2026 மே 14, வியாழக்கிழமை

dd

'11 மில்லியன் பனை மரங்களில் 2 சதவீதமான மரங்களே பயன்படுத்தப்படுகின்றன'

Kogilavani   / 2013 ஜூலை 03 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்  

'இலங்கையின் வடக்கு கிழக்கு உட்பட நாடெங்கிலுமுள்ள 11 மில்லியன் பனை மரங்களில் 2 சதவீதமான பனைமரங்களே பயன்படுத்தப்படுகின்றன. ஏனையவை வெறுமெனே பயன்படுத்தப்படாதுள்ளன' என இலங்கை பனை அபிவிருத்தி சபையின் தலைவர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் கடந்த செவ்வாய்க்கிழமை (2) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'யாழ். மாவட்டத்தில் 36 இலட்சம் பனை மரங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 27 இலட்சம் பனை மரங்களும் உள்ளன. திருகோணமலை, அம்பாறை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் சுமார் 40  இலட்சம் பனை மரங்களும் உள்ளன' என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, 'பனைசார் உற்பத்திகளின் தாயகமாக கிழக்கு மாகாணமே விளங்குகிறது. இதேவேளை, எதிர்காலத்தில் பனைசார் உணவு உற்பத்தி பொருட்களுக்கும் கிழக்கு மாகாணம் சிறந்து விளங்கும்' என்றார்.

'பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலில் கடந்த மூன்று வருட காலத்தில் 900 பேர் பனம் பொருள் உற்பத்தி பயிற்சி நிலையங்களிலிருந்து பயிற்சியை முடித்து வெளியேறியுள்ளனர்.

கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான காலப் பகுதியிலேயே இவர்கள் இப் பயிற்சியை நிறைவு செய்துள்ளனர்.

இவர்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 360 பேருக்கு சான்றிதழ்களை சபை வழங்கியுள்ளதுடன் 190 பேருக்கு 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தொழில் உபகரணங்களையும் அமைச்சு வழங்கியுள்ளது.

வரலாற்றில் முதல் தடவையாக கிழக்கு மாகாணத்தில் (தாளங்குடா) பனம் கைப்பணி மாதிரி கிராமம் அமைகப்பட்டுள்ளது. இரண்டாவது கிராமம் வடக்கு- சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மாகியப்பிட்டியில் அமைக்கப்படவுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் தும்பு உற்பத்தி, நார் உற்பத்தி, பனைசார் தளபாட உற்பத்தி இவைகளுக்கான பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தேசிய பொருளாதாரமே பனை வளம்தான். பனை சார் உற்பத்திகளுக்கு தென்னிலங்கையில் நல்ல சந்தை வாய்ப்புள்ளது.

உள்நாட்டில் சந்தை வாய்ப்பை அதிகரிக்க நாடெங்கிலுமுள்ள பல்பொருள் அங்காடிகளில் வாய்ப்பைப்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .