Suganthini Ratnam / 2012 மார்ச் 09 , மு.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்,ஜிப்ரான்)
இன, மதத்துக்கு அப்பால் சேவையாற்றிய ஒரு பெருந்தகையினை தமிழினம் இழந்துள்ளதாகவும் அவரின் இழப்பு வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் பேசும் சமூகத்துக்கு பேரிழப்பு ஆகும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
அருட்தந்தை கலாநிதி த.சிறிதரன் சில்வெஸ்டர் காலமானமை குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
'அருட்தந்தை கலாநிதி த.சிறிதரன் சில்வெஸ்டரின் மரணச் செய்தி கேட்டு மிகவும் மனம் கலங்கி நிற்கும் உறவுகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து நிற்கின்றது.
வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு சொல்லொன்னாத் துன்பங்களை எல்லாம் அனுபவித்த வேளையில் துணிச்சலுடன் சென்று பணியாற்றிய ஒருவரை இன்று தமிழினம் இழந்துள்ளது. சுனாமியின் அகோரத்தினால் வடக்கு, கிழக்கு சின்னாபின்னமானபோது அவற்றினை கட்டியெழுப்புவதில் இன, மத பேதங்களுக்கு அப்பால் அயராது பாடுபட்டவர் அருட்தந்தை. அது மட்டுமன்றி பல்கலைக்கழகம் உட்பட அனைத்து பொது விடயங்களிலும் தன்னை ஈடுபடுத்தி சமூக சிந்தனையுடன் அளப்பரிய சேவையாற்றிவரும் தன்னலமற்ற ஒரு சமூகவியலாளனாகவே நான் அவரைப்பார்க்கின்றேன். ஒரு கிறிஸ்தவராக அவர் இருந்தபோதிலும் அனைத்து மதங்களையும் மதிக்கும் பண்பும் அவர்களுடன் அவர் கொண்டுள்ள நட்பும் அவரது திறந்த மனதுக்கு எடுத்துக்காட்டாகும்.
கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலை காரணமாக வடக்கு, கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் மக்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்துக்கொண்டிருந்தபோது, அவர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி அவர்களுக்கு அளப்பரிய சேவையாற்றிய ஒரு கொடையாளனை இன்று நாம் இழந்துள்ளோம்.
இற்றைவரையில் வெலிகந்தைப் பகுதியில் சிறைவைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளை சந்தித்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளை தொடர்ந்து மேற்கொண்டுவருவது அவர் தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள பற்றுதியை பறைசாற்றி நிற்கின்றது.
இன்று தமிழினம் பல்வேறு சவால்மிக்க சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ள நிலையில் அருட்தந்தை கலாநிதி த.சிறிதரன் சில்வெஸ்டரின் இழப்பு தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகவே உள்ளது. இந்நிலையில் அவரின் இழப்பில் துவண்டுபோயுள்ள குடும்பத்தினருக்கு இவ்வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றது' என்றார்.
சமூகங்களிடையே இன நல்லுறவை ஏற்படுத்துவதில் பாடுபட்ட ஒரு பெருமகனை மட்டு. மாவட்டம் இழந்துள்ளது
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலத்தில் ஏற்பட்ட இனமுறுகலின்போது சமூகங்களிடையே இன நல்லுறவை ஏற்படுத்துவதில் அயராது பாடுபட்ட ஒரு பெருமகனை மட்டக்களப்பு மாவட்டம் இழந்துள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
திருமலை - மட்டக்களப்பு மறைமாவட்ட நிதிப்பொறுப்பாளரும் முன்னாள் எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் பணிப்பாளருமான பேராசிரியர் அருட்தந்தை த.சிறிதரன் சில்வெஸ்டரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபப் செய்தியிலேயே இவ்வாறு கூறினார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'மட்டக்களப்பு மாவட்டம் உட்பட வடக்கு, கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் சமயப்பணியுடன் சமூகப்பணியையும் சிறப்பான முறையில் முன்னெடுத்து வந்த ஒரு பெரும் சமூகவியலாளனை இன்று மட்டக்களப்பு மாவட்டம் இழந்துள்ளது. கடந்த காலத்தில் ஏற்பட்ட இனமுறுகலின்போது, இனங்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தி ஒற்றுமையினை ஏற்படுத்துவதற்கு அவர் மேற்கொண்ட பணிகள் என்றும் மகத்தானது. அத்துடன், அவர் நீண்டகாலமாக இன, மத பேதமின்றி ஆற்றிவரும் சமூகப்பணி என்றும் ஏழை மக்களின் இடங்களில் நீங்காத இடத்தினைக்கொண்டுள்ளது.
இந்த நாட்டில் நிரந்தர சமாதானம் நிலவவேண்டி அவர் மேற்கொண்ட அளப்பரிய பணிகள் என்றும் நெஞ்சைவி;ட்டு அகலாதவை. அவரது பணியை மட்டக்களப்பு மாவட்டம் உட்பட தமிழ் பேசும் சமூகம் என்றும் மனதில் கொண்டிருக்கும் என்பது எனது அசையாத நம்பிக்கையாகும். அவரது இழப்பு மட்டக்களப்பு மாவட்டத்துக்கு பேரிழப்பு என்பதுடன் அவரது சேவையை பின்பற்ற இளம் சமூகம் முன்வரவேண்டும். அவரது இழப்பால் துயறுரும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்' என்றார்.
ஊடகவியலாளர்களின் தேவைகளை அறிந்து
உதவியர் அருட்தந்தை சிறிதரன் சில்வெஸ்டர்
மறைந்த மனிதநேய பணியாளர் பேராசிரியர் அருட்தந்தை சிறிதரன் சில்வெஸ்டர் பிராந்திய ஊடகவியலாளர்களுடன் மிக நெருக்கமான உறவுகளை வைத்திருந்தவர் மாத்திரமன்றி ஊடகவியலாளர்களின் தேவைகளை கண்டறிந்து
பல்வேறு உதவிகளையும் தொடர்ச்சியாக செய்துவந்தவர். அவரது இழப்பு கிழக்கின் ஊடக குடும்பத்திற்கு பாரிய இழப்பாகும் என மட்டக்களப்பு மாவட்ட உழைக்கும் ஊடகவியலாளர்கள் அமைப்பு, மட்டக்களப்பு மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் மற்றும் கிழக்குமண் ஊடக உலகம் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளன.
சுனாமி அனர்த்தத்தின்போதும் கடந்த பெரு வெள்ளத்தின்போதும் பல ஊடகவியலாளர்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அந்த வேளைகளில் யாருமே அவர்களைக் கண்டுகொள்ளாத நிலையில் அருட்தந்தை ஊடகவியாளர்களை அழைத்து அவர்களின் பலதரப்பட்ட தேவைகளை நிறைவு செய்தார். அவரது இழப்பு ஈடுசெய்யமுடியாது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .