2026 மே 06, புதன்கிழமை

வெருகல் துவாரகா வித்தியால கதவை இழுத்து மூடி ஆர்ப்பாட்டம்

Super User   / 2013 மே 07 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


வெருகல் துவாரகா வித்தியாலத்திற்கு முன்பாகக் கூடிய பெற்றோர்  இன்று செவ்வாய்க்கிழமை காலை பாடசாலையின் கதவை இழுத்து மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் பாடசாலையில் ஏற்கெனவே 12 ஆசியர்களுக்கு வெற்றிடம் காணப்படுகின்றது. இந்த நிலையில் தற்சமயம் கற்பிக்கும் ஆசிரியர்களில் மேலும் இருவர் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனை கண்டித்தே மேற்படி எதிர்ப்பு ஆர்பாட்டம் இன்று இடம்பெற்றது. வெருகல் துவாரகா வித்தியாலயத்தில் 26 ஆசிரியர்கள் தேவையாக உள்ள நிலையில் தற்சமயம் அதிபர் உட்பட 17 பேர் மாத்திமே கடமையாற்றுகின்றார்கள்.

இவர்களில் இருவருக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டு அவர்கள் நேற்றைய தினம்  வேறு பாடசாலைகளுக்கு மாற்றலாகிச் சென்று கடமையைப் பொறுப்பேற்றுள்ளனர். இதனால் விசனமடைந்த பெற்றோர்கள், பாடசாலை நலன் விரும்பிகள், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், மகளிர் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் கழகத்தவர்கள் என எல்லோரும் இணைந்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் என். ஞானகணேஸ் தெரிவித்தார்.

வெருகல் துவாரகா வித்தியாலயம் தற்சமயம் 410 மாணவர்களைக் கொண்டு 15 ஆசிரியர்களுடன் இயங்கி வருகின்றது. மேலும் 11 ஆசிரியர்களுக்கான வெற்றிடம் நிலவுகின்றது.

க.பொ.த. சாதாரண தரம் வரை வகுப்புக்கள் உள்ள இந்த பாடசாலையில் ஆரம்பக்கல்வி, தமிழ் மொழி, ஆங்கிலம், கணிதம் விஞ்ஞானம், இரண்டாம் மொழி சிங்களம் மற்றும் குடியுரிமைக் கல்வி போன்ற பாடங்களுக்கான ஆசிரியர்கள் இன்றியே வெருகல் துவாரகா வித்தியாலயம் இயங்கி வருவதாக பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் எஸ். முரளீதரன் தெரிவித்தார்.

இடமாற்றம் வழங்கப்பட்ட புதிய பட்டதாரி நியமன ஆசிரியர்கள் இருவரும் மூதூர் பட்டித்திடல் பாடசாலைக்குச் சென்று நேற்றைய தினம் கடமைப் பெறுப்பேற்றுள்ளனர்.

பொதுமக்களின் எதிர்ப்பையடுத்து மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ. விஜயானந்தமூர்த்தி, பிரதேச செயலாளர் பி. தனேஸ்வரன், சேருநுவர பொலிஸ் பதில் பொறுப்பதிகாரி கே.எல். சுகதபால, பாடசாலை அதிபர் ரீ. சொக்கலிங்கம், பிரதேச செயலக உதவித் திட்டமிடல் அதிகாரி வி. நவநீதன் உட்பட இன்னும் பல அதிகாரிகள் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.

இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியைகள் இருவரினதும் இடமாற்றத்தை உடனடியாக இரத்துச் செய்வதோடு  இடமாற்றம் வழங்கப்பட்ட இருவரும் நாளைய தினம் தொடக்கம் மீண்டும் வெருகல் முகத்துவாரம் துவாரகா வித்தியாலயத்தில் கடமையேற்பர் என பாடசாலை குறிப்புப் பதிவேட்டில் மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் எழுத்து மூலம் உறுதியளித்ததை தொடர்ந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இவ்வாண்டு  முதலாம் தரத்தில் சேர்ந்து கொண்ட 46 மாணவர்களுக்கும் கடந்த ஐந்து மாதங்களாக ஒரு எழுத்தைத் தானும் கற்பித்துக் கொடுக்க இப்பாடசாலையில் ஆசிரியர் இல்லை பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

வெருகல் பிரதேசம் கடந்த கால ஆயுத வன்முறைகளினாலும் சுனாமி கடற் பேரலைத் தாக்கத்தினாலும் வெகுவாக பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .