2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

'வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கு தனி அமைச்சு இல்லை'

Suganthini Ratnam   / 2017 மார்ச் 13 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், வா.கிருஸ்ணா, நல்லதம்பி நித்தியானந்தன்  

மேல் மாகாணத்தின் அபிவிருத்திக்காக  தனி அமைச்சு உள்ளது. அதுபோன்று, வடமேல் மாகாணத்தின் அபிவிருத்திக்கும் அமைச்சு உள்ளது. ஆனால், யுத்தம் காரணமாகப் பல்வேறு இழப்புகளையும்; நேரடியாகச் சந்தித்த வடக்கு, கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்வதற்காக  ஒரு தனி அமைச்சு உருவாக்கப்படவில்லை எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

இது பாராபட்சமான நடவடிக்கை எனவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு விடியல் சமூக மேம்பாட்டுக்கான மன்றத்தின் ஏற்பாட்டில்  சர்வதேச மகளிர் தின நிகழ்வு, ஏறாவூர் மாஞ்சோலை மணி மண்டபத்தில் ஞாயிறு (12) மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'மூன்று தசாப்தகால யுத்தம் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உயிர், உடைமை இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், வடமாகாணத்தில் 53,241 கைம்பெண்களும் கிழக்கு மாகாணத்தில் 63,209 கைம்பெண்களும் உள்ளார்கள். இவர்கள் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் என்ற பட்டியலுக்குள் உள்ளடக்கப்படுகின்றார்கள். மட்டக்களப்பில் அதிகளவான கைம்பெண்கள் உள்ளதுடன், இங்கு இளம் கைம்பெண்கள் 30 வயதுக்கு உட்பட்ட 50 சதவீதமானோர் உள்ளார்கள்.  

மேலும், முன்னாள் போராளிகளான புனர்வாழ்வு பெற்ற பெண்களின் நிலைமையும் மிகவும் கவலைக்குரியது.  விடுதலை செய்யப்பட்ட 11 ஆயிரத்து 900 பேரில் 3,200 பெண் போராளிகள் உள்ளார்கள்.

புனர்வாழ்வு பெற்று விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் சம்பந்தமாக அண்மைக்காலமாக பேசப்பட்ட விஷ ஊசி விவகாரத்துக்குப் பின்னர் பெண் போராளிகளின் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.

விஷ ஊசி விவகாரத்தால் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் பெண் போராளிகள் தங்களுடைய வாழ்க்கையை இழந்து தவிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. விஷ ஊசி விவகாரத்தின் பின்னர் திருமணம் பேசப்பட்ட பெண்களுக்குத் திருமணம் தடைப்பட்டதையும்; அறிய முடிகின்றது.

யுத்தம் காரணமாக அங்கவீனமான சுமார் 40 ஆயிரம் பேர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ளார்கள்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களில் அங்கவீனமானோரின்; எண்ணிக்கை கூடுதலாக உள்ளது. அவர்கள் வேலைவாய்ப்பை   பெற முடியாதுள்ளதுடன்,  அவர்களுக்கென விசேட திட்டங்கள் எதுவுமில்லை.

இவ்வாறிருக்க அநாதைப் பிள்ளைகளின் பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், அரசியல் கைதிகள், இடம்பெயர்ந்தவர்களின் நிலைமை ஆகியவையும் காணப்படுகின்றன' என்றார்.  

'இந்த நல்லாட்சியில் மக்கள் தங்களுக்கான நலன்களை போராடிப்; பெற வேண்டிய நிலைமைக்குத்; தள்ளப்பட்டுள்ளார்கள்.
வெறுமனே வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் பேசுவதாலோ, ஊடகங்களுக்கு அறிக்கை விடுவதாலோ நல்லிணக்கம் ஏற்படப் போவதில்லை.

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கென தனியான புனர்வாழ்வுத் திணைக்களமோ, அபிவிருத்திக்கென ஓர் அமைச்சோ உருவாக்கப்பட வேண்டும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .