2026 மே 09, சனிக்கிழமை

அரசை நெருக்கடியிலிருந்து விடுவிக்கும் நிலைப்பாட்டினை எடுக்க முடியாது: ஹக்கீம்

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 23 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

'தமிழ் சமூகம் தமது பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேசத்தினைப் பயன்படுத்தியமை போன்று தம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்தில் சர்வதேசத்தினை மிகத் திறமையாகப் முஸ்லிம் காங்கிரஸால் பயன்படுத்த முடியும்.

ஆபத்தானதொரு கட்டத்தில் அரசாங்கம் இருப்பதை ஆட்சியிலுள்ளவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் வெறும் போடு காய்களாக எங்களைக் கணக்கில் எடுப்பதற்கு நாங்கள் ஒருபோதும் இடம் வழங்க முடியாது' என்று மு.காங்கிரசின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் கூறினார்.

காத்தான்குடி, பூநொச்சிமுனையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் பேசும் போதே மு.கா. தலைவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,

'மு.காங்கிரஸ் - இந்த அரசாங்கத்தோடு இணைந்தமையானது கண்ணைத் திறந்து கொண்டே குழியில் விழுந்தமைக்கு ஒப்பானதொரு செயலாகுமென்று - அந்த இணைவு இடம்பெற்ற மறு நாளே கல்முனையில் வைத்துக் கூறியிருந்தேன். அதேவேளை, இந்தக் குழியிலிருந்து வெளியில் வரும் உபாயங்களும் எமக்குத் தெரியும் என்பதையும் நான் அப்போது சொல்லியிருந்தேன்.

தம்புள்ளை பள்ளிவாசல் உள்ளிட்ட விவகாரங்கள் அரசாங்கத்துக்குள் இருக்கின்ற மு.காங்கிரஸினையும் முஸ்லிம் சமூகத்தினையும் பலவீனப்படுத்துகின்ற நிகழ்வுகளாக மாறியுள்ளன. இந்த நிலையில், அரசுடனான மு.காங்கிரஸின் இணைவானது சர்ச்சைக்குரிய விடயமாகப் பார்க்கப்படுகிறது.

தம்புள்ள விவகாரம் தோன்றியுள்ள இந்த நிலையில்தான் மு.காங்கிரஸ் எனும் கட்சி தன்னுடைய உண்மையான அடையாளத்தினைக் காட்ட வேண்டியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் மு.காங்கிரஸ் எடுப்பார் கைப்பிள்ளையாக இயங்க முடியாது. அரசாங்கத்தின் தேவைக்கும், அவர்களை நெருக்கடிகளில் இருந்து விடுவிப்பதற்காகவும் இந்த சந்தர்ப்பத்தில் எங்களுடைய நிலைப்பாட்டினை எடுக்க முடியாது!

தம்புள்ளயிலுள்ள பள்ளிவாயலை அகற்ற வேண்டும் என்கிறதொரு நிலைப்பாடு அநியாயமாக எடுக்கப்பட்டிருக்கிறது. பள்ளிவாயலை அகற்ற வேண்டும் என்பதை தம்புள்ளயிலுள்ள சிங்கள மக்களில் அதிகமானோரே எதிர்க்கின்றார்கள். நான் நேரடியாகச் சென்று பார்த்த போது சிங்கள மக்களே இதை என்னிடம் கூறினார்கள். இப்படியிருக்கும் போது – பள்ளிவாயலை அகற்ற வேண்டும் என்பதற்கு நாம் ஏன் உடன்பட வேண்டும்?

மேலிடத்திலிருந்து சில விருப்பங்கள் தெரியப்படுத்தப்படும் போது – அதற்கேற்றவாறு நாம் ஒரு பல்லவியைப் பாடுவதென்கிற விடயம் முஸ்லிம் காங்கிரசிடம் சரிப்பட்டு வராது!

அரசுடன் மு.காங்கிரஸ் இணைந்தமையானது ஒற்றுமையாகக் கையாளப்பட்டிருந்தால், அது மிகச் சிறந்ததொரு இணைவாக மாறியிருக்கும். ஆனால், இன்னுமொரு பிளவினை இந்தக் கட்சி தாங்கிக் கொள்ளாது எனும் நிலையில்தான் நாம் அரசுடன் இணைந்தோம். ஆயினும், இந்த இணைவின் பின் ஒருவருக்கும் அவர்கள் எதிர்பார்த்த எவையும் கிடைக்கவில்லை!

நமது கட்சியிலுள்ள சிலருக்கு பதவிகள் சம்பந்தமான ஆசைகள் தொடர்ந்தும் இருந்து கொண்டே வருகிறது. இதற்காக, கட்சிக்கு அப்பால் சென்று அரசாங்கத்துடன் தனிப்பாட்ட உறவுகளைப் பேணி தமது அபிலாசைகளை அடைந்து கொள்வதற்கு யாராவது முயன்றால், அவற்றினை முறியடிப்பதற்கு மு.கா. தலைமைத்துவம் நிச்சயமாக வியூகங்களை வகுக்கும்!

அரசாங்கத்தோடு மு.காங்கிரஸ் இணைந்ததன் மூலமாக மூன்றில் இரண்டு எனும் பெரும்பான்மையினை வழங்கியது. அதன் மூலமாக தம்புள்ளயில் இன்று அரசாங்கம் நினைத்ததைச் செய்வதற்கு வழிசமைத்துக் கொடுத்திருக்கின்றோம்.

ஆனால், எமது பலம் முழுமையாக அற்றுப் போகவில்லை. தமது பிரச்சினைகள் தொடர்பில் தமிழ் சமூகம் சர்வதேசத்தினைப் பயன்படுத்தியமை போன்று முஸ்லிம் சமூகத்தினால் ஏன் முடியாது! இந்த விடயத்தில் சர்வதேசத்தினை மிகத் திறமையாக முஸ்லிம் காங்கிரஸால் பயன்படுத்த முடியும். ஆபத்தான கட்டத்தில் அரசாங்கம் இருப்பதை ஆட்சியிலுள்ளவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் வெறும் போடு காய்களாக எங்களைக் கணக்கில் எடுப்பதற்கு நாங்கள் இடம் வழங்க முடியாது.

எதற்காகவும் நாங்கள் பயந்து ஒதுங்க வேண்டிய அவசியமில்லை. தம்புள்ள பள்ளிவாசலை அகற்றுவது எனும் விவகாரத்திலுள்ள அநியாயம் குறித்து அரசாங்கத்திலுள்ள முக்கிய அமைச்சர்கள் எம்மிடம் பேசுகின்றார்கள். இதற்குப் பின்னரும் நாம் ஏன் பயந்து கொண்டிருக்க வேண்டும்.

ஜனாதிபதி எங்களை நம்ப வேண்டும். நாங்கள் நம்பும் படி அவரும் நடந்து கொள்ள வேண்டும். ஜனாதிபதியின் ஒரு சகோதரர் மு.காங்கிரஸிடம் ஒரு விதமாக நோண்டுவதையும், அபிவிருத்தி விடயத்தில் சீண்டுவதையும் தொடர்ந்தும் எங்களால் சகித்துக் கொண்டிருக்க முடியாது!

ஆனால், நாங்களாக அரசாங்கத்தை விட்டுச் செல்ல மாட்டோம். எம்னுடைய பலம் என்னவென்று எனக்குத் தெரியும். இந்த அரசாங்கத்துக்குள் நாங்கள் விருப்பத்தோடு வந்தவர்களுமல்ல, அதேபோல் விருப்பத்தோடு போகின்றவர்களாகவும் இருக்க மாட்டோம். நம்பிக்கையைக் கொடுத்தே நம்பிக்கையை வெல்ல வேண்டும் என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .