2026 மே 09, சனிக்கிழமை

dd

மட்டக்களப்பில் காணி சுவீகரிப்பு; த.தே.கூ கண்டனம்

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 27 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்திலும் இராணுவம் மற்றும் கடற்படைக்கு நிரந்தர முகாம்களை அமைப்பதற்கு அடையாளம் காணப்பட்டுள்ள காணிகளை சுவீகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதானது இராணுவமயமாக்கலை நோக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படுவதாகவும் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

போர் முடிந்துவிட்டது. நாட்டில் சாந்தியும் சமாதானமும் நிலவுகின்றது என  அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் இப்படியான இராணுவ மயமாக்கலை நோக்கும்பொழுது அமைதியும் சமாதானமும் கேள்விக்குறியாகவே உள்ளது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா குற்றஞ்சாட்டியுள்ளார்.

குறித்த காணிகளை அடையாளங் கண்டு சுவீகரிப்பது சம்பந்தமான கூட்டம் மாவட்ட செயலகத்தில் அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்றுள்ளதாக தங்களால் அறிய முடிந்துள்ளதாக தெரிவித்த அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், காணி அமைச்சின் மேலதிக செயலாளர், காணி ஆணையாளர் நாயகம், கிழக்குப் பிராந்திய இராணுவத் தளபதி உட்பட பொலிஸ், இராணுவம், கடற்படை உயர் அதிகாரிகளுடன் பிரதேச செயலாளர்களும் காணி அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளார்கள்.

இம்மாவட்டத்தில் நிரந்தர இராணுவம் மற்றும் கடற்படை முகாம்களை அமைப்பதற்காக காணிகள் அடையாளம் காணப்பட்டு அதனை சுவீகரிப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது வாகரை பிரதேசம் - 04இடங்களும் கிரான் பிரதேச செயலகத்தில் 03 இடங்களும் செங்கலடி பிரதேசத்தில் 01 இடமும் வாழைச்சேனை பிரதேசத்தில் 02 இடங்களும் பட்டிப்பளை பிரதேசத்தில் 01 இடமும் மண்முனை வடக்கு பிரதேசத்தில் 01 இடமும் என மொத்தம் ஆறு பிரதேச செயலக பிரிவுகளிலும் முதற்கட்டமாக 12இ டங்கள் இதற்கென அடையாளம் காணப்பட்டுள்ளதாக நாங்கள் அறிகின்றோம்.

இதற்காக 40 பேர்ச்சஸ் தொடக்கம் 115 ஏக்கர் வரையிலான காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளது. ஏனைய பிரதேச செயலக பிரிவுகளை பொறுத்தளவில் தமிழ்ப் பிரதேச செயலகங்களை மையப்படுத்தி அடையாளங்கண்டு சுவீகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு உள்ளுர் படை அதிகாரிகளுக்கும் பிரதேச செயலாளர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள காணிகளை பொறுத்தவரை நிரந்தர முகாம்கள் அமைப்பதே நோக்கமாக கொண்டது. இப்படி பார்க்கும்போது தற்போதுள்ள முகாம்களை விட அதிகரிப்பதற்கான வாய்ப்புகளே உள்ளன. இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டமும் இராணுவமயப்படுத்தப்படலாம் என மக்கள் அஞ்சுகின்றார்கள்.

ஏற்கனவே அரச முந்திரிகை கூட்டுத்தாபனத்திற்குரிய வாகரைப் பிரதேசத்தில் கடற்படை முகாமிற்காக 1400 ஏக்கர் காணி நிரந்தரமாக சுவீகரிக்கப்பட்டுள்ளது என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

போர் முடிந்துவிட்டது நாட்டில் சாந்தியும் சமாதானமும் நிலவுகின்றது என  அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் இப்படியான இராணுவமயமாக்கலை நோக்கும்பொழுது அமைதியும் சமாதானமும் கேள்விக்குறியாகவே உள்ளது.

எனவே இக்காணிச் சுவீகரிப்பு முயற்சிகளை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்த முயற்சிகள் கைவிடப்படவேண்டுமென அரசாங்கத்தை கோருகின்றோம். இக்காணிச் சுவீகரிப்பை கைவிட்டு ஏற்கனவே போரினால் பாதிக்கப்பட்ட காணி இல்லாத குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்க முன்வரவேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .