2025 மே 08, வியாழக்கிழமை

'மாகாண சபையின் அரசியல் அதிகாரத்தை குறைக்க சிலர் முயல்கின்றனர்'

Thipaan   / 2015 டிசெம்பர் 12 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ்

மாகாண சபையின் அரசியல் அதிகாரத்தைப் குறைப்பதற்காக சில அரசியல் வாதிகள் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார்கள் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் கூறினார்.

மட்டக்களப்பு, ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவில் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள 80 குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்துக்கான உதவிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு சனிக்கிழமையன்று ஏறாவூர் அல்ஜுப்ரியா வித்தியாலயத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முதலமைச்சரின் 36 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 40 தையல் இயந்திரங்கள், 12 துவிச்சக்கர வண்டிகள், கூரைத் தகடுகள், மின்சார இணைப்புக்கான உதவிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு அலுவலக உபகரணங்கள் என்பன பகிர்ந்தளிக்கப்பட்டன.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் மேலும் கூறியதாவது,

வரிசைகளில் நின்று நிவாரணங்களையோ, மானியங்களையோ பெறுவதற்கு வறிய மக்கள் இல்லை என்ற நிலை இந்த நாட்டில் உருவாக வேண்டும்.

இந்த நல்லாட்சியில் வறுமையை ஒழிப்பதற்கான பிரயத் தனங்களில் நாம் தேடித் தேடி உதவி வருகின்றோம். ஆயினும் இந்த உதவிகளைப் பெற்றுக் கொள்பவர்கள் அவற்றைத் துஷ் பிரயோகம் செய்து விடக் கூடாது.

வாழ்வாதாரத்தை தேடிக் கொண்டு அவர்கள் பொருளாதாரத்தில் முன்னேறி வறுமையற்றவர்களாக வாழ வேண்டும். மேலும், இந்த நல்லாட்சியில் சில புல்லுருவி அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இந்த நல்லாட்சியைக் குழப்பியடிப்பதற்கு முயற்சிக்கின்றார்கள். அவர்களை நாம் இனங்கண்டு ஜனாதிபதிக்கும் பிரதம மந்திரிக்கும் தெரியப்படுத்தியிருக்கின்றோம்.

அதற்காகவே முதலமைச்சர்களாகிய நாங்கள் ஒரு சந்திப்பை நடத்தி இந்த நல்லாட்சிக்கு எமது ஆதரவையும் மாகாண சபைகளுக்கு மேலும் அதிகாரங்களையும் வழங்க வேண்டும் என்ற பிரகடனத்தை ஏற்படுத்தியிருக்கின்றோம் . இந்த விடயத்தில் ஜனாதிபதியும் பிரதம மந்திரியும் மிகத் தெளிவாக இருக்கின்றார்கள்.

நாங்கள் மாகாண சபைகளுக்கு முழு அதிகாரங்களையும் பெறும் வரையில் ஓய மாட்டோம். என்றார்.

 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X