்லாட்சியில் மாகாண அரசாங்கம் தொடர்பான விடயங்களை மத்திய அரசாங்கம் கையாளும் போது, மாகாண அரசாங்கத்துடன் கலந்துரையாடித் தான் மத்திய இத்தகைய விடயங்களைக் கையாள வேண்டும்.

ஏனெனில், முழுமையாக எங்களுடைய ஆளுகைக்குட்பட்ட விடயம். எனவே உரிமங்கள் வழங்குகின்ற விடயம் மத்திய அரசாங்கத்துக்கு இருந்தாலும் அந்த உரிமத்தினை யாருக்கு எவ்வாறு வழங்க வேண்டும் என்பது தொடர்பாக மாகாண நிர்வாகத்தோடு அவர்கள் கலந்து பேசித்தான் மேற்கொள்ள வேண்டும்.

இந்த அடிப்படையில் செயற்பாடுகள் நடைபெறும் என்றால், எமது மீனவர்களுக்கு ஏற்படுகின்ற சங்கடங்கள் எல்லாம் குறைக்கப்படும்.

இந்த விடயம் தொடர்பாக மிக வரைவில் நாங்கள் எமது அமைச்சில் மீனவர் சங்கத் தலைவர்களை அழைத்து, மத்திய அரசின் மீன்பிடித்துறை இயக்குனர், மற்றும் அதிகாரிகள், இங்கிருக்கின்ற இது தொடர்பான உத்தியோகஸ்தர்களையும் அழைத்து மத்திய, மாகாண அரசாங்கம் கலந்து பேசி செய்யக் கூடிய விடயங்கள் தொடர்பில் நாம் வரையறை செய்வோம் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X