2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

'வெற்றிடங்களின் தேவைக்கேற்ப பொருத்தமான கல்வித்தகைமை கொண்ட பட்டதாரிகள் குறைவு'

Suganthini Ratnam   / 2017 மார்ச் 15 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
கிழக்கு மாகாணக் கல்விப் புலத்தில் காணப்படும் வெற்றிடங்களின் தேவைக்கேற்ப  பொருத்தமான கல்வித் தகைமை கொண்ட பட்டதாரிகள் குறைவாக உள்ளார்கள் என்பதை  அனைவரும் உணர வேண்டும் என மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
 
வாகனேரி கோகுலம் வித்தியாலயத்தின்  வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு  செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
 
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'இம்மாகாணத்தில் கணிதம், விஞ்ஞானம் ஆங்கிலம் ஆகிய  பாடங்களுக்கு 1,165  ஆசிரியர்களுக்குத் தேவைப்பாடு உள்ளது.  இந்தப் பாடங்களுக்கு ஆசிரியர்கள் தேவையாக  உள்ள நிலையில், பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுத்து, பரீட்சை வைத்தோம். இப்பரீட்சையில் 175 பேர் மாத்திரமே சித்தி பெற்றார்கள். வெட்டுப் புள்ளிகளை குறைத்தால், இன்னும் 170 பேர் மாத்திரமே தேறுவார்கள். இதற்கு மேல் எவரும் சித்தி பெறவில்லை.   
 
பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்க வேண்டும். ஆனால்,  இவர்களுக்குப் பாடசாலைகளில் எவ்வகையான வேலைவாய்ப்பை வழங்குவது என்ற கேள்வி உள்ளது.

கணிதம், விஞ்ஞானம்,  ஆங்கிலம் ஆகிய  பாடங்களைக் கற்பிப்பதற்குப் பட்டதாரிகள் தயாரெனின், 1,165 பேருக்கு வேலைவாய்ப்பு  வழங்க கல்வி அமைச்சு தயாராக உள்ளது' என்றார்.  
 
'மேலும் தமிழ், வரலாறு, தகவல் தொழில்நுட்பம் ஆகிய  பாடங்களுக்கு 335 ஆசிரியர்களை நியமிப்பதற்கு கிழக்கு மாகாண சபை தயாராக உள்ளது. இந்தப் பாடங்களுக்கு  ஆசிரியர்களைத் தெரிவுசெய்வதற்காகப் பட்டதாரிகளுக்குப் பரீட்சை வைத்தோம். இதில்  

வரலாற்றுப் பாடத்துக்கு விண்ணப்பித்த பட்டதாரிகளில் 105 பேர் சித்தி பெற்றுள்ளார்கள். இவர்களுக்கு மிக விரைவில் நியமனங்களை வழங்குவோம்.
 
நிலைமை இவ்வாறிருக்க, கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு சரியாகச் செயற்படவில்லை என்று எமது உறுப்பினர்கள் கூறுகின்றார்கள்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .