2026 மே 09, சனிக்கிழமை

dd

மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மட்டு. மாவட்ட கடல் தொழிலாளர் சம்மேளனம் கண்டனம்

Super User   / 2012 மார்ச் 04 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)
 
வாழைச்சேனை கடலில் மீன் பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மட்டக்களப்பு மாவட்ட கடல் தொழிலாளர் சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில், மட்டக்களப்பு மாவட்ட கடல் தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் எஸ்.விவேகானந்தன் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பிரிவுக்குட்பட்ட மூன்று மீனவர்கள் கடலில் மீன் ;பிடித்து கொண்டிருக்கையில் திருகோணமலையை  சேரந்த பெரும்பான்மை இன மீனவர்கள் ஏழு பேரால் தாக்கப்பட்டுள்ளனர்.
 
அத்துடன் தாக்கும் வேளை, இவர்கள் மது போதையில் இருந்துள்ளதுடன், ஐஸ் உடைக்கும் பொல்லுகளால் தாக்கி நமது மீனவர்களின் உடமைகளையும் எடுத்து சென்றுள்ளனர் என என்னிடம் முறையிடப்பட்டுள்ளது.
 
ஐ.எம்.யூ.எல் 54 என்ற பதிவிலக்கமுடைய 32அடி கடல் கலனில் வாழைச்சேனையிலிருந்து புறப்பட்டு ஆற்று வாய்க்கு நேராக 68 கிலோ மீற்றர்  தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருக்கையில் இவர்களுக்கு நேரெதிராக வந்த திருமலை மாவட்ட மீனவர்கள் ஏழு பேரும் கடல் கலனினுள் பாய்ந்து தாக்கியுள்ளனர்.
 
இதன் காரணமாக கழுத்து நரம்பு பாதிக்கப்பட்டு மீனவர் நவாஸ் மிகவும் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையிலும், பதுர்டீன் வாழைச்சேனை வைத்தியசாலையிலும் மூன்றாமவர் சிறு காயங்களுடன் வீட்டிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன் போது, கடல் கலனை இயக்கும் கைபிடி, கையடக்க தொலைபேசிகள் இரண்டு, பற்றரீகள், ஜீ.பி.எஸ், நூறு லைன் தூண்டில்கள், 23 கிலோ எடையுடைய சிலின்டர், பெரிய கத்தி, வாளி, வாள் உள்ளிட்ட பொருள்களை களவாடி சென்றுள்ளர்.
 
இது பற்றிய முறைப்பாடுகள் வாழைச்சேனை பொலிஸாரிடமும், கடல் படையினரிடமும், இராணுவத்தினரிடமும் செய்யப்பட்டுள்ள போதும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
 
இது போன்ற தாக்குதல் கடந்த இரண்டு வாரத்துக்கு முன்னரும் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
அண்மையில், வெளி மாவட்ட மீனவர்கள் வாழைச்சேனை துறைமுகத்திற்கு விலை திருப்திப்படாத சந்தர்ப்பத்தில் வெளி வியாபாரிகளுக்கு மீன் விற்பனையில் ஈடுபடக் கூடாது என சம்மேளனத்தினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன் பின்னர் இவ்வாறான விசமிகளின் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இனிவரும் காலங்களில் வெளி மாவட்ட மீனவர்கள் மட்டக்களப்பு மாவட்ட கடல் பரப்பு எல்லைக்குள் மீன்பிடிக்க தடையும் விதிக்கப்படும்.
 
கடந்த 30 வருட காலத்தில் கொடிய யுத்தத்தால் மிகுந்த பாதிப்புக்கள், இழப்புக்களை சந்தித்த எமது மீனவர்கள் தற்சமயமே தமது ஜீவனோபாயத் தொழிலான கடற்தொழில் மூலம் உயர்வடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் வன்மை தன்மையான தாக்குதல்கள் இனக்குரோதத்தை ஏற்படுத்தும் என்பதுடன் அமைதிக்கும் பங்கத்தை ஏற்படுத்தும்".


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .