2026 மே 01, வெள்ளிக்கிழமை

மு.கா.விலிருந்து நான் வெளியேற மாட்டேன்: பசீர்

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 05 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சுக்ரி

'எத்தருணத்திலும் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வெளியேறவோ, வேறு கட்சிகளில் இணையவோ மாட்டேன். நெருக்கடியான சூழ்நிலைகள் எற்பட்டால் அரசியலை துறந்து வீட்டுக்குத்தான் போவேன்' என்று உற்பத்தி வள ஊக்குவிப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

 'அரசாங்கமோ அல்லது வெளிநாட்டு சக்திகளோ, உள்நாட்டில் இருக்கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிரான அமைப்புக்களோ, கட்சிகளோ எனது கட்சிக்கு எதிராகவும்; தலைமைத்துவத்திற்கு எதிராகவும் என்னை பயன்படுத்த முடியாது' என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட மத்திய குழுக்கூட்டம் ஏறாவூரிலுள்ள தாறுஸ்ஸலாமில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

'முஸ்லிம் காங்கிரஸில் பிரிவினை ஏதுமில்லாமல் கட்சிக்கு இன்னுமொரு அமைச்சரவை அந்தஸ்;துள்ள அமைச்சுப்பதவி கிடைத்துவிட்டது என்று கவலைப்படுகின்ற, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கட்சியை பலவீனப்படுத்த விளைகிற சில வெளிசக்திகளின் உபாயரீதியான பிரசாரமே என்னைப்பற்றிய அண்மைய கட்டுக்கதைகளுக்கு காரணமாகும்' என அவர் கூறினார்.

'2000ஆம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸின் நிறுவுனர் தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரபின் மறைவுக்குப் பின்பு  கட்சிக்குள் இரட்டை தலைமைத்துவ பிரச்சினை தொடக்கம் இன்று வரையான 13 வருட காலத்துக்குள் ஏற்பட்ட பல பிரச்சினைகளை  முகம் கொடுத்து வெற்றி காண்பதில் தலைவர் றவூப் ஹக்கீமுடன் இணைந்து முதன்மைப்பாத்திரம் ஊற்று செயற்பட்டவன் நான் என்பதை அன்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அதியுயர் பீடக் கூட்டத்தில் கூறினேன்' என்றார்.

'இந்த கட்சிக்குள் எனக்கென்றும் ஒரு வரலாறு இருக்கின்றது. அது என்றும் காட்டிக்கொடுத்த வரலாறு அல்ல. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை கட்டிக்காத்த வரலாறேயாகும். பலர் தலைமைத்துவத்தை மாற்றி, கட்சியை கைப்பற்ற எடுத்த எல்லா முயற்சிகளுக்கும் எதிராக கட்சியை காப்பாற்றவும் கட்சியின் தலைமைத்துவத்தை காப்பாற்றவும் ஒரு முன்னணி போராளியாக நின்று போராடியிருக்கின்றேன்.

அன்று தொடக்கம் இன்று வரைக்கும் இந்த கட்சியையும், தலைமைத்துவத்தையும் சீரழித்தவனாக நான் இருக்கவில்லை மாறாக இந்த தலைமைத்துவத்தையும் கட்சியையும் கட்டிக்காப்பதிலும் பாதுகாப்பதிலும் முனைப்புடன் செயற்பட்ட வரலாறுதான் இந்தக்கட்சியில் உள்ள எனக்கான வரலாறாகும்' என்று அமைச்சர் பஷீர் கூறினார்.

'அமைச்சர் ஒருவரை நியமிக்கின்ற அதிகாரம் ஜனாதிபதிக்குத்தான் இருக்கின்றது என்ற போதிலும் அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியின் தலைவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கவில்லை எனும் குறை தலைவருக்கு இருப்பது போலவே எனக்கும் இருக்கின்றது.

ஆயினும் தலைவர், கடந்த அதியுயர்பீடக் கூட்டத்தில் எனது நியமனத்தை அங்கீகரித்து வாழத்து தெரிவித்தமைக்கு நான் என்றும் கடமைப்பட்டவனாக இருப்பேன். அக்கூட்டத்தில் எனது நியமனத்திற்கு ஏகோபித்து ஆதரவு வழங்கி வாழ்த்து தெரிவித்த அனைத்து அதியுயர் பீட உறுப்பினர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றி கூறிக்கொள்கின்றேன்.

பல விமர்சனங்கள் விவாதங்களுக்கூடாக தலைவரின் கருத்துக்கு கூடுதலாக செவிசாய்த்து அங்கீகாரம் வழங்குகிற வழமையான அதியுயர் பீடத்தின் பண்பு எனது விடயத்திலும் வெளிப்பட்டுள்ளது என்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

விசேடமாக தனது அமைச்சரவையில் என்னையும் ஒரு அமைச்சராக நியமித்தமைக்காக என்சார்பாகவும் கட்சி சார்பாகவும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் சார்பாகவும் ஜனாதிபதி மஹிந்தராஜபக்சவுக்கு நன்றி கூறுகிறேன். நான் அரசியலில் நிறுவன ரீதியாக வளர்ந்தவன் பாராளுமன்ற உறுப்பினராவதற்கோ அமைச்சுப்பதவி எடுப்பதற்கோ அரசியலுக்குப் போனவனல்ல.

சிறுபான்மை இனத்துவ அரசியலில் முஸ்லிம்களுக்கென்று தனித்துவமான தேசிய அரசியல் இயக்கம் இல்லாத காலத்திலே தமிழ் முஸ்லிம் மக்களுக்கென்று சரியாக போராடும் என்று நான் அடையாளம் கண்டிருந்த ஈரோஸ் அமைப்பில் அரசியலை ஆரம்பித்திருந்தேன்.

ஈரோஸ் அமைப்பு எம்.பி. பதவி அமைச்சுப்பதவி தரும் என்று நான் இணைந்துகொள்ளவில்லை. தனி நாடு அமைத்து அமைச்சராவேன் என கனவு கண்டதுமில்லை. ஆனால் அடக்கப்படுகின்ற ஒடுக்கப்படுகின்ற மக்களுக்கெதிரான போரட்டத்தில் எனது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காகவே அதில் இணைந்தேன்.

இருந்த வளங்களையும் தூக்கி எறிந்து விட்டு ஒரு போராட்ட அமைப்பிற்கு போனேனே தவிர எனக்கென்று எந்தவசதி வாய்ப்புக்களையும் பெற்றுக்கொள்வதற்காக போகவில்லை. எவரிடமும் இலஞ்சம் பெறாமல், ஊழல் செய்யாமல், வேலைவாய்ப்புக்களுக்கு பணம் வாங்காமல் இன்றும் என்னால் அரசியலில் நிலைத்திருக்க முடிகின்றது' என்றார்.

  Comments - 0

  • Abu Sama Tuesday, 05 February 2013 02:21 PM

    நேர்மயான அரசியல் என்ரும் நிலைத்துருக்கும். வால்த்துக்கல் அமைச்சரெ

    Reply : 0       0

    rima Tuesday, 05 February 2013 02:33 PM

    நீ ஒரு சாக்கடை நீ ஏல்லாம் முஸ்லிம்மக்கால மாடு ஏன்ரு நினைப்பவான்,

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .