2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

நிபுணர் குழு அறிக்கைக்கு கிழக்கு மாகாண சபை ஐ.தே.க உறுப்பினர் வரவேற்பு

Super User   / 2011 மே 01 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எம்.சுக்ரி)

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கி மூனின் இலங்கை விவகாரம் தொடர்பான அறிக்கை இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வழி செய்துள்ளது அந்த அறிக்கையை ஒரு தமிழ் மகன் என்ற ரீதயிலும் கிழக்கு மாகாண சபையின் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பிரதி என்ற வகையிலும் தான் வரவேற்பதாக கிழக்கு மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் டி.ஏ. மாசிலாமணி தெரிவித்தார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு கல்லடியிலுள்ள அவரது இல்லத்தில் நடாத்திய ஊடவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற் கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீத்தா ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரின் அறிக்கைக்கு எதிராக கருத்து வெளியிட்டிருந்தார்.

அது மட்டக்களப்பு மாநகர சபை மேயரின் தனிப்பட்ட கருத்தாகும். மட்டக்களப்பு மக்களின் ஒட்டு மொத்தக் கருத்தாக அதை நாம் எடுக்கக் கூடாது .

மேயரின் கருத்துக்கெதிராக நான் இந்த செய்தியாளர் சந்திப்பை நடாத்த முடிவெடுத்தேன்.

இலங்கை தமிழ் மக்களுக்கு நீதியும் நியாயமும் இந்த அறிக்கையின் மூலம் கிடைக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் இன்னும் உரத்த குரலில் இதை சொல்ல வேண்டும்.

இன்னுமொரு யுத்தக்குற்றத்தை இலங்கை அரசாங்கம் செய்யாத வகையில் இந்த அறிக்கை வழி கோலவேண்டும்.

இந்த அறிக்கையை வெளியிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் இலங்கை விவகாரத்தில் மென்மையான போக்கையே கடைப்பிடிக்கின்றார்.

அவ்வாறில்லாமல் இந்த அறிக்கை தொடர்பிலும், தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பிலும் கடுமையான போக்கை இலங்கை விவகாரத்தில் பேன் கீ மூன் கடைப்பிடிக்க வேண்டும்.

இலங்கையில் இவ்வாறு தமிழ் மக்கள் பட்ட துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் இந்தியாவும் ஒரு காரணமாகும். இதற்கு பிரதான காரணியான கருணாநிதியை இந்திய தமிழ் மக்கள்தோற்கடிக்க வேண்டும். நான் இதை கூறாமல் இருக்க முடியாது.

இதனால் எனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படலாம் அவற்றை பொருட்படுத்தாமலேயே நான் இதை கூறுகின்றேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மாசிலாமணி மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .