2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

1,000 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்

Super User   / 2013 நவம்பர் 06 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டதாரி பயிலுனர்களாக இணைக்கப்பட்டுள்ளவர்களில் 1,000 பேருக்கு இந்த ஆண்டுக்குள் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசாவிடம் உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

இந்த உறுதிமொழி பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்னவினால் வழங்கப்பட்டுள்ளது. பட்டதாரிகள் பயிலுனர்களின் நிரந்தர நியமனம் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்னவை அவரது அலுவலகத்தில் சந்தித்து நாடாளுமன்ற உறுப்பினர் கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பில் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அபயக்கோன், பட்டதாரிகள் நியமனங்கள் பொறுப்பு அதிகாரி, இணைந்த சேவைகள் பணிப்பாளர் உட்பட அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா,

"மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டதாரி பயிலுனர்களாக இதுவரையில் 1,938 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நிரந்தர நியமனங்கள் இதுவரை வழங்கப்படவில்லை. இது தொடர்பில் பட்டதாரிகள் எனது கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர் என்பதை அமைச்சருக்கு சுட்டிக்காட்டினேன்.

அத்துடன் 276 பேருக்கு நிரந்தர நியமனக்கடிதங்கள் மாவட்ட செயலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு அவை இதுவரையில் வழங்கப்படாமை தொடர்பிலும் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்தேன். இதன்போது பதிலளித்த அமைச்சர், 276பேருக்கான நிரந்தர நியமன கடிதங்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. மேலும் 100 கடிதங்கள் அனுப்புவதற்கான தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த மாத இறுதிக்குள் 400 பேருக்கான நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கப்படும். இந்த வருட இறுதிக்குள் மிகுதி 600 பேருக்குமான நிரந்தர நியமனக் கடிதங்களை வழங்குவதற்கான அனைத்து பணிகளும் இடம்பெற்று வருகின்றன.
இந்த வருடத்துக்குள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 1,000 பட்டதாரி பயிலுனர்களுக்கான நிரந்தர நியமன கடிதங்கள் வழங்கப்படும்.

இலங்கை முழுவதும் உள்ள பயிலுனர் பட்டதாரிகளின் நிரந்தர நியமனங்கள் தொடர்பில் தொடர்ச்சியான பணிகள் இடம்பெற்றுவரும் நிலையிலேயே சில தாமதங்கள் ஏற்படுகின்றன. ஆனால் பட்டதாரி பயிலுனர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட அனைவருக்கும் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும் என தன்னிடம் அமைச்சர் உறுதியளித்தார்"  என நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .