2026 மே 07, வியாழக்கிழமை

அரச அதிகாரிகளை த.தே.கூ குறை பிடிக்கவில்லை: பொன். செல்வராசா

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 23 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


'அரசாங்க அதிகாரிகளை குறை காண்பதற்கோ அல்லது அவர்களின் நடவடிக்கையில் பிழை பிடிப்பதற்காகவோ தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாகரைக்கு செல்லவில்லை. வாகரையின் தற்போதய நிலைமைகளை அறிந்து கொள்வதற்காகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாகரைக்கு சென்றது' என தமிழ் தேசியக் கூடடமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார்.

நேற்று திங்கட்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்கள், அக்கட்சியின் மட்டக்களப்பை சேர்ந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று வாகரைக்கு விஜயம் செய்தது. இவ்விஜயம் தொடர்பாக கருத்து தெரிவித்த போதே பொன் செல்வராசா எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரு அங்கமாக வாகரை பிரதேசம் உள்ளது. இப்பிரதேசம் மிகவும் பின்தங்கிய பிரதேசமாக காணப்படுவதுடன் யுத்தம் மற்றும் சுனாமி போன்ற அனர்த்தங்களினாலும் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு பிரதேசமாக இருக்கின்றது' என சுட்டிக்காட்டினார்.

'இந்த பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் அங்கு செய்யப்பட வேண்டிய முக்கிய விடங்கள், காணிப் பிரச்சினைகள் என்பவற்றை இந்த வகாரை விஜயத்தின் போது நாம் கேட்டறிந்து கொண்டோம்' என்றார்.

'வாகரை பிரதேச செயலகத்திற்கு சென்றதுடன் வாகரை பிரதேச சபை மற்றும் வகாரை விக்னேஸ்வரா மகா வித்தியாலயம் மற்றும் வாகரையிலுள்ள இலங்கை போக்குவரத்து அதிகாரசபை அலுவலகம் என்பவற்றிற்கும் சென்று அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியதுடன் நிலைமைகளையும் கேட்டறிந்து கொண்டோம்' என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த விஜயத்தின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, சி.யோகஸ்பரன், பி.அரியநேந்திரன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.துரைராஜசிங்கம், இரா.துரைரட்ணம், நடராஜா, கிருஸ்ணப்பிள்ளை (வெள்ளிமைல்), பிரசன்னா இந்திரகுமார் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .