2026 மே 09, சனிக்கிழமை

பாவற்கொடிச்சேனையில் குடிநீர், மலசலகூட வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை

Suganthini Ratnam   / 2013 மே 16 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பாவற்கொடிச்சேனை கிராம அலுவலகர் பிரிவில் பொதுமக்களுக்கான குடிநீர் மற்றும் மலசலகூட வசதி, சுகாதாரக் கல்வி ஆகியன அடங்கிய  செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட கரித்தாஸ் எகேட் நிறுவகமானது கபொட் யூகே (CAFOD UK) நிறுவகத்தின் நிதியுதவியுடனும் மாவட்ட செயலாளர் மற்றும் பிரதேச செயலாளரின் அனுமதியுடனும் இந்தச் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது.

பாவற்கொடிச்சேனை கிராம அலுவலகர் பிரிவில் உள்ள கண்ணகி நகர், பாவற்கொடிச்சேனை, கற்பக்கேணி,  பழங்குடியிருப்புமடு, ஊற்றுமடு ஆகிய கிராமங்களில் 19 பொதுக்கிணறுகளும் 06 குழாய்க்கிணறுகளும்  115 மலசலகூடங்களும் அமைத்துக் கொடுப்பதுடன்,  சுகாதாரக் கல்விச் செயற்றிட்டமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்தச் செயற்றிட்டம்  பற்றிய கூட்டம் பாவற்கொடிச்சேனை மகாவித்தியாலயத்தில் இன்று வியாழக்கிழமை காலை  நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தின்போது இந்தச் செயற்றிட்டம் பற்றி பொதுமக்களுக்கு  விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. இந்தச் செயற்றிட்டத்திற்கான ஒத்துழைப்பை அனைவரும் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டதாக கரித்தாஸ் எகேட் நிறுவக ஊடகப்பிரிவு பொறுப்பாளர் எஸ்.மைக்கல் தெரிவித்தார்.
 
மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா, மண்முனை மேற்கு கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.கணேஷ், பொது சுகாதார  உத்தியோகஸ்தர் கே.இயேசுராஜன், மட்டக்களப்பு கரித்தாஸ் எகேட் நிறுவக நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் எஸ்.ஓ.ஜெயானந்தன் உள்ளிட்ட பலர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .