2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

தமிழ் தேசியம் பலம்பொருந்திய நிர்வாக அமைப்பாக வலுப்பெறுவது காலத்தின் தேவை: இரா.துரைரெட்ணம்

Menaka Mookandi   / 2013 ஜனவரி 05 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

தமிழ் தேசியம் பலம்பொருந்திய நிர்வாக அமைப்பாக வலுப்பெறுவதன் மூலம் தமிழர்கள் ஒட்டு மொத்தமாக எதிர்நோக்கும் அரசியல் விடயங்களுக்கு தீர்வைக்காண வழிவகுக்க முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார்.

தமிழ்தேசியக் கூட்டமைப்பின் அரசியல் செயற்பாடுகள், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே துரைரெட்ணம் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் தேசியத்தின் உரிமைகள் தொடர்பாக  எம்மீது பாரிய பொறுப்புக்கள் திணிக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான  வெகுஜன அரசியல் போராட்டத்தை வலிமை உடையதாக்கி வெற்றி கொள்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமைப்புரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும், வலுப்பெற வேண்டும்.

தமிழ் தேசியத்தின் குரலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு பல வருடங்களாக பல சாதனைகளைப் புரிந்துள்ளதை மறுப்பதற்;கில்லை. பல கட்சிகளை உள்ளடக்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு பலவழிகளிலும் தமிழர் தம் அரசியலில் செல்வாக்கு செலுத்தக்கூடிய கட்சியாக வளர்ச்சியடைய ஆரம்பித்த நிலையில், கூட்டமைப்புக் கட்சிக்குள் எந்த அளவிற்கு அதன் வளர்ச்சிப்பாதையை நோக்கிய நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்னும் விடயத்தில் நாம் பலவீனமான நிலையில் உள்ளோம்.

தமிழ்தேசியக் கூட்டமைப்பிற்கு நலன்விரும்பிகள் நிதி உதவி செய்யும்போது தனிக்கட்சியாக  நிதியை கையாளுவதும், பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடும் போதெல்லாம் தனிக்கட்சிகளாகச் செல்வதும், கட்சித்தலைமைகள் கூடிப்பேசி ஆலோசனை நடத்தாமல் இருப்பதும் ஆரோக்கியமானதல்ல.

தனித்தனி கட்சிகள் தங்கள் தங்கள் கட்சிக்குரிய வேலைகளை ஆளுமையுடன் செயல்படுத்துகின்றன. ஆனால் தமிழ் மக்களின் ஏகோபித்த குரலாக ஒலிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் கட்சிகள் அனைத்தையும் உள்ளடக்கி உருவாக்கப் பட்டிருந்த போதும் அதற்கான செயல் ஒழுங்கு முறைகளை கைக்கொள்ளவில்லை என்பது துயரகரமானதே.

இன் நிலைமைகளைமாற்றி இதைப் பலமடைய வைக்கவேண்டிய பொறுப்பு தமிழ் தலைமைக்கும்
தமிழ் மக்களுக்கும் உரியதாகும். கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த மட்டில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஒற்றுமையாக செயற்பட்டால் மாத்திரமே எமது தமிழ் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க முடியும். என்ற உண்மையை எவரும் மறந்துவிடக்கூடாது

இல்லையேல்  அம்பாரை, ,திருகோணமலை மாவட்டங்களில் தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்த பொறுப்பும் பழியும் தமிழ் தலைமையையே சாரும். எனவே கிழக்கு வாழ் தமிழ் மக்களின் நலனில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அக்கறையுள்ளவர்களாக இருந்தால் ஐந்து கட்சிகளையும் உள்ளடக்கி  தமிழ்
தேசியக ;கூட்டமைப்பை பதிவு செய்து அதன் நிர்வாகக் கட்டமைப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

வடக்கை பொறுத்தமட்டில் ஆளும்தரப்பினராக இருந்தாலும், எதிர்தரப்பினராக இருந்தாலும் தமிழர்களே பெரும்பான்மையினர் ஆனால் கிழக்கில் நிலமைவேறு ஆகவே கிழக்கில் முதலில் தமிழ் பிரதி நிதித்துவத்தையும் தமிழ் நிர்வாகத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

அரசைப் பொறுத்த மட்டில் திட்டமிடல், நிதி, நிர்வாகம், அபிவிருத்தி, நியமனம் இவைபோன்ற ஏனைய பல விடயங்களில்  அரசதரப்பினரை மட்டுமே அடிப்படையாக வைத்து உள்வாங்கப்பட்ட திட்டத்தை மத்தியஅரசும், மாகாணசபையும் செயல்படுத்தி வருகின்றது.

இவைமட்டுமின்றி கிழக்குமாகாண நிர்வாகம் ஒரு சமூகம் சார்ந்ததாக  மாற்றுவதற்கான முயற்சிகளும் நடைபெறுகின்றனவா என்னும் சந்தேகம் இவ்விடத்தில் ஏற்பட்டுள்ளது.

இதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் பார்த்துக்கொண்டிருக்ககூடாது. புல உள்ளுராட்சி சபைகளில் ஆளும் தரப்பினராகவும், கிழக்கு மாகாண சபையிலும் நாடாளுமன்றத்திலும் எதிர்தரப்பினராகவும் செயல்படுவதற்குச் சரியான 4, 5 ஆண்டுத் திட்டங்களை முன்வைத்து செயல்பட வழிவகுக்க வேண்டும்.


இணைந்த வடக்கு கிழக்கின் அதிகாரப் பரவலாக்கல் தொடங்கி, அபிவிருத்தி, திட்டமிடல், கல்வி ,இயற்கை அனர்த்தப்பாதிப்பு, திட்டமிட்ட குடியேற்றம், யுத்தப்பாதிப்பின் பின்னரான புனர்வாழ்வு, புனரமைப்பு,  இடமாற்றம், பதவி உயர்வு, புதிய நியமனம், கலை,பண்பாட்டுச் சீரழிவு, வெளி நாட்டுக்கொள்கை, நிர்வாகக் கட்டமைப்பு, காணி, நிதி வரையும் செயலாற்றக்கூடிய வழிவகைகளை கையாளக்கூடியவாறு செயல் திட்டங்களைத் தீட்டவேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாகும்.

எந்தளவிற்கு உரிமைகள் தொடர்பாக குரல் கொடுக்கின்றோமோ அந்த அளவிற்கு மக்களின் இயல்புவாழ்கை தொடர்பான விடயங்களிலும்  சிறப்பாகச் செயல்பட வேண்டும்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஒருதேர்தல்கால கூட்டமைப்பாக இல்லாமல், தேர்தல்காலத்தில் மாத்திரம் தமிழர் உரிமைகள்,சலுகைகள் தொடர்பாக பேசுகின்றதும் அறிகையிடுகின்றதுமான கூட்டமைப்பாக இல்லாமல் தமிழர் தம் கோட்பாடுகளும், தியாகங்களும,; உரிமைகளும், போராட்டங்களும் விலைபேச முடியாதவையாகவும் காலத்தின்தேவையை உணர்ந்து செயற்படுத்தக்கூடியதாகவும் கட்டமைக்கப்படல் வேண்டும்.

போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால்போராட்டம் மாறாது எனவே எமது இனப்பிரச்சினை தீர்வுதொடர்பாக தீர்க்கமானதும்,உறுதியானதுமான  நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் முதற்படியாக 13ஆவது திருத்தச்சட்டத்தை நிலை நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இணக்கப்பாட்டிற்கு வரக் கூடிய விடயங்களில் இணக்கப்பாட்டிற்கும், பேரம் பேசும் விடயங்களில் பேரம் பேசும் சத்தியாகவும் எமது இலட்சிய வேள்வியில் தமிழ்த் தேசியம் பறிபோகாமல் தடுப்பதற்கும் எமது உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியாது என்றவிடயங்களில் உரிமையை விட்டுக்கொடுக்காமலும் எமது இனத்தின் இன்றைய இருப்பையும் எதிர்கால சந்ததியின் நலனையும் கருத்தில் கொண்டு கால தேச வர்த்தமானங்களை கடந்து நாம் சிந்திக்க வேண்டும்.

எனவே நன்கு திட்டமிட்டு புரிந்துணர்வுடன் செயலாற்ற தமிழ் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளின் தலைவர்களும் முன்வர வேண்டும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X