2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

'பிள்ளைகளைக் கற்றலில் ஈடுபடுத்த வேண்டும்'

Niroshini   / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் என் போன்ற இடைப்பட்ட சமூகத்தினர் கல்வியை இடைநடுவே கைவிட்டுள்ளனர். இருந்த போதிலும் எமது எதிர்கால சந்தத்தியினரின் கல்வி வளர்ச்சி என்பது மோசமடைந்து போய்க் கொண்டிருக்கின்றன. இந்நாட்டில் மிகவும் கலாசார சீர்கேடுகள் இடம்பெற்று வருகின்றன. கிழக்கு மாகாணத்தில் இடைவிலகல் மாணவர்களின் தொகை அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவிக்கின்றார். எனவே, இந்நிலைமையை வைத்துக் கொண்டு பெற்றோர்கள் தமது பிள்ளைகளை மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்து பிள்ளைகளைக் கற்றலில் ஈடுபடுத்த வேண்டும் என கிழக்கு மகாண சபையின் பிரத்தித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு கோட்டத்துக்குட்பட்ட மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்பு ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும் ஆங்கில வகுப்பறையை திறந்து வைக்கும் நிகழ்வும் இன்று செவ்வாய்க்கிழமை (02)  வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

வித்தியாலய அதிபர் பொ.நேசதுரை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எமது தலைமைத்துவங்கள், குறைவடைந்து போகின்றன. தமிழ் அதிகாரிகளின் எண்ணிக்கையிலும் குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

தேர்தல் காலங்களில் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள், எமது மக்களின் காலடிக்கு தேடிவந்து எமது தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று பதவிகளுக்கு வருகின்றார்கள். எனவே அரசியல் ரீதியாகவும் எமது மக்கள் தெளிவடைய வேண்டிய காலம் உள்ளது.

இந்நிலையில், எமது மண்ணுக்கான உயிரை நீத்த வீரர்களின் தியாகங்களை நாங்கள் என்றும் மறக்க முடியாதவையாகும். இந்த நாட்டிலே எவ்வாறான அரசியல் தீர்வு வேண்டும் என்பதை இந்த நாட்டு அரசாங்கம் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு கருத்துக்கணிப்பை தற்போது எடுத்துக் கொண்டிருக்கின்றது. விரைவில் இவ்வாறான கருத்துக் கணிப்பு மட்டக்களப்பு மாவட்டத்திலும் இடம்பெறவுள்ளது. இதன்போது, எமக்கு நிரந்தர அரசியல் தீர்வு வரவேண்டும், வட,கிழக்கு இணைந்த சுயாட்சி ஏற்படுத்தப்பட வேண்டும்  என எமது மக்கள் துணிந்து சென்று தமது கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்களின் அடி மட்டத்திலிருந்து உயர் பதவிகள் வரைக்கும் கருத்துக்களைக் கேட்டறிந்து எமக்குரிய நியாயமான தீர்வைத்தான் முன்வைத்து வருகின்றோம்  என்றார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 ஆசனங்களைப் பெறவேண்டிய எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமது மக்களில் ஒருசிலர் அற்ப சொற்ப சலுகைகளைப் பெற்று ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு வாக்களித்திருந்தமையினால் நாம் 3 நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத்தான் பெறவேண்டிய நிலமை ஏற்பட்டிருந்தது.

அனைத்து தமிழ் மக்களும் தமிழ் தேசியத்தின்பால் அணிதிரண்டு வடக்கு, கிழக்கு இணைந்த சுய நிருணய ஆட்சியைப் பெற்றெடுக்க ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X