
-எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.பாக்கியநாதன்,ரி.எல்.ஜவ்பர்கான்
13ஆவது திருத்தத்தை பாதுகாக்க வேண்டுமென முதன் முதலில் நானே குரல் கொடுத்தேன் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரசாங்க உத்தியோகத்தர்களுக்குரிய வீடு அமைப்பதற்காக உபகார கொடுப்பனவை இன்று சனிக்கிழமை வழங்கி வைக்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே பிரதியமைச்சர் முரளிதரன் மேற் கண்டவாறு கூறினார்.
உலக குடியிருப்பு தினத்தையொட்டி தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் அதன் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய பிரதியமைச்சர் முரளிதரன்,
13ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு குரல் கொடுப்பதற்கு முதல் நானே குரல் கொடுத்தேன். 13ஆவது திருத்ததை பாதுகாக்க வேண்டுமெனும் நிலைப்பாட்டிலேயே நான் இருக்கின்றேன். அதற்கு ஆதரவாகவே நான் பேசினேன்.
தமிழ் மக்களின் உரிமைக்காகவே போராடச் சென்றவன் நான். அதில் எனது சகோதரனையும் இழந்தேன். அதேபோன்று நீங்களும் உங்கள் சகோதரர்களையும் பிள்ளைகளையும் இழந்துள்ளீர்கள்.
இன்று வடிவத்தை மாற்றி நமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும். பொருளாதாரம் மற்றும் கல்வி இவைகள் இரண்டும் முக்கியமானதாகும். இவைகள் இன்று அபிவிருத்தியடைந்து வருகின்றன. இன்று நமக்கு எந்த தடைகளும் கிடையாது. சோதனைச்சாவடிகள் மற்றும் கெடுபிடிகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு விட்டன.
வட மாகாண சபை தேர்தல் சுதந்திரமாக நடைபெற்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திங்கட்கிழமை ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்யவுள்ளார். அதற்காக அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன். ஜனாதிபதி முன்னிலையில் அவர் முதலமைச்சராக சத்தியப்பிரமானம் செய்வது இந்த நாட்டினுடைய அரசியலமைப்பாகும்.
மட்டக்களப்பு மாவட்டம் நினைத்துப்பார்க்க முடியாதளவுக்கு அபிவிருத்தி கண்டு வருகின்றது. கடந்த நான்கு வருடங்களில் 54,000 மில்லியன் ரூபா நிதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்திகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.
வேறெந்த ஒரு மாவட்டத்திற்கும் அபிவிருத்திக்காக அரசாங்கம் செலவு செய்யாத இந்த தொகையை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு செலவு செய்துள்ளது.
இந்த நிதியின் மூலம் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. மட்டக்களப்பு கல்லடிப்பாலம் புதிய பாலம் அமைக்கப்படுமா என்று எல்லோரும் கேள்வி கேட்டனர். ஆனால் இன்று மிக அழகாக இந்த கல்லடிப்பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மட்டக்களப்பு படுவான்கரை எழுவான் கரைக்குமிடையிலான மண்முறைத்துறை பாலமும் அமைப்பட்டு வருகின்றன.
படுவான்கரை மக்கள் மட்டக்களப்புக்கு 10 நிமிடங்களில் இந்த பாலத்தினூடாக செல்லமுடியும். எதிர் காலத்தில் மண்டூர், கிரான் பாலங்களும் அமைக்கப்படவுள்ளன.
இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் 4000 வீடுகள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளில் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒவ்வொரு வீடும் ஐந்தரை இலட்சம் ரூபா பெறுமதியானதாகும். இதில் பட்டிப்பளை பிரதேசத்தில் மாத்திரம் ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
கடந்த 2010ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் 6000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன. இதற்காக ஜனாதிபதியிடம் நான் விடுத்த வேண்டுகோளையடுத்து ஆறாயிரம் இலட்சம் ரூபாவினை வழங்கினார். மட்டக்களப்பு மாவட்ட வரலாற்றில் எந்தவொரு அமைச்சரும் கொண்டு வராத நிதியினை நான் இந்த மாவட்டத்திற்காக கொண்டு வந்துள்ளேன்.