2026 மே 06, புதன்கிழமை

மதங்களின் மீதும் வெறித்தனம்: பொன். செல்வராசா எம்.பி.

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 21 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வ.சக்திவேல்


அரசாங்கம் தற்போது மதங்களின் மீதும் தமது வெறித்தனத்தினைக் காட்டிவருகின்றது என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்

களுவாஞ்சிக்குடி நியூ ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் 47ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டும்  சித்திரை புதுவருடப் பிறப்பினை முன்னிட்டும் கலை விழாவும் விளையாட்டு விழாவும்  களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

'மட்டக்களப்பு மாவட்டம் பூராகவுமுள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் குறைந்தது ஒவ்வொரு விளையாட்டுக் கழகங்கள் அமைய வேண்டும். அவ்வாறு அமைகின்ற போதுதான் நொந்துபோய் இருக்கின்ற எனது மக்களுக்கு இது போன்ற கலை நிகழ்வுகளும் விளையாட்டுக்களும் ஒருவிதத்தில் ஆறுதல் அளிக்கும் என்பதில் எதுவி;த ஐயமுமில்லை.

இவ்வாறான விளையாட்டுக்கள் ஒருவிதம் சந்தோஷமாக நடந்தேறுகின்றபோதிலும், மன நிறைவுடன் இவைகள் நடைபெறுகின்றனவா என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.

கடந்த 1568ஆம் 1965ஆம் ஆண்டு காலப்பகுதியில் இரண்டு ஒப்பந்தங்கள் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் செல்வநாயகத்தால்; கைச்சாத்திடப்பட்டன. பின்னர் அவ்வொப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டன.

இந்த ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டதனால்தான் இன்று நாம் இலட்சக்கணக்கான உயிர்களை இழந்தும் கணக்கிடமுடியாத சொத்துக்களை இழந்தும் காணிகளை இழந்துமுள்ளோம். செல்வநாயகத்தினால் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்படாவிட்டால் தமிழினம் இன்று பாரிய இழப்புக்களைச் சந்தித்திருக்காது.

இந்த நாட்டில் இனப்பிரச்சினை இல்லை என்று ஒருபோதும் கூறமுடியாது. ஆனால் இலங்கை அரசு அதனை மறுக்கிறது. இனப்பிரச்சினை இல்லை என்று மூடி மறைப்பதற்கு அரசு ஆங்காங்கே அதுவும் நகர்ப் பகுதியில்தான் சிறு சிறு அபிவிருத்திகளை செய்கின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அபிவிருத்தியை ஒருபோதும் மறுக்கவில்லை. அதனை வேண்டாம் என்றும் சொல்லவில்லை. ஆனால் எம்மினத்தின் பிரச்சினையினை இலங்கை அரசு தீர்த்து வைக்காத பட்சத்திலேதான் நாங்கள் வெளிநாடுகளை வேண்டி நிற்கின்றோம்.

இன்று அமெரிக்கா உட்பட பல நாடுகள் இலங்கை அரசினை எதிர்த்து நிற்கின்றன. அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டு இருக்கின்றன.

ஆனால் அரசாங்கம் தமிழ் மக்;களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகளையும் தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் தட்டிக்கேட்கும் கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு காணப்படுகின்றது.

ஆனால் அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கும் தமிழ் அமைச்சர்மாரும் அமைப்பாளர்களும் தமிழர்களின் பிரச்சினையினை இதுவரையில் தட்டிக்கேட்கவுமில்லை. கேட்கவும் மாட்டார்கள்.

தற்போது இலங்கை அரசாங்கம் முஸ்லிம் மக்களையும் ஒதுக்கிக் கொண்டு வருகின்றது. ஆனால் அற்ப சலுகைகளுக்காக சில முஸ்லிம் அமைச்சர்கள் அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டு இருக்கின்றார்கள்.

அரசாங்கம் அப்பாவி மக்கள் மீது வரிகளைச் சுமத்தியுள்ளது.

மின்சாரக் கட்டணம், பால்மா, பான் போன்ற அத்தியவசியப் பொருட்கள் பலவற்றிற்கும் விலைகளை அதிகரித்துள்ளது நொந்துபோய் இருக்கின்ற மக்களுக்கு இது ஒரு மிகுந்த சுமையாகவுள்ளது.

மின்சாரக் கட்டணத்தினை உடன் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என மக்கள் தற்போது அரசிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .