2026 மே 09, சனிக்கிழமை

dd

தொழில்வாய்ப்பு குறித்து தெரிவிக்கப்படாமை கவலையளிக்கிறது: மட்டு. பட்டதாரிகள் சங்கம்

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 16 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

2012 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தில் தொழில்வாய்ப்பு வழங்கப்படுவது தொடர்பில் தெரிவிக்கப்படாதுள்ளமை  தமக்கு கவலையளிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கம், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கையளித்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் அண்மையில் கையளிக்கப்பட்டுள்ள அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
'கடந்த காலங்களில் அரசாங்கத்தால் பட்டதாரிகளுக்கும் இளம் சமுதாயத்திற்கும் வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டு வந்தன.  அதற்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவிக்கின்றோம். இருப்பினும் 2012ஆம் ஆண்டுக்கான வரவு -   செலவுத்திட்டத்தில் எந்தவித தொழில் வாய்ப்புக்கள் பற்றியோ அதற்கான நிதியொதுக்கீடு பற்றியோ தெரிவிக்கப்படவில்லை.
 
அகில இலங்கை ரீதியாக 40,000க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வேலைவாய்ப்பற்றுள்ளனர். அரசாங்கத்தின் இச்செயற்பாடானது, ஒவ்வொரு பட்டதாரிகளுக்கும் உடல், உள ரீதியான  பாதிப்பை உண்டுபண்ணியுள்ளது.

விசேடமாக வடக்கு, கிழக்கு மாகாணம் யுத்தம், சுனாமி, வெள்ளம் போன்றவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இங்குள்ளவர்களுக்கு விசேடமாக தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்படுமென எதிர்பார்க்கப்பட்டபோதிலும், அந்த நிலைமை இல்லை.  அனைத்து பட்டதாரிகளையும் புறக்கணித்த செயலாகவே நாங்கள் கருத வேண்டியுள்ளது. இது கவலையையும் விரக்தியையும் உண்டுபண்ணியுள்ளதென்பதை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்துகிறோம்.

எனவே அரசாங்கம் வேலைவாய்ப்பு வழங்குவதில் விசேட திட்டத்தின் கீழ் தீர்க்கமான தீர்வுத்திட்டத்தைக் கொண்டுவர வேண்டுமென பட்டதாரிகளாகிய அனைவரும் உருக்கமாக வேண்டிக்கொள்கிறோம்' என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் வை.பிரதீபன் மற்றும் செயலாளர் உள்ளிட்டோர் இக்கடிதத்தினை அரச அதிபரிடம் கையளித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .