2026 மே 07, வியாழக்கிழமை

மின்சாரப் பாவனைக்கு விலையை உயர்த்தியமை மக்களுக்கு பாரிய சுமை: அரியநேத்திரன் எம்.பி.

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 22 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

யுத்தத்தின் வடுக்களைச் சுமந்து வாழ்கின்ற வட, கிழக்கு மக்கள் மீது அரசாங்கம் பெரும் வரிகளைச் சுமத்தியுள்ளது. இதன் எதிரொலியாக மின்சாரப் பாவனைக்கும் விலையினை உயர்த்தியுள்ளமை மக்களுக்கு பெரும் சுமையாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

களுவாஞ்சிக்குடி நியூ ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் 47ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை நடைபெற்ற விளையாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

'அரசாங்கம் வெளிநாடுகளில் கடன் பட வேண்டும். அதனை அடைப்பதற்கு எமது மக்கள் வரி செலுத்த வேண்டும் என்றால் அது எந்த விதத்தில் நியாயமாகும்? மக்கள் மீது கட்டவிழ்த்துவிடும் மற்றுமொரு அடாவடித்தனமாகும்.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒழுக்கம் சீர்கெட்டுக் கொண்டு வருகின்றது. இவற்றுக்கு அண்மையில் செங்கலடியில் நடந்த இரட்டைக் கொலைச் சம்பவம் சான்றாகும். 16 வயதுடைய பாடசாலை மாணவர்கள் கொலை செய்யும் அளவிற்குத் துணிந்துள்ளார்கள் என்றால் மாணவர்களின் ஒழுக்கம் எந்தளவிற்குச் சென்றுள்ளது. என்பதனை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டம் பல்வேறு பல துறைகளிலும் சாதனைகளை புரிந்த மாவட்டம். எனவே எமது உறவுகள் தங்களுடைய பிள்ளைகளை ஒழுக்கமிக்கவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும்.

விளையாட்டுக்களிலும் ஏனைய இதர செயற்பாடுகளிலும் பெண்களையும் இணைத்து சம பங்குடன் செயற்பட வேண்டும் இவற்றுக்கு விளையாட்டுக் கழகங்கள் களம் அமைத்துக் கொடுக்க வேண்டும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .