2026 மே 07, வியாழக்கிழமை

குற்றச்செயல்களிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க களுவாஞ்சிக்குடியில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 09 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜவீந்திரா)

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களில் இருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்களை அப்பிரதேச பொலிஸாரால் இன்று விநியோகிக்கப்பட்டுள்ளன.

'றோஸ் சரிட்டீஸ் சிறிலங்கா' எனும் அரச சார்பற்ற நிறுவனத்தின் அனுசரணையுடன் களுவாஞ்சிக்குடி பொலிஸாரால் இந்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அப்பிரசுரத்தில் தெரிவிப்பப்பட்டுள்ளதாவது,

'நீங்கள் வீட்டில் இல்லாத நேரமும் உங்களது கடைகள், வியாபாரத் தளங்கள் என்பன  பூட்டப்பட்டிருக்கும் வேளையிலும் நீங்கள் தனியாக வீட்டிலிருக்கும் வேளையிலும் வயோதிபர்கள் வீட்டிலிருக்கும் போதும், நீங்கள் பயணம் செய்யும் வேளையிலும்,
கொள்ளையர்கள் வந்து உங்களது பணம், நகை, பெறுமதிமிக்க பொருட்களை கொள்ளையடித்துச் செல்வது பற்றி நீங்கள் அறிந்துள்ளீர்களா?

இச்சம்பவங்கள் சம்மந்தமாக பல முறைப்பாடுகள் எங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.  எனவே இப்படியான பிரச்சினைகளைத் தவிர்த்துக் கொள்வது பற்றிய வழிகள் பற்றி அறிந்துள்ளீர்களா?

இவ்விடயங்கள் சம்பந்தமாக பொலிஸார் விடுக்கும் விழிப்புணர்வு

உங்கள் வீடுகளுக்கு வரும் அப்பாவி பிச்சைக்காரர்கள், நடமாடும் வியாபாரிகள், போன்று போலியானவர்கள் அல்லது போலி வேடம் தரித்து உங்கள் வீட்டுக்கு வந்து உங்கள் தகவல்களைத் திரட்டுவதாக வரும் நபர்கள் தொடர்பாக அவதானமாக இருங்கள்.

அப்படிப்பட்டவர்கள் சம்பந்தமாக மிக அவதானமாக இருப்பதுடன் அவர்கள் பற்றி விபரங்களைத் திரட்டவும். உங்களது வீடுகளிலுள்ள பெறுமதிமிக்க பொருட்கள், தங்க ஆபரணங்கள், பணம் என்பனவற்றின் பாதுகாப்பை நீங்களே உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், வீதியால் நடந்து செல்லும் போது சந்தேகத்திற்கிடமாக நடமாடுபவர்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமாக வருபவர்கள் தொடர்பாக மிகவும் அவதானத்துடன் இருங்கள்.

உங்கள் வீடுகளுக்கு அண்மையிலுள்ள அனைத்து நண்பர்கள் உறவினர்கள் போன்ற அனைவருக்கும் இதனைத் தெரியப்படுத்தவும். சந்தேககத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் நடமாடுபவர்களின் மோட்டார் சைக்கிள் இலக்கங்களைக் குறித்துக் கொள்ளவும். நீங்கள் அணிந்திருக்கும் தங்க ஆபரணங்கள் தொடர்பான பாதுகாப்பை நீங்களே உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் விவசாயக் காணிகளில் இருக்கும் நீர் இறைக்கும் இயந்திரம், சூரிய சக்தி மூலம் இயங்கும் மின் பிறப்பாக்கி, மற்றும் நீர்க் குழாய்கள் ஆகியவற்றை பாதுகாத்துக் கொள்வதற்கான பாதுகாப்பு காவலாளியை நியமிக்கவும்.

உங்களது ஊருக்கு வரும் இனம் தெரியாத நபர்கள் தொடர்பான தகவல்களை அறியவும். உங்களது வீட்டுக்கு உதவி செய்வதாக கூறிக்கொண்டு வரும் தனியார் அல்லது தொண்டர் இஸ்தாபன உத்தியோகஸ்தர்கள் அவர்கள் உண்மையான உத்தியோகஸ்தர்களா? என்று பரிசீலனை செய்ய உங்களுக்கு உரிமையுண்டு. உங்கள் வீடுகளுக்கு வரும் அரச ஊழியர்களின் உத்தியோகபூர்வ அடையாள அட்டையை பரிசீலித்து அவர்களை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள வீடுகளுக்கு சீருடையிலோ அல்லது சிவில் உடையிலோ வரும் பொலிஸ், விசேட அதிரடிப்படை, இரகசிய பொலிஸ் பிரிவு, இராணுவத்தினர் என்போர் உண்மையான உத்தியோகஸ்தர்களா? என்பதை அவர்களது உத்தியோகபூர்வ அடையாள அட்டையை
பரிசீலித்து உறுதிப்படுத்தவும்.

இப்படி இரவில் அல்லது பகலில் வருபவர்கள் சம்மந்தமாக ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் பொலிஸ் அவசரப் பிரிவு 119, 118க்கு தொடர்பு கொள்ளவும். உங்களுக்கு ஏதாவது சந்தேகத்திற்கிடமான நபர்கள் பொருட்கள், அறியக் கிடைத்தால் கீழ்வரும் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

பொலிஸ் நிலையம் களுவாஞ்சிகுடி 065 - 2250022,  பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் நிலையம் களுவாஞ்சிகுடி 065 - 2250022, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கர் - களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி, கொக்கட்டிச்சோலை, 0175240273 போன்றவற்றுடன் தொடர்பு கொள்ளலாம். போலிஸ் பொறுப்பதிகாரி மட்டக்களப்பு 0718448850, அவசர தகவல் பிரிவு 119, 118 என அப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பிரதேசத்தில் மிக அண்மைக்காலமாக வழிப்பறிக் கொள்ளைகள் வீடுகளில் களவுகள் போன்றன இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .