Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
ஊவா மாகாணத்திலிருந்து 1983ஆம் ஆண்டு ஜுலைக் கலவரத்தின்போது அடித்துவிரட்டப்பட்டு சகலதையும் இழந்து பாதிக்கப்பட்டு அகதிகளாக வந்து, மட்டக்களப்பு -பதுளை வீதிப் பகுதியை அண்டி கடந்த 33 வருடங்களாக வாழ்ந்துவருகின்ற தமக்கு வசிப்பதற்காக இன்னும் ஒரு வீடு கூடத் கட்டித் தரப்படவில்லையென ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மரப்பாலம் கிராமத்தில் வசிக்கின்ற இராமசுந்தரம் மகேஸ்வரி என்பவர் தெரிவித்தார்.
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு பொதுமக்களிடம் கருத்தறியும் அமர்வு, வாழைச்சேனை பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது, 1983ஆம் ஆண்டு ஜுலைக் கலவரத்தில் இடம்பெயர்ந்து மட்டக்களப்பு –பதுளை வீதிப் பகுதியை அண்டி வசிக்கும் ஊவா பெருந்தோட்டப்பகுதி மக்கள், செயலணிக்குழுவின் முன்னிலையில் தங்களின் குறைபாடுகளை முன்வைத்தனர்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'ஊவா மாகாணத்தின் பரணகம, வெலிமடப் பகுதியில் நாங்கள் சுமுகமாக வாழ்ந்துகொண்டிருந்தபோதே 1983 ஜுலைக் கலவரம்; ஏற்பட்டது.
நாங்கள் லயன் காம்பராக்களில் வாழவில்லை. எங்களுக்கு 05 ஏக்கரில் சொந்தமாக காணிகள் இருந்தன. நாம் விரட்டியடிக்கப்பட்டபோது எமது காணி, வீடு, ஏனைய சொத்து அத்தனையையும் அங்கிருந்த மிகவும் நம்பிக்கைக்குரியவர் என்று நம்பி ஒரு பௌத்த பிக்குவிடம் நாங்கள் ஒப்படைத்துவிட்டு வந்தோம். ஆனால், பின்னர் எமது அத்தனை சொத்துகளும் குறித்த பௌத்த பிக்குவால் அபகரிக்கப்பட்டதுடன், நிலைமை சுமுகமாகியதும் அங்கு நாம் திரும்பிச்செல்ல முற்பட்டபோது எமக்கு புலி என்று முத்திரையும் குத்தப்பட்டது' என்றார்.
'எங்களுக்கு அங்கு இழப்பீடும் கிடைக்கவில்லை. இங்கு புனர்வாழ்வும் கிடைக்கவில்லை.' எனவும் அவர் மேலும் கூறினார்.
மட்டக்களப்பு பதுளை வீதிப் பகுதியில் வாழ்ந்துவருகின்ற மலையக மக்கள், தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றியும் தங்களின் எதிர்பார்ப்புகளையும் மகஜராக நல்லிணக்கப் பொறிமுறைக்கான அமர்வின்போது கையளித்தனர்.
அம்மகஜரில், 'கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்துவருகின்ற மலையகத் தமிழர்களாகிய நாம், ஏனைய சமூகங்களுடன் ஒன்றிணைந்து சம உரிமையை அனுபவிக்கும் சமூகமாக வாழ விரும்புகின்றோம். நல்லிணக்கத்துக்கான முயற்சிகளின்போது, நாம் முகங்கொடுத்துவரும் ஒதுக்குதலை நீக்குவதற்கு ஆவன செய்யுமாறு வேண்டுகின்றோம்.
ஏறாவூர்பற்று பிரதேச செயலகப் பிரிவில்; பதுளை வீதியை அண்டியுள்ள கிராமங்களில் கூடுதலாக மலையகத்தவர்கள் வாழ்ந்துவருகின்றனர். ஏனைய கிராம மக்களுடன் ஒப்பிடுகையில் கல்வி, வேலைவாய்ப்பு, சமூக, பொருளாதார, கலாசார, உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளின்போது நாம் புறக்கணிக்கப்பட்டுள்ளோம். எனவே, நல்லிணக்க முயற்சியின்போது, எமது சமூகம் சமவுரிமையைப் பெற்று சுபீட்சமாக வாழ வழிவகை செய்ய வேண்டும்.
1958ஆம் ஆண்டு காலம் முதல் தொடர்ச்சியாக இடம்பெற்ற இனக்கலவரங்களால் பெரும் இழப்புகளுக்கு முகங்கொடுத்து மலையக மக்கள் இம்மாவட்டத்துக்கு இடம்பெயர்ந்து கிராமங்களில் குடியமர்ந்து யுத்த காலத்தில் உயிர், உடைமை இழப்புகளையும் சந்தித்துள்ளனர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago