2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

இந்த கிழக்கு மாகாணசபை தேர்தல் தமிழர்க்கான ஒரு வரலாற்று சந்தர்ப்பம்: முன்னாள் முதலமைச்சர்

Menaka Mookandi   / 2012 ஜூன் 30 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித், எம்.சுக்ரி, ஜிப்ரான்)

தற்போது நாட்டில் 3 மாகாண சபைகளின் காலம் வலுவிழந்ததாக கருதப்படுகின்ற நிலையில், அச்சபைகளுக்கான தேர்தல் செப்டெம்பர் மாதத்தில் நடைபெற உள்ளன. இந்த நிலையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் என்பது கிழக்கு தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்கின்ற ஓர் வரலாற்று சந்தர்ப்பம் என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை சுமார் 14.10 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள மட்டக்களப்பு புன்னச்சோலை வீதி அபிவிருத்தி நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில், 'இலங்கையின் அரசியல் வரலாற்றில், கிழக்கு மாகாணத்தின் ஒரு தமிழன் அரசியல் ரீதியாக அதிக காலம் மூவின மக்களுக்குமான ஓர் தலைவனாக இருந்து ஆட்சி செலுத்திய பெருமை என்னையே சாரும். அது மட்டுமல்லாமல் மூவின மக்களையும் திருப்திப்படுத்தும் வகையில் அந்த ஆட்சி சுமார் நான்கு ஆண்டுகள் இடம்பெற்றமை அதனை விட ஒருபடி மேல்.

ஏன் இதனை நான் சொல்கின்றேன் என்றால் கடந்த கால தமிழர்களின்; அரசியல் வரலாற்றிலே எந்த ஒரு தலைவரும் இதனைச் செய்யவும் இல்லை அதனை செய்ய வட மேலாதிக்கவாதிகள் விடவும் இல்லை. ஆனால் அவ்வாறு பல காலங்களாக இருந்து வந்த அப்படியான ஓர் எழுதாத கொள்கையை தகர்த்தெறிந்து நான் ஆட்சி நடாத்தி அதில் வெற்றியும் கண்டு இருக்கின்றேன். எமது கிழக்கு மக்களுக்கும் ஏன் ஒட்டுமொத்த இலங்கை;கும் அப்பால் உலகிற்கே தெரியும்.

இது போன்றதொரு நிலை தொடர்ந்து கிழக்கில் ஏற்படுமாயின், அதனை வடக்கு அரசியல் தலைமைகள் ஒருபோதும் விரும்பாது. ஏன் என்றால் மீண்டும் இந்த சந்திரகாந்தன் முதலமைச்சராக வந்து விட்டால் அவர்களது மேலாதிக்கவர்க்க அரசியலோடு அமைந்த அரசியலுக்கு கிழக்கில் முற்றுப் புள்ளி வத்;து விடுவோம் என்ற அச்சம். அதன் வெளிப்பாடுதான். இன்று தங்களது கொள்கையையும் மறந்து பிரிந்திருக்கின்ற அதாவது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஏறறுக் கொள்ளாத இந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே போட்டியிடப் போகின்றார்கள்.

இவர்கள் போட்டியிடுவதன் உண்மை நோக்கம் கிழக்கு மக்களின் நலன்களில் உள்ள அக்கறை அல்ல. அதற்கு மாறாக மீண்டும் கிழக்கில் ஓர் தலைமைத்துவம் வந்து கிழக்கு மக்களுக்கான அரசியல் ஸ்த்திரத்தன்மையயை கொண்டுவரக் கூடாது என்பதுதான். இவர்களது கபட நோக்கம். இதனை கிழக்கு மக்கள் நன்கு புரிந்து விட்டார்கள் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

ஏன் எனில் அப்படி அவர்களது கொள்கைகளுக்கு பின்னால் கிழக்கு தமிழ் மக்கள் இனி ஒருபொதும் நிற்க மாட்டார்கள் என்பதன் உண்மையை அறிந்துதான் தற்போது வடக்கிலே இருந்து கிழக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக ஆட்களை இறக்குமதி செய்கின்றார்கள்.

இது தொடர்பாக வவுனியா நகர சபையின் பிரதி தவிசாளர் குறிப்பிட்டிருந்தார். தாங்கள் படையெடுத்து வந்து கிழக்கிலே தேர்தல் பிரச்சாரம் செய்யப் போகின்றார்களாம் ஏன்று, இவ்வாறு எப்போது அவர்கள் சிந்தித்தார்களோ அன்றே அவர்கள் தோபற்றுவிட்டார்கள். கிழக்கு மக்கள் இவர்களுக்கு பின்னால் இல்லை என்பதற்கு இவரின் கருத்து சிறந்த எடுத்துக்காட்டாகும்.

எது எவ்வாறாயினும் கிழக்கு மக்கள் சிந்தித்து இம்முறை வாக்களிக்க வேண்டும். ஏன் என்றால் கிழக்கு தமிழ் மக்கள் கடைமையை செய்து இவ்வளவு காலமும் பலனை எதிர்பார்க்காமல் இருந்திருக்கின்றார்கள். அதாவது தேர்தல் காலங்களில் வாக்களித்தது தான் மிச்சதம் அதனால் அம்மக்கள் கண்ணீரையும் வேதனைகளையுமதான் சந்தித்தார்கள்.

மாறாக எந்தவொரு நன்மையையும் பெறவில்லை. ஆனால் இம்முறை கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே வாக்களிப்பதன் ஊடாக ஓர் தமிழ் முதலமைச்சரை மீண்டும் கொண்டு வந்து அதன் ஊடாக இவ்வளவு காலமும் வன்செயல்களாலும் வடக்கு அரசியல் தலைமைகளாலும் அரசியல் ரீதியில் வலுவிழந்து ஓரளவு அபிவிருத்தி கண்டு வருகின்ற கிழக்கை மீண்டும் ஓர் சுயபுத்தி உள்ள கிழக்கான் ஆள நீங்கள் துணை நிற்க வேண்டும். அது கிழக்கில் பிறந்த ஓவ்வொரு குடிமகனின் வரலாற்று கடைடைமயும் கூட' என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் மட்டு மாநாகர மேயர் தீருமதி சிவகீதா பிரபாகரன், பிரதி மேயர் ஜோர்ச் பிள்ளை மற்றும் பிரதேச செயலகத்தின் அதிகாரிகள், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் மற்றும் கிராமியத் தலைவர்கள் ஆலய நிருவாக சபையினர், கிராம சேவையாளர் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .