2026 மே 07, வியாழக்கிழமை

'ஈக்கள் கடித்ததால் மாடுகள் மரணம்'

Kanagaraj   / 2013 ஏப்ரல் 21 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


இரத்தத்தை உறிஞ்சி குடிக்கும் ஒருவகைச் சிறிய ஈக்களால் மட்டக்களப்பு வேப்பவெட்டுவான், மாவடியோடைப் பகுதிகளில் பல நூற்றுக்கணக்கான மாடுகள் தினமும் செத்து மடிகின்றன.இதனால் பண்ணையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாடுகளில் மொய்க்கும் ஆயிரக்கணக்கான ஒரு வகைச் சிறிய ஈக்களே மாட்டின் இரத்தத்தை உறிஞ்சிக் கொள்வதாகவும் இதனால் மாடுகள் இறந்து விடுவதாகவும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முப்பது நாற்பது மாடுகளைக் கொண்டிருக்கும் மாட்டுப்பண்ணையாளர்கள் கடந்த ஓரிரு மாதங்களில் சுமார் பத்திற்கு மேற்பட்ட மாடுகளை இழந்திருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.ஓட்டு மொத்தமாக கடந்த மூன்று மாதகாலப் பகுதிக்குள் சுமார் ஆயிரம் மாடுகள் அளவில் ஈக்கடிகளால் செத்து மடிந்திருப்பதாக அவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.

கறுப்பு நிறமுள்ள ஒரு வகைச் சிறிய ஈக்கள் மாடுகளின் உடம்பில் மொய்த்துக் கொண்டு இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கின்றன.
இதனால் பலவீனப்பட்டுப் போகும் மாடுகள் ஒரு சில நாட்களில் எலும்பும் தோலுமாகி காடுகளுக்குள் புகுந்து கொண்டு செத்து மடிகின்றன.

மேற்படி ஈக்கடியால் இரத்தம் உறிஞ்சப்பட்ட மாடுகளின் தந்தங்களும், தாடைகளும், கண்களும் வீக்கமடைவதாக மாட்டுப் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.ஈக்கடி தாங்க முடியாமல் ஈக்களை விரட்டுவதற்காக மாடுகள் பகல்வேளைகளில் காடுகளுக்குள் ஓடிச் சென்று ஒழிந்து கொள்கின்றன.

அத்துடன் வெகு தூரத்திற்கும் ஓடித் தப்புகின்றன. இரவில் மாத்திரம் மேச்சலுக்கு வருகின்றன என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இளங்கன்றுகளே (முதியன்கள், காளைகள், கன்னி நாகுகள்) அதிகம் செத்துப் போவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
ஈக்கடி ஆபத்துத் தொடருமானால் மீதமிருக்கும் ஒரு சில மாடுகளும் மிகக் குறுகிய நாட்களுக்குள் இறந்து விடக்கூடிய ஆபத்து இருப்பதாகவும் இது குறித்து மிருக வைத்தியப் பகுதியினர் அக்கறை எடுக்கவில்லை என்றும் பண்ணையாளர்கள் விசனம் தெரிவித்தனர்.

ஈ கடிகளால் செத்து மடியும் ஒவ்வொரு மாட்டினதும் தற்போதைய சந்தைப் பெறுமதி சுமார் 30 தொடக்கம் 40 ஆயிரம் ரூபாய் வரையில் இருக்கும் என்றும் அவர்கள் வேதனை வெளியிடுகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .