2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

மட்டக்களப்பு மாவட்டத்திலே நிர்வாக பலம் தமிழர்களுடைய கைகளிலே இருக்கின்றது: ஹாபிஸ் நஸீர்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 25 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எச்.ஏ.ஹுஸைன்)


'அரசியல் பலம் முஸ்லிம்களுடைய கைகளிலே இருக்கின்ற அதேநேரத்திலே மட்டக்களப்பு மாவட்டத்திலே நிர்வாக பலம் தமிழர்களுடைய கைகளிலே இருக்கின்றது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொண்டாக வேண்டும்' இவ்வாறு கிழக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி சுற்றுலாத்துறை மீன்பிடி சிறு கைத்தொழில் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமத் குறிப்பிட்டார்.

நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பு மத்தி கல்வி வலய அலுவலகக் கட்டிடத்தைத் திறந்து வைத்து உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு உரையாற்றினார்.

அங்கு தொடர்ந்து பேசிய அவர் 'நாம் நம்முடைய அறிவை தமிழில் மாத்திரம் வைத்துக் கொண்டு எவ்வளவு உச்சத்திற்குச் சென்றாலும் சரி அது வெளிச்சத்திற்கு வராத ஒன்றாகத்தான் இருக்கும்.

நமது அறிவும் திறமைகளும் வெளியுலகிற்குத் தெரிய வேண்டுமாக இருந்தால் குறைந்த பட்சம் சிங்களம், ஆங்கிலம், அரபு உள்ளிட்ட மூன்று மொழிகளையாவது நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

வேறு படிப்புகளுக்காக இரவு பகலாக கடும் பிரயத்தனம் எடுக்கின்ற நாம் ஏன் பல்வேறுபட்ட மொழியறிவைக் கற்றுக்கொள்ள ஒரு சிறிது காலத்தை ஒதுக்கக் கூடாது என்பதை எண்ணிப் பாருங்கள்.

மொழிப் பிரச்சினையை நாம் வாழும் காலத்தில் தீர்த்துக்கொள்ள முடியாவிட்டாலும் வருகின்ற சந்ததியாவது அதனைத் தீர்த்துக்கொள்வதற்கு நாம் வழி விட்டாக வேண்டும். இந்த மட்டக்களப்பு மத்தி கல்வி வலய கல்விச் சமூகம் மொழித் தடையை உடைத்தெறிந்த ஒரு சமூகமாக வர வேண்டும்.

அதற்காக சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் சேர்த்து முஸ்லிம்கள் அரபு மொழியையும் கற்றாக வேண்டும்.

ஏழு வயதிலிருந்து நாம் அரபு மொழியில் அர்த்தம் தெரியாமல் தொழுது வருகின்;றோம். நம்மால் வைத்தியராக பொறியியலாளராக வரமுடியுமென்றால் ஏன் அடுத்த மொழியைக் கற்றுத் தேர்ந்தவராக வரமுடியாது. முஸ்லிம்கள் அரபு மொழியைக் கட்டாயம் கற்றாக வேண்டும். குர்ஆனையும் ஹதீஸையும் விளங்கிக் கொண்டவர்களாக நாம் திகழ வேண்டும்.

இந்த நாட்டில் வாழுகின்ற எங்களுக்கு தமிழும் சிங்களமும் எவ்வாறு முக்கியமோ அவ்வாறுதான் இந்த நாட்டிலே வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு அரபு மொழியும் முக்கியமானது. தமிழையும் சிங்களத்தையும் நாங்கள் எல்லோரும் பேசுவோமாக இருந்திருந்தால் இந்த நாட்டிலே 75 சதவீதம் இனப்பிரச்சினை என்பது தோன்றியிருக்க வாய்ப்பே இருந்திருக்காது.

இந்த நாட்டிலே வாழ்கின்ற ஒருவருக்கு தமிழும் சிங்களமும் ஆங்கிலமும் தெரிந்தால் அவர்தான் முழு மனிதர்.

இந்த வலயத்தின் சாதனை தனியே ஜெய்னுதீன் ஆசிரியருடையது மட்டுமல்ல. இது ஏனைய ஆசிரியர்கள் வலயக் கல்வி அதிகாரிகள், மாணவர்கள் பெற்றோர் என்று  எல்லோருடையதும்தான்.

ஜெய்னுதீனுக்குப் பின்னர் இந்த வலயத்திற்கு யார் கல்விப்பணிப்பாளராக வந்தாலும் அது பறவாயில்லை. ஆனால் அகில இலங்கை ரீதியிலே இந்த வலயம் எப்பொழுதுமே முதலாமிடம் என்ற சாதனையைத் தக்க வைத்துக் கொண்டு போக வேண்டும். அதுவே எல்லோருடைய அவாவாகவும் இருக்க வேண்டும்;.

நான் எதையும் எப்பொழுதும் வெளிப்படையாகப் பேசுபவன். அதனால் பகிரங்கமாக கிழக்கு மாகாண அரசியலைப் பற்றிக் கூறவேண்டும்.

கிழக்கு மாகாண அரசியல் முஸ்லிம்களுடைய கைகளிலேயே இருக்கின்றது என்கின்ற ஒரு தோற்றப்பாடு வெளியே உள்ளது. மாகாண சபையின் கைகளிலே இருக்கின்ற அதிகாரங்களுக்குள் கிழக்கு மாகாண சபையின் ஐந்து அமைச்சர்களிலே நானும் ஒருவர். இன்னொரு சிங்கள அமைச்சரும் உள்ளார்.

முஸ்லிம்களுடைய அதிகாரத்திலே கிழக்கு மாகாண சபை இருக்கின்றது என்கின்ற அந்தத் தோற்றம் இந்த நாட்டிலே வாழ்கின்ற அனைத்து சமூகங்களுக்கும் ஒட்டு மொத்த இலங்கைக்கும் மற்றைய மாகாண சபைகளுக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்.

எங்களுடைய அரசியல் பலத்தையும் அதிகாரத்தையும் சிங்கள தமிழ் முஸ்லிம் என்ற வேறுபாடின்றி செயலாற்றுகின்றவர்களாக இருக்க வேண்டும் என்று இந்த மாகாண சபைக்குள் நாங்கள் கதைப்பதுண்டு.

என்னுடைய இந்த குறுகிய மூன்று மாத அமைச்சுப் பதவி எடுத்தது முதற் கொண்டு ஒரு சமநிலை இல்லாத போக்கை நான் அதிகார மட்டத்தில் காண்கின்றேன்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலே ஒரு புறத்திலே அரசியல் பலமும் இன்னொரு புறத்திலே ஒரு நிர்வாக பலமும் உள்ளது.

அரசியல் பலம் முஸ்லிம்களுடைய கைகளிலே இருக்கின்ற அதேநேரத்திலே மட்டக்களப்பு மாவட்டத்திலே நிர்வாக பலம் தமிழர்களுடைய கைகளிலே இருக்கின்றது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

இந்த இரண்டு அதிகாரங்களும் சரியான முறையில் செயல்பட்டால் மாத்திரமே இன வேறுபாடுகளைக் கடந்து அபிவிருத்தி சமாதானம் என்கின்ற இலக்கை நோக்கிப் பயணிக்க முடியும்.

நாங்கள் கடந்த காலங்களில் இனவாதம் பேசிப் பேசியே தோல்வியடைந்து விட்டோம். அரசியல் வாதிகளான நாங்களும் அதிகாரிகளான நீங்களும் இனவாதத்தைக் களைய வேண்டும்.

ஒரு முன்னேற்றமும் முன்னுதாரணமும் உள்ள ஒரு மாவட்டமாக இந்த மட்டக்களப்பில் சரித்திரம் படைக்க நாங்கள் இருசாராரும் இணைந்து முன் வரவேண்டும்.

இது மாத்திரமல்ல மாகாண நிர்வாக மட்டத்திலும் தமிழ் முஸ்லிம் சிங்கள அதிகாரிகள் எவராக இருந்தாலும் இனவாத இழிந்த மனநிலையைக் களைந்து செயலாற்ற முன் வரவேண்டும்.

எது நீதி நியாயமோ அதனைச் அமுல்படுத்துகின்ற அதிகாரிகளாகத்தான் நீங்களும் நாங்களும் இருக்க வேண்டும். இந்தத் தடையை நாங்கள் அரசியல் ரீதியிலே உடைத்தாக வேண்டும்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலே 70 பாடசாலைகள், 1500 ஆசிரியர்கள், 35000 மாணவர்கள், 70 வலயக்கல்வி அதிகாரிகள் இருக்கின்ற ஒரு கல்வி வலயம் இது.

ஆனால் இங்கு இந்த நிகழ்வுக்கு வந்திருக்கின்றவர்கள் வரவேற்புக் கீதம் இசைத்த 10 மாணவிகளையும் சேர்த்து பெண்கள் மொத்தம் 31 பேரும், ஆண்களாக இங்கு வந்திருக்கின்ற ஊடகவியலாளர்கள் எமது கட்சிக்காரர்கள் எல்லோரையும் சேர்த்து மொத்தம் 52 பேர்.

இது மிகவும் கவலையளிக்கின்ற ஒரு விடயம். இவ்வாறான பிழைகளை இனிமேல் எந்தவொரு அதிகாரியும் எந்தச் சந்தர்ப்பத்திலும் விட்டுவிடக்கூடாது.

இந்த நிகழ்ச்சிக்கு இரண்டு அழைப்புக்கள் வந்தன. முதலாவது அழைப்பிலே என்னுடைய பெயர் இருக்கவில்லை. இரண்டாவது அழைப்பிலே என்னுடைய பெயரைச் சேர்த்திருந்தார்கள்.

ஏன் அவ்வாறு காத்தான்குடியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் உள்ளடக்கப்படவில்லை? குறைந்த பட்சம் மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்கையாவது சேர்த்திருக்கலாம். சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கல்விப் பணிப்பாளர் ஜெய்னுதீன் அவர்களிடம் சொன்னேன்.

ஆனால் அது கவனத்தில் எடுக்கப்படவில்லை. அதன் விளைவாக இந்த நிகழ்வைக் காத்தான்குடி மக்கள் புறக்கணித்திருக்கின்றார்கள். இது மிகவும் கவலையானது.

இந்த மன நிலையிலிருந்து எப்பொழுது நாம் விடுபடப் போகின்றோம் என்ற குறைபாட்டைச் சுட்டிக்காட்டுகின்ற கடமைப்பாடு எனக்கு இருக்கின்றது. இவ்வாறான குறைபாட்டை யார் விட்டாலும் அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

குறைபாடுகளை நிவர்த்தி செய்கின்ற அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தான் இந்த நாட்டுக்கும் பிரதேசத்திற்கும் தேவை. அமைச்சர் அமீரலிதான் இந்தக் கல்வி வலயத்திற்கு வித்திட்டார் என்பதனை உரத்துக் கூறுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் கிடையாது. இதேபோன்று நாளை ஏன் அந்த ஷிப்லியும் சரித்திரம் படைக்கக் கூடியவராக ஆகிவிடக் கூடாது? இவ்வாறான வக்கிரப்புத்தி மன நிலையை அறுத்தெறிந்து ஒரு புத்துணர்ச்சியுள்ள அழகான மனநிலையுள்ளவராக அதிகாரிகளான நீங்கள் அனைவரும் செயலாற்ற வேண்டும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X