2026 மே 06, புதன்கிழமை

நடத்துநர் தாக்கியதில் பயணி வைத்தியசாலையில்

Super User   / 2013 மே 07 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இலங்கை போக்குவரத்துச் சபையின் வாழைச்சேனை சாலையின் பஸ் நடத்துநரால் தாக்கப்பட்ட வயோதிபர் மட்டக்களப்புப் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பொலிஸ் பிரிவு தெரிவித்தது.

ஏறாவூர் பொலிஸ் பிரிவை சேர்ந்த கொம்மாதுறை வாசியான 61 வயதுடைய சிவகுரு வேதநாயகம் எனும் வயோதிபரே மேற்படி பஸ் நடத்துநரின் தாக்குதலுக்குள்ளாகி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் ஞாயிறு பிற்பகல் பிள்ளையாரடி எனுமிடத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மட்டக்களப்புப் பொலிஸிலும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பொலிஸ் பிரிவிலும் முறையிடப்பட்டுள்ளது.

இந்த வயோதிபர் கொம்மாதுறையிலிருந்து மேற்படி பஸ்ஸில் ஏறிக்கொண்டு பிள்ளையாரடிக்கு டிக்கட் பெற்றுள்ளார். டிக்கட் கட்டணம் 27 ரூபாய். முதியவர் ஆயிரம் ரூபாவை பஸ் நடத்துநரிடம் கொடுத்த பொழுது மீதியை இறங்கும் இடம் வந்ததும் பின்னர் தருவதாக பஸ் நடத்துநர் முதியவரிடம் கூறியுள்ளார்.

முதியவர் தான் இறங்கும் இடமான பிள்ளையாரடி வந்ததும் மீதியைக் கேட்க, நடத்துநர் 72 ரூபாவை மீதியாகக் கொடுத்துள்ளார். தான் நூறு ரூபா தரவில்லை எனவும் ஆயிரம் ரூபாவுக்கான மீதியைத் தருமாறும் முதியவர் கேட்டு வாதாடியுள்ளார்.

அதனை மறுத்த பஸ் நடத்துநர் முதியவரை கையிலிருந்த டிக்கட் புத்தகத்தினால் தாக்கி விட்டு பஸ்ஸிலிருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். முகம், உதடு. கை கால்களில் காயம்பட்ட முதியவர் உடனடியாக உறவினர்களால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

அவசர சிகிச்சையின் பின்னர் அவர் தேறி வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. மட்டக்களப்புப் பொலிஸார் வாழைச்சேனைப் பொலிஸாருடன் இணைந்து குறித்த தாக்குதல் தொடர்பான விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .