2026 மே 14, வியாழக்கிழமை

dd

வீடுகளை உடைத்து கொள்ளையிட்ட இருவர் கைது

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 12 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பு  மாவட்டத்தில் பகல் வேளைகளில் வீடுகளை உடைத்து கொள்ளையிட்ட சம்பவங்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இருவரை எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதிபதி கருணாகரன் முன்னிலையில் கைதுசெய்யப்பட்ட இச்சந்தேக நபர்கள் இருவரும் கடந்த 8ஆம் திகதி ஆஜர்படுத்தப்பட்டபோதே, அவர் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.  

மட்டக்களப்பு  மாவட்டத்தில்  அண்மைக்காலமாக பகல் வேளைகளில் வீடுகளை உடைத்து கொள்ளையிட்ட  சம்பவங்கள் இடம்பெற்று வந்தன. பூம்புகார் பகுதியிலுள்ள வீடொன்றில் பகல் வேளையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்யும் முகமாக  பொலிஸார் மோப்பநாயுடன் தேடுதலை மேற்கொண்டனர். இந்த நிலையிலேயே இச்சந்தேக நபர்கள்  இருவரும் கடந்த 7ஆம் திகதி மட்டக்களப்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து தங்கநகைகள், பணம் உட்பட பல்வேறு பொருட்களும் மீட்கப்பட்டன.  

பூம்புகார் வீதியில் சந்தேகத்தின் பேரில் இருவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டபோதே வீட்டு ஜன்னல்களை திறப்பதற்கு பயன்படுத்தப்படும் குறடு, ஸ்கூட்ரைவர் போன்ற உபகரணங்கள் இவர்களிடம் காணப்பட்டதாகவும் இதனைத் தொடர்ந்து இவர்கள் மேலதிக விசாரணைக்குட்படுத்தப்பட்டபோது தாம் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.  மட்டக்களப்பு நகர் பகுதியில் 7 வீடுகளையும் கல்லடிப் பகுதியில்  4 வீடுகளையும்  பகல் வேளைகளில் ஜன்னலை உடைத்துக்கொண்டு சென்று கொள்ளையிட்டதையும்  இச்சந்தேக நபர்கள் ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

மட்டக்களப்பு பொலிஸ் நிலைய தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம்.என்.வி.தசநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய சிறுகுற்றப் புலன்விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ரி.சாந்தகுமார் தலைமையிலான குழுவினர் இத்தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .