2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வெள்ளம், வரட்சிப் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 24 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தை அச்சுறுத்தும் வெள்ளம் மற்றும் வரட்சிப் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் பாரிய திட்டங்கள் தயாரிக்கப்பட்ட நிலையில், அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான  அனுமதி கிடைத்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாவது நவீன மயப்படுத்தப்பட்ட அரசி ஆலை, கிரான்குளம் பிரதேசத்தில் புதன்கிழமை (23) திறந்து வைக்கப்பட்டது. இத்திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

220 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த அரிசி ஆலையானது, நாள் ஒன்றுக்கு 02 தடவைகளாக 36,000 கிலோகிராம் நெல் குத்தும்  இயந்திரத் தொகுதியைத் கொண்டமைந்துள்ளது.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது,'உறுகாமம், கித்துள் குளங்களை இணைப்பதற்கான வேலைத்திட்டம் அடுத்த வருடத்தின் ஒக்டோபர் மாதம்; ஆரம்பிக்கப்படவுள்ளது. அதற்கான ஆய்வுவேலை எதிர்வரும் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் வெள்ளம், குடிநீர்ப் பிரச்சினைகள், விவசாயிகளின் நீர்ப் பிரச்சினை உள்ளிட்டவை தீர்க்கப்படும்' என்றார்.

'மேலும், மட்டக்களப்பு நகரில் காணப்படும் குடிநீர், கழிவு அகற்றுதல் உள்ளிட்ட பிரச்சினைகள் அடங்கிய நகர அபிவிருத்தித்திட்ட அறிக்கையை உலக வங்கியிடம் கையளித்துள்ளோம். இதன் மூலம் 60க்கும் மேற்பட்ட திட்டங்கள் இந்த நகரமயமாக்கலுக்காக  உள்வாங்கப்படவுள்ளன.

மாவட்டத்தில் ஏற்படும் வரட்சியைப் போக்கும் வகையில் குடிநீர் விநியோகத் திட்டத்துக்காக  1,700 மில்லியன் ரூபாய்க்கான செயற்றிட்டத்தை நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சிடம் கையளித்துள்ளோம். மிக விரைவில் அதற்கான நிதி வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சினைகளுக்கு 07 வருடங்களில் தீர்வு காணப்படவுள்ளது' எனவும் அவர் கூறினார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X