2026 மே 09, சனிக்கிழமை

dd

ஊழல்கள் இன்றி நிர்வாக கல்விசார் நடவடிக்கைகளை முன்னெடுப்பதே இலக்கு: கிழக்கு பல்கலை உப வேந்தர்

Super User   / 2012 மார்ச் 05 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் எவ்வித ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் இடம்பெறாதவாறு நிதி, நிருவாகம் மற்றும் கல்விசார் நடவடிக்கைகளை எதிர்காலத்தில் முன்னெடுப்பதே தனது இலக்கு என கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உப வேந்தராக பொறுப்பேற்றுள்ள கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா தெரிவித்தார்.

கடந்த ஏழு வருடங்களாக கனடாவிலுள்ள பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணியாற்றிய இவர் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக நியமனம் பெற்றதையடுத்து மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.

பல்கலைக்கழகத்தில் இன்று திங்கட்கிழமை பொறுப்புக்களை ஏற்ற பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

"கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடந்த காலங்களில் நிதி, நிருவாகம் மற்றும் கல்விசார் நடவடிக்கைகளில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக பலராலும் கூறப்படுவது உண்மை தான். எதிர்காலத்தில் அவை இடம்பெறாதாவாறு தனது பணி முன்னெடுக்கப்படும்.
 
கிழக்கு பல்கலைக்கழகத்தில் நான் மாணவனாக கல்வி கற்ற காலத்திலிருந்தே இப்படியான முறைகேடுகள் இடம்பெற்று வருகின்றன. ஊழல் மற்றம் முறைகேடு என்பது எல்லா பல்கலைக்கழகங்களிலும் இடம்பெறுகிறது. கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஊழலை  பெரிதுபடுத்துகிறார்கள். ஆனால் சிறிய ஊழலோ பெரிய ஊழலோ ஊழல் தான்.
 
2004ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் விடுதலை புலிகள் அமைப்பில் ஏற்பட்ட பிளவு காரணமாக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த புத்திஜீவிகள் விடுதலை புலிகளினால் இலக்கு வைக்கப்பட்டனர். இதன் காரணமாக பல கல்விமான்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இப்படியான  நெருக்கடி நிலை காரணமாகவே அப்போது நாட்டை விட்டு நானும் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. எதிர்காலத்தில் இப்படியான நிலை இடம்பெறமாட்டாது என்ற நம்பிக்கை இருப்பதன் காரணமாகவே நாடு திரும்பி இந்த பதவியை பொறுப்பபேற்றுள்ளேன்.

2005ஆம் ஆண்டு உப வேந்தராக பதவி வகித்த கலாநிதி எஸ்.ரவீந்திரநாத் மர்மமான முறையில் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் கவலைக்குரியது. இந்த சம்பவம் துரதிஷ்;டவசமானது. தனிப்பட்ட ரீதியில் அவர் நல்ல மனிதர். பல்கலைக்கழக நடவடிக்கைகளில் அக்கறையுடன் செயல்பட்டவர்" என்றார்.


  Comments - 0

  • mohamed Tuesday, 06 March 2012 07:06 AM

    சமூகத்தை முன்னேற்ற வாழ்த்துக்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .