Suganthini Ratnam / 2016 நவம்பர் 13 , மு.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா
கிழக்கு மாகாணத்திலுள்ள முன்பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான மாதாந்தச் சம்பளத்தை 10 ஆயிரம்; ரூபாயாக அதிகரிப்பதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
காத்தான்குடி அமானா கிட்ஸ் முன்பள்ளியின் வருடாந்தக் கலை நிகழ்வு, காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில்; இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'கிழக்கு மாகாணத்திலுள்ள முன்பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு மாதாந்தச் சம்பளம் வழங்குவது என்பது பாரியா சவாலாக மாகாணசபைக்கு காணப்பட்டது.
நாங்கள் கிழக்கு மாகாணசபை ஆட்சியை பொறுப்பேற்ற பின்னர் இது தொடர்பான பல்வேறு கலந்துரையாடல்களை நடத்தியதுடன், தங்களின் பிரச்சினை தொடர்பில் முன்பள்ளிகளின் ஆசிரியர்களும் எனக்குத் தெரியப்படுத்தினர்.
இந்நிலையில், இவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபாய் வழங்கமுடியுமா என்று ஆராய்ந்தாலும், பின்னர் மாகாணசபையின் நிதியைக் கொண்டு இவர்களுக்கு மாதாந்தம் 3,000 ரூபாயை ஊக்குவிப்புக் கொடுப்பனவாக வழங்குவது என்று மாகாணசபை கடந்த வருட வரவு -செலவுத்திட்டத்தில் தீர்மானித்து அதனை இந்த வருடம் நடைமுறைப்படுத்தியுள்ளோம்.
இவர்களின் இந்தக் கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் என்பதுடன், இதற்காக நடவடிக்கை நாங்கள் எடுப்போம்.
மேலும், முன்பள்ளிகளை சரியான முறையில் ஒழுங்குபடுத்தப்பட வேண்டிய தேவை இருக்கின்றது. முதலாவதாக சரியான ஒழுங்குபடுத்தப்பட்ட முறையான பாடத்திட்டம் முன்பள்ளிகளுக்கு அவசியமாகும்.
முன்பள்ளிச் சிறார்களுக்கான பாடத்துறையில் பயிற்றப்பட்ட ஆசிரியர்கள்; அவசியமாகும் என்பதுடன், இந்த ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட வேண்டும்.
முன்பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்கச் செய்ய வேண்டிய தேவை இருப்பதுடன், முன்பள்ளிகளுக்கு வளங்களை அதிகரிக்கச் செய்ய வேண்டியும் உள்ளது. எதிர்காலத்தில் முன்பள்ளிகளுக்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
இம்முறை சமர்ப்பிக்கப்பட்ட வரவு -செலவுத் திட்டத்தில் கிழக்கு மாகாணத்துக்கு மத்தி அரசாங்கமானது அபிவிருத்திக்காக பாரிய நிதி ஒதுக்கீட்டைச் செய்துள்ளது.
கடந்த காலத்தில் கேள்விகேட்காத மந்தைகள் ஆட்சியில் இருந்ததன் காரணமாக இன்று கிழக்கு மாகாணத்தில் பல்வேறு பிரச்சினைகள் இருந்துவருகின்றது.எங்களுக்கு அநீயாயங்கள் நடக்கும்போது அதனை தட்டிக்கேட்காமல் ஒருபோதும் இருக்கப்போவதில்லை
இன்று இலங்கைக்கு முன்னுதாரணமான ஆட்சியை கிழக்கு மாகாணசபை மேற்கொண்டுவருகின்றது. அனைத்து கட்சிகளும் இணைந்து ஆட்சிய செய்யமுடியும் என்ற யதார்த்ததை இந்த நாட்டுக்கு உணர்த்தியுள்ளோம்.
திறந்த மனதுடனும் எந்தவித நயவஞ்சகமும் இல்லாமல் மேற்கொள்ளும் ஆட்சி காரணமாக இந்த நல்லாட்சியை நாங்கள் செய்துகொண்டு செல்கின்றோம். அதன் காரணமாக இன்று நாங்கள் பாரிய அபிவிருத்திகளை மேற்கொண்டுவருகின்றோம்.
இந்த ஆண்டு கல்விக்காக மட்டும் 7500மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடுசெய்துள்ளோம். அனைத்து பாடசாலைகளின் தேவைகளையும் பூர்த்திசெய்யும் வகையில் நிதியொதுக்கீடுகள் வழங்கப்படுகின்றன. நல்லாட்சி காரணமாக கிழக்கு மாகாணத்தில் ஒரு முன்னுதாரணமான ஆட்சியை நடாத்திவருகின்றோம்.
காத்தான்குடி பகுதியில் 1350மில்லியன் ரூபா செலவில் கழிவு நீர் அகற்றல் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.எதிர்வரும் பெப்ரவரி மாதத்திற்குள் அந்த திட்டம் முடித்துவைக்கப்படும்.அத்துடன் காத்தான்குடி பகுதியில் நீண்டகாலமாகவுள்ள குப்பை அகற்றும் பிரச்சினைக்கு கொடுவாமடுவில் அமைக்கப்பட்டுள்ள திண்மக்கழிவு நிலையம் மூலம் தீர்வுகாணப்பட்டுள்ளது.ஜனவரி மாதத்திற்குள் அனைத்து குப்பைகளையும் காத்தான்குடியில் இருந்து அகற்றுவதற்கான நடவடிக்கையினை எடுத்துள்ளோம்.
பல்வேறு விடயங்கள் காரணமாக கிழக்கு மாகாணம் பலத்த சவாலை எதிர்நோக்கிவருகின்றது.வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகின்றது. மாகாணம் பின்நோக்கிய மாகாணமாகவுள்ளது.
இன்று போதைப்பொருள் பாவனையினால் அதிகளவு பாதிக்கப்படும் பிரதேசங்களாக முஸ்லிம் பிரதேசங்களே உள்ளது.அவற்றினை தடுத்துநிறுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொள்ளவேண்டும்.எந்த தயவும் காட்டாமல் நடவடிக்கையெடுக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரைகளை வழங்கியுள்ளோம்.
இவ்வாறான பல சவால்களை இன்று கிழக்கு மாகாணம் எதிர்நோக்கிக்கொண்டுள்ள நிலையில் இவற்றினை எதிர்கொள்ளும் வகையில் பாரிய திட்டங்களை அரசாங்கத்திடம் பெற்றுள்ளோம்.அந்த வெற்றியே வரவுசெலவு திட்டம் மூலம் பாரிய ஒதுக்கீடுகள் கிழக்கு மாகாணத்திற்கு கிடைத்துள்ளன.கிழக்கு மாகாணம் உட்பட மூன்று மாவட்டங்களுக்கு அரசாங்கத்தினால் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.உலக நாடுகளில் நாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாகவே அரசாங்கம் இந்த வரிவிலக்கை எங்களுக்கு அளித்துள்ளது"என்றார்.
4 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
21 Dec 2025