2026 மே 06, புதன்கிழமை

மட்டக்களப்பில் குடிசைக் கைத்தொழில் கண்காட்சி

Suganthini Ratnam   / 2012 மார்ச் 13 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

திவிநெகும திட்டத்தின் கீழ் குடிசைக் கைத்தொழிலை  ஊக்குவிக்கும் முகமாக மாபெரும் கண்காட்சி எதிர்வரும் மார்ச்  மாதம் 31ஆம் திகதியும்  ஏப்ரல் மாதம் முதலாம் திகதியும் மட்டக்களப்பு மாவட்டத்தில்; நடைபெறவுள்ளது.

தேசிய நிகழ்வாக மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் கிராமிய ரீதியில் குடிசைக் கைத்தொழிலை மேம்படுத்தும் வகையில் அக்கைத்தொழிலை மேற்கொள்பவர்கள், அதனை மேற்கொள்ளவுள்ளவர்கள், அது தொடர்பில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படுமென மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம்  தெரிவித்தார்.  

நிதி நிறுவனங்கள், தொழில்பயிற்சி, இயந்திர சாதன மற்றும் கைத்தொழில் ஆகியவற்றின் நிறுவனங்கள் உட்பட சுமார் 23 நிறுவனங்கள் தமது காட்சிக்கூடங்களை அமைக்கவுள்ளன. இக்கண்காட்சி மூலம் தலா ஒரு பிரதேச செயலகத்திலிருந்து சுமார் 500 பேர் பயனடையும் வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

5 அமைச்சுக்கள் இணைந்து இக்கண்காட்சியை நடத்தவுள்ளதாகவும் இக்கண்காட்சி மூலம் குடிசைக் கைத்தொழிலாளர்கள் மற்றும் சிறுகைத்தொழிலாளர்கள் பாரிய நன்மையடைய முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

இக்கண்காட்சியின்போது குடிசைக் கைத்தொழிலை மேற்கொள்பவர்களுக்கு தேவையான நவீன இயந்திரங்கள் அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளதுடன், அவற்றுக்கான பயிற்சி பெறும் வழிகள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்படும்.  அத்துடன்,  சிறியளவில் குடிசைக் கைத்தொழிலை மேற்கொள்பவர்களுக்கு 10,000 ரூபா பெறுமதியான  இயந்திரம் அல்லது பணம் வழங்கி வைக்கப்படும்.  பாரியளவில் குடிசைக் கைத்தொழிலை மேற்கொள்ளவுள்ளவர்களுக்கு  நிதியினை பெறுவதற்கான நிதி நிறுவனங்களை ஒருங்கிணைந்து வழங்கும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .