2026 மே 07, வியாழக்கிழமை

இந்திய வீடமைப்பு திட்டத்தில் பாரபட்சம்: இந்திய உயர்ஸ்தானிகருக்கு கடிதம்

Super User   / 2013 மே 15 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. ருத்திரன்

மட்டக்களப்பு  மாவட்டத்தில்  இந்திய உதவி வீடமைப்பு திட்டத்தில் முதற்கட்ட கிராமங்கள் தெரிவு தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் தமது  கவலை மற்றும் ஆட்சேபனையை தெரிவித்து இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகருக்கு அவசர கடிதமொன்றையும் அவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்திய உதவி வீட்டுத் திட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் 4,000 வீடுகள்  அமைக்கப்படவுள்ளன. குறித்த வீடுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3,000 வீடுகள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில்  முதற்கட்டமாக பெரியபுல்லுமலை (தமிழ் கிராமம்) 109 வீடுகள், உறுகாமம் (முஸ்லிம் கிராமம்) 103 வீடுகள், மங்களாகம (சிங்கள கிராமம்) 89 வீடுகள் என செங்கலடி பிரதேச செயலக பிரிவில் 301 வீடுகள் அமைக்கப்படவுள்ளன.

இந்நிலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த வீடுகளின் நிர்மாணப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான  பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெத்தினம், கி.துரைராஜசிங்கம், ஜி.கிருஸ்ணபிள்ளை, பிரசன்னா இந்திரகுமார், மா.நடராசா மற்றும் கோ.கருணாகரம் ஆகியோர் கூட்டாக இந்திய உயர் ஸ்தானிகருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 7ஆம் திகதி  பிரதி உயர்ஸ்தானிகரின் இல்லத்தில் இது தொடர்பாக நடைபெற்ற கூட்டமொன்றில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீறும் வகையில் இந்நடவடிக்கைகள் அமைவதாக தெரிவித்துள்ளனர் இக்கடிதத்தில் தெரிவித்துள்ளனர்..

அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"கடந்த மார்ச் மாதம் 7ஆம் திகதி  இது தொடர்பாக நடைபெற்ற  கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இதற்கு தலைமை வகித்தார். இந்த கூட்டத்தின் தீர்மானப்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் 2,000 வீடுகளும் திருகோணமலை மற்றும் மாவட்டங்களில் தலா 1000 வீடுகளும் அமைப்பது  என முடிவு எடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதற்கட்டமாக அமைக்கப்படவுள்ள 300 வீடுகளையும் தலா 100 என்ற அடிப்படையில் வவுணதீவு, கிரான் மற்றும் வெல்லாவெளி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. வெல்லாவெளி மற்றும் வவுணதீவு பிரதேசங்களில் இதற்கான இடங்களும்  பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் நடைபெற்ற கூட்டங்களில் அடையாளமும் காணப்பட்டது.

தற்போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின்  நடவடிக்கையின் பேரில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு பதிலாக செங்கலடி பிரதேச செயலக பிரிவிலுள்ள மங்களாகம, றூகம், பெரிய புல்லுமலை ஆகிய கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகின்றோம்.

மங்களாகம கிராமத்தை பொறுத்தவரை யுத்த பாதிப்புக்குள்ளாகவில்லை. அது மட்டுமன்றி அம்பாறை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்ட 1000 வீடுகளும் தற்போது இரத்து செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே பிரதி உயர் ஸ்தானிகரின் இல்லத்தில் தாங்களும் கலந்துகொண்ட கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீறும் செயலாகவே உள்ளது.

இந்நிலையில் தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை நீதியற்ற நியாயமற்ற செயலாகவே நாம் கருதுகின்றோம். இந்த விடயத்தில் ஆழ்ந்த கவலையையும் ஆட்சேபனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்" என அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .