2026 மே 07, வியாழக்கிழமை

கடத்தப்பட்ட யுவதி மீட்பு: இருவர் கைது

Kanagaraj   / 2013 ஏப்ரல் 06 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு வெல்லாவெளியில் கடத்தப்பட்ட யுவதி கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாந்தாமலை பிரதேசத்தின் காட்டுப்பகுதி ஒன்றில் வைத்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 39ஆம் கொலணி செல்வாபுரம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சுமார் எட்டுப்பேர் அடங்கிய குழுவினர் 22வயது உடைய யுவதியொருவரை கடத்திச்சென்றுள்ளனர்.

இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் வெல்லாவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவந்ததுடன் இது தொடர்பில் ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் வழங்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எம்.எஸ்.தர்மதிஸ்ஸ தலைமையில் மட்டக்களப்பு மாவட்;ட குற்றப்புலனாய்வுத்துறையினரும் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்;ட குற்றப்புலனாய்வுத்துறையின் கொக்கட்டிச்சோலை பிரதேச அதிகாரி மொன்றோ தலைமையில் சென்ற குழுவினர் தாந்தாமலைப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் உள்ள வாடியொன்றில் ( வயல் வேலைக்காக அமைக்கப்படும் குடிசை வீடு) இருந்து குறித்த யுவதியை மீட்டுள்ளதுடன் இது தொடர்பில் இரண்டு இளைஞர்களையும் கைதுசெய்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை கடத்தப்பட்ட யுவதியே நேற்றைய தினம்  வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர்கள் கொக்கட்டிச்சோலை பிரதேசத்துக்குட்பட்ட முனைக்காடு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவித்த குற்றப்புலனாய்வுத்துறையினர் ஏனையவர்களையும் தேடிவருவதாகவும் தெரிவித்தனர்.

குறித்த யுவதியை முனைக்காடு இளைஞர் ஒருவர் ஒரு தலைபட்சமாக காதலித்துவந்ததாகவும் அவரது காதலை ஏற்காத நிலையிலேயே இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மீட்கப்பட்ட யுவதியும் கைதுசெய்யப்பட்டவர்களும் வெல்லாவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த வெல்லாவெளி பொலிஸார் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .