2026 மே 09, சனிக்கிழமை

dd

சுற்றுலாத்துறையென்றால் பாலியல் சம்பந்தப்பட்டதாகவே கணிசமானவர்களால் பார்க்கப்படுகிறது :- கிழக்கு முதலம

Kogilavani   / 2012 பெப்ரவரி 27 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

 

 

'தமிழர்களைப் பொறுத்தவரையில் சுற்றுலாத்துறையென்றால் பாலியல் சம்பந்தப்பட்டதாகவே கணிசமானவர்களால் பார்க்கப்படுகிறது. அதனை விடுத்து அதில்; உழைத்து வாழக்கூடிய பல விடயங்கள் இருக்கிறது என்பதனை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்' என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு அமிர்தகழி பார் வீதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு படகுச்சேவையினை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் உரையாற்றிய அவர்,

கடந்த நூற்றாண்டுகளில் மேலை நாட்டவர்கள் நமது பிரதேசங்களில் மகிழ்ச்சிகளை அனுபவித்துச் சென்றிருக்கிறார்கள். நாங்கள் இந்த 2012ஆம்ஆண்டிலாவது எங்களது பிரதேசத்தினை பார்க்கவேண்டும், ரசிக்க வேண்டும், அனுபவிக்க வேண்டும் என அனைவரும் விரும்புகின்றோம்.

ஆனால் கடந்தகால போர்ச் சூழல் காரணமாக இது முடியாது போயிருந்தது. தற்போது ஏற்பட்டிருக்கின்ற சூழலைப் பயன்படுத்தி எங்களுடைய சூழலை அழகாக்குதல், பொழுபோக்குகளுக்கேற்றால் போல் பயன்படுத்துதல் போன்ற விடயங்களைச் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். அந்த அடிப்படையில் எங்களது மாகாணத்தில் வளர்ந்துவருகிற ஒரு பிரமாண்டமான வர்த்தகத்துறை இந்தச் சுற்றுலாத்துறை. இந்தத் துறையினை எமது மக்கள் எவ்வாறு கையாளப்போகிறார்கள் என்பதைப் பார்த்துப் பயந்து கொண்டிருக்கிறோம்.

குறிப்பாக இந்த நாட்டில் இனப்பிரச்சினைக்குப் பின்பு சுற்றுலாத்துறைகள் வளர்ந்து வருகிற பொழுது இங்கே வருகிறவர்கள் பெரும்பான்மை இனத்தைச் சேரந்தவர்கள், அவர்கள் மட்டுமே முதலீடுகளைச் செய்கிறார்கள் என்று பல அரசியல் பிரமுகர்கள், குறிப்பாக எதிர்க்கட்சியினர் பல விமர்சனங்களைச் செய்கிறார்கள்.

ஆனால் எங்களது மக்களுக்காக நாம் என்ன திட்டங்களை முன்வைக்கிறோம்  என்று பார்த்தால் ஒன்றுமில்லை. வைக்கல் போரில் நாய் படுத்து குரைப்பது போல செயற்படுகிறோம் என்பது போல எதிர்க்கட்சியின் செயற்பாடுகள் இருந்து வந்தன.

உண்மையிலே இப்போது இருக்கின்ற அரசியல் சூழலை பார்த்தால், கடந்த கால யுத்த சூழல் காணரமாக குறித்த முதலீட்டிலே பங்குதாரர்களாக ஆக முடியாமல் போயிருந்தது. இதனால் பொருளாதார பின்னடைவு, தொழில்நுட்ப ரீதியிலான முன்னேற்றமின்மை போன்ற பல விடயங்களிலே எங்களுடைய மக்கள் பின்னடைந்திருக்கிறார்கள். தற்பொழுதுதான் மட்டக்களப்பில் ஒருசில முயற்சிகள் வளர்ச்சிபெறத் தொடங்கியிருக்கிறது.

ஒரு மனிதனுடைய சிந்தனையிலே மாற்றம் வர வேண்டும். அப்பொழுதுதான் நமது பிரதேசத்தின் பொருளாதார முன்னேற்றம் சார்நந்த விடயங்களிலே நாம் ஈடுபட முடியும். அதனை விடுத்து உணர்வு ரீதியான விடயங்களில் சிந்தனைகளைச் செலுத்தினால் நாம் இன்னமும் கீழ் மட்டத்துக்கே செல்லக்கூடிய சூழல் உருவாகும். ஆகையினால் சுற்றுலாத்துறை வளர்ந்து வருகிற போது அதனைப் பயன்படுத்தி முன்னேற்றங்களைக் கண்டு கொள்ள வேண்டும்.

அடுத்த சில வாரங்களில் 'ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ்' கல்லடி பாலத்தின் அடுத்த பக்கத்தில் கொண்டு வந்து இறக்கப் போகிறது. அவ்வாறான பெரிய முதலீடுகளை உள்ளுரில் இருப்பவர்களால் செய்முடியாது. அதனை பெரிய வர்த்தகர்கள், அரச கம்பனிகள், தென்பகுதிகளிலுள்ள நிறுவனங்கள், அல்லது வெளிநாட்டு நிறுவனங்களாலேயே இது சாத்தியமாகும்.

ஆனால் பாசிக்குடாவில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிற ஹோட்டல்கள் நிறைவு பெற்றால் ஒரு நாளைக:கு 5500 முதல் 6000 கோழிமுட்டைகள் தேவை, சுத்தமான மரக்கறி, சுத்தமான வெங்காயம், கோழி இறைச்சி என பல தேவைப்படும். அதனைப்பற்றி இங்கிருப்பவர்கள் யாராவது சிந்திக்கிறார்களா? அத்தோடு அந்தச்சுற்றுலா விடுதிகளில் வேலை பார்ப்பதற்கான பணியாட்கள் தேவை. இதனைப்பற்றி யாரும் சிந்திப்பதாக இல்லை.

எங்களுடைய தொழில் வளங்களைப் பெருக்கிக் கொள்ளக்கூடிய பல வாய்ப்புகள் இருக்கின்ற போதும், அதற்கும் தென்பகுதிகளிலிருந்துதான் ஆட்கள் வருகிறார்கள். நாங்கள் சுற்றுலா விடுதிகளைக் கட்ட அனுமதித்திருக்கிறோம் என்று பார்த்தாலும், ஏனைய விடயங்களிலிருந்து பயன்களைப் பெற்றுக்கொள்ள உள்ள வாய்ப்புகளையும் பயன்படுத்தாதவர்களாக உள்ளோம் என்பது கவலையானதாகும். அவ்வாறான சிந்தனைகளில் மாற்றம் ஏற்படும் போது இதற்கான சந்தர்ப்பங்கள் இன்னமும் அதிகரிக்கும். அத்துடன் பொருளாதார வளமும் பெருகும் அதுவே எமது எதிர்பார்ப்பாகும்.

இலங்கையைப் பொறுத்தவரையில் சுற்றுலாத்துறை என்பது எதிர்காலத்தில் பாரியதொரு வர்த்தகத்துறையாக மாறும். ஆனால் தமிழர்களைப் பொறுத்தவரையில் சுற்றுலாத்துறையென்றால் பாலியல் சம்பந்தப்பட்டதாகவே கணிசமானவர்களால் பார்க்கப்படுகிறது. அதனை விடுத்து அதில் நாம் உழைத்து வாழக்கூடிய பல விடயங்கள் இருக்கிறது என்பதனை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.
 


  Comments - 0

  • neethan Tuesday, 28 February 2012 01:01 AM

    தமிழ் பண்பாட்டையும் கலாச்சார விழுமியங்களையும் பேணுபவர்கள், கலாச்சார சீரழிவு ஏற்பட்டு பண்பாடு அடிபட்டு போவதை நிச்சயம் விரும்பமாட்டார்கள். துட்டுகள் கிடைக்குமென்பதற்காக கற்பை இழக்க முடியுமா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .