2026 மே 14, வியாழக்கிழமை

dd

நாட்டில் இனப்பிரச்சினை இல்லை என்று கூறுபவர்கள் மறைமுகமாக மதப்பிரச்சனையை ஏற்படுத்துகின்றார்கள் : சீ.ய

Super User   / 2012 பெப்ரவரி 06 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

'பௌத்த மதஸ்தலங்களை ஸ்தாபிப்பதற்கு, பௌத்த கலாசார பீடங்களை ஸ்தாபிப்பதற்கு இலங்கையின் எவ்விடத்திலும் காணியை கொள்வனவு செய்யலாம் என்கின்ற சட்டத்தை கொண்டுவர இருக்கின்றார்கள். இந்த நாட்டில் இனப்பிரச்சனை இல்லை என்று கூறுபவர்கள் மறைமுகமாக மதப்பிரச்சனையை ஏற்படுத்துகின்ற சம்பவத்தை இன்னுமொரு வகையில் கீழே தள்ளுவதற்கு நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்காக எமது வரலாறுகள் உருவாக்கப்பட வேண்டும்' என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவருமான சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு ஸ்ரீ சிந்தாமணிப்பிள்ளையார் ஆலய வரலாறு நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு தலைமையுரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அங்கு உரையாற்றிய அவர்,

'இவ்வாறு வெளியிடப்படும் ஆலயங்களின் வரலாறுகள் மக்கள் மத்தியில் சென்றடைய வேண்டும். அது ஆதாரமாக எங்கள் மத்தியில் இருக்க வேண்டும். அப்போது நாங்கள் பல விடயங்களை வைத்து வாதாடலாம். அழிக்கப்பட்ட ஆலயங்கள் உடைக்கப்பட்டு பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்ட ஆலயங்கள் இவைபற்றி சர்வதேச ரீதியில் இருக்கின்ற அமைப்புகளிடம் கொடுத்திருக்கிறோம் நடவடிக்கை எடுப்போம். எங்களது பூர்வீக பூமியை நாங்கள் காப்பாற்ற வேண்டும்.

இந்த வரலாற்று நூலை வெளியிடுவதற்கு முன்பு ஒரு திகதி குறிப்பிடப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக இந்த வரலாற்று நூலை குறிப்பிட்ட திகதியில் வெளியிடமுடியாத நிலை எங்களுக்கு உருவாகியது. இந்த நாட்டில் நாங்கள் எந்தளவிற்கு சுதந்திரத்தை இழந்திருக்கிறோம் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டாகும். ஆலயத்தின் ஒரு வரலாற்றை வெளியிடுவதற்கு திகதி குறித்து ஏற்பாடு செய்து ஊடகங்களில் அறிவித்த பின் பாதுகாப்புப் படையினரின் செயற்பாடு  காரணமாக அன்றையநாள் மாவீரர் தினம் என்ற ரீதியில் இந்த நூல் வெளியீடு தடை செய்யப்பட்டது.

இது இந்த நாட்டில் இந்துக்களுக்கு விடுக்கப்படுகின்ற ஒரு சவால் என்பதை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். எந்த வகையில் இந்துக்கள் நாங்கள் இங்கு அடக்கப்பட்டிருக்கின்றோம் என்பதையும் வெளியிட வேண்டும். அன்றைய தினம் மாவீரர் தினமாக இருந்தாலும் நாங்கள் மாவீரர் தின நிகழ்வு நடத்தவில்லை. நாங்கள் நடத்தியது ஒரு ஆலயத்தின் வரலாற்று நூலை வெளியிடும் நிகழ்வு ஆகும். ஆனால் நாங்கள் நூல் வெளியிடும் போது தான் தடைகள் அங்கு ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அதே நாளில் ஜனாதிபதி நெடுஞ்சாலை திறந்துவைக்கிறார். இச்சம்பவம் நாங்கள் ஒடுக்கப்படுகிறோம் என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.

எங்களது மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தின்பின் 23 பௌத்த விகாரைகள் படையினர் பகுதியில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. தங்களுக்கு வழிபாட்டுத் தலம் வேண்டும் என்ற ரீதியில் தங்களது பகுதியில் பிரமாண்டமான பௌத்த விகாரைகளை ஸ்தாபித்திருக்கிறார்கள். அவை நாளடைவில் இந்த மண்ணின் பௌத்த விகாரையாக மலரவிருக்கிறது.
ஓட்டமாவடியில் இப்போது சந்தையாக இருக்கின்ற பகுதியில் நீண்ட காலமாக பிள்ளையார் ஆலயம் இருந்தது. அது அரசாங்கத்தில் பதியப்பட்டிருக்கின்றது. பதிவுச்சான்றிதழும் இருக்கின்றது. அந்தக் காணியின் உறுதியும் திகதியும் இக்கின்றது. ஆனால் இன்று அது சந்தையாகியிருக்கிறது. அதுபோல் கல்முனையில்கூட இந்து ஆலயம் மாற்றப்பட்டிருக்கின்றது. இவ்வாறு பலவகையில் நாங்கள் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

இதைப்பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டும். இந்த சிந்தனையின் அடிப்படையில் இன்று சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயம் ஆலய வரலாற்றை நூலாக வெளியிடுகின்றது. ஆலயங்களின் பூர்வீகங்கள் வெளிவருவது அத்தியாவசியமாகும்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .