Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 15 , மு.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
சட்டவிரோதமாகத் தேர்தல் விளம்பரம் பிரசுரித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டிருந்த 'வார உரைகல்' பத்திரிகையின் பிரதம ஆசிரியர் புவி. எம்.ஐ.றஹ்மதுல்லாஹ் மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியினால் இன்று புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாகத் தேர்தல் விளம்பரம் பிரசுரித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர் கடந்த வருடம் மார்ச் மாதம் 17ஆம் திகதி காத்தான்குடி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
கடந்த வருடம் மார்ச் மாதம் 17ஆம் திகதி நடைபெற்ற காத்தான்குடி நகரசபைத் தேர்தலை முன்னிட்டு கடந்த 15.03.2011 இல் இவரால் வெளியிடப்பட்ட 'வார உரைகல்' பத்திரிகையில் சுயேட்சைக்குழு இல:1க்கான கட்டணம் செலுத்தப்பட்ட தேர்தல் விளம்பரம் ஒன்று பிரசுரிக்கப்பட்டிருந்தது.
அதனை அன்றையதினம் அந்த பத்திரிகையின் பிரதம ஆசிரியரே காத்தான்குடி பிரதான வீதியில் விநியோகித்துக்கொண்டிருந்தபோது அரசியல் பிரமுகர் ஒருவர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி மூலமாக தெரிவித்த முறைப்பாட்டை அடுத்து மேற்படி பிரதம ஆசிரியர் பிரதான வீதியில் வைத்து கைதுசெய்யப்பட்டார். அவரிடமிருந்த 72 பத்திரிகைப் பிரதிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
இவ்வழக்கு கடந்த மாதம் 17ஆம் திகதி விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது முறைப்பாட்டளரான காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மன்றில் சமூகமளித்திருக்கவில்லை. அவரை அடுத்த தவணையின்போது கண்டிப்பாக மன்றில் ஆஜராக வேண்டும் என நீதிபதி கட்டளை பிறப்பித்திருந்தார்.
இன்று புதன்கிழமை காலை மேற்படி வழக்கு நீதிமன்றத்தில் நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் முன்னிலையில் எடுக்கப்பட்டபோது பிரதிவாதியின் சார்பில் சட்டத்தரணி எம்.எம்.உவைஸ் ஆஜரானார். அவர் ;வார உரைகல்' பத்திரிகையின் பிரதம ஆசிரியரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 1,752 பத்திரிகைப் பிரதிகளையும் பொலிஸார் மன்றில் ஆஜர்படுத்தவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியதுடன், குறித்த தினத்தில் இலங்கையில் வெளிவந்த பல தமிழ் சிங்களப் பத்திரிகைகளில் இவ்வாறான தேர்தல் விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டிருந்ததாகவும் கூறினார்.
பொலிஸ் தரப்பில் ஆஜராகியிருந்த பொலஸார், தாங்கள் இவ்வழக்கு தொடர்பாக சட்ட மா அதிபருக்கு அறிக்கை சமர்ப்பித்திருப்பதாகவும் அவரது அறிவுறுத்தலுக்காகக் காத்திருப்பதாகவும் தெரிவித்தனர். எனினும், கடந்த தவணையின்போது நீதிமன்றம் விடுத்திருந்த பணிப்புரைக்கு அமைய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மன்றுக்குச் சமூகமளிக்காததை கவனத்தில் எடுத்த நீதிபதி இவ்வழக்கிலிருந்து பிரதிவாதியான பிரதம ஆசிரியரை விடுவிப்பதாகத் தெரிவித்தார்.
33 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago
4 hours ago