2026 மே 06, புதன்கிழமை

மகாத்மா காந்தி சிலை உடைப்பு குறித்து மட்டு. மாநகரசபையில் விசேட கூட்டம்

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 09 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டக்களப்பு நகரில் கடந்த வெள்ளிக்கிழமை மகாத்மா காந்தியின் உருவச்சிலை உட்பட நான்கு பெரியார்களின் உருவச்சிலைகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆராயும் விஷேட உயர்மட்ட கூட்டம் ஒன்று மட்டக்களப்பு மாநகர சபையின் நகர மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது. இதன்போது இந்த சிலை உடைப்பு விவகாரம் தொடர்பாக பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டதுடன் கருத்துப் பறிமாறல்களும் இடம்பெற்றன.

இந்த சிலை உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக உரியவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமெனவும் இதற்காக பொலிஸார் துரித விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் உடைக்கப்பட்ட சிலைகள் அனைத்தையும் புனரமைப்புச் செய்வதுடன் மீண்டும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் பாதுகாப்புத் துறையினர் பார்த்துக்கொள்ள வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த சிலை உடைப்பு விவகாரம் தொடர்பாக பொலிஸார் மற்றும் இரகசியப் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வருவதாகவும் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய பொலிஸார் துரித விசாரணை நடத்தி வருவதாகவும் இது தொடர்பில் எங்களுக்கு சில தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் உடைக்கப்பட்ட சிலையை புனரமைக்குமாறு முதலமைச்சரும் மாநகர மேயருமே எங்களிடம் வேண்டுகோள் விட்டார்கள். அவர்களின் வேண்டுகோளை ஏற்று பொலிஸாரே இதை புனரமைப்பு செய்கின்றனர் என இக் கூட்டத்தில் கலந்துகொண்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரட்ன தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா மற்றும் பி.அரியநேந்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பி.பிரசாந்தன், எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, இரா.துரைரட்னம், எம்.மாசிலாமணி, ஏ.சசிமரன், மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மாநகர ஆணையாளர் கே.சிவநாதன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.கிறிதரன், உதவி பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரத்ன உட்பட மாநகர சபை உறுப்பினர்கள் காந்திசேவா சங்கத்தின் பிரதி நிதிகள், சாரணிய இயக்கத்தின் உறுப்பினர்கள், கல்வி அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .