2026 மே 06, புதன்கிழமை

பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அலிசாஹீர் மௌலானாவுக்கு ஏ.ஆர்.பெறோஸ் அழைப்பு

Kogilavani   / 2013 மே 22 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


ஏறாவூர் நகர சபையில் இடம்பெற்றுவரும் ஊழல் மோசடி தொடர்பாக பகிரங்க விவாதமொன்றுக்கு வருமாறு ஏறாவூர் நகர தலைவர் அலிசாஹீர் மௌலானாவுக்கு ஏறாவூர் நகரசபை உறுப்பினர் ஏ.ஆர்.பெறோஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

அவரின் அலுவலகத்தில் திங்கட்கிழமை மாலை நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.
அந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

'எமது சமூகத்திற்கு இந்தத் தவிசாளரின் வழிகாட்டலில் எதையாவது செய்யலாம் என்ற நம்பிக்கையில்தான் நான் மிகுந்த ஆர்வத்துடன் நகரசபைக்குள் காலடி எடுத்து வைத்தேன்.

அதனைத் தொடர்ந்து சுமார் 2 வருட காலமாக அனைத்து விடயங்களிலும் கூட்டுப்பெறுப்புடன் செயற்பட்டுக் கொண்டு சபையில் மட்டுமே பிழைகளை சுட்டிக்காட்டி எனது அதிருப்தியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தேன்.

இதுவரைக்கும் அத் தவறுகள் சரிசெய்யப்படாமல் எவ்வித தூரநோக்கும் இல்லாமல் ஒரு பொறுப்பற்ற விதத்தில் இச்சபை நடவடிக்கையானது சென்றுகொண்டிருப்பது மிக மனவேதனையளித்தது.

இச்சபையினுடைய நடவடிக்கைகளை ஜனநாயகத் தன்மையுடனும் வெளிப்படைத் தன்மையுடனும் இயங்கும் வரைக்கும் எந்தச் சவால்கள் வந்தாலும் நான் சந்திக்க தயாராகவுள்ளேன்.

என்னை சின்னப்பிள்ளை என்று கூறியிருந்தீர்கள் உண்மைதான். ஆனால் உண்மையை சொல்லுவதற்கு பெரிய மனிதராகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

நான் சின்னப்பிள்ளை என்று தெரிந்துதான் 24 வயதைகூட எட்டாத நிலையில் 2011 ஆம் ஆண்டு என்னை இந்த நகரசபைக்கு மக்கள் பிரதிநிதியாக தெரிவு செய்து அனுப்பியிருக்கின்றார்கள்.

எனவேதான், நான் இந்த ஊடகவியலாளர் சந்திப்பினை ஏற்படுத்தியமைக்கு பிரதான நோக்கம் 16 ஆம் திகதி ஏறாவூர் நகரசபை தவிசாளரினால் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது என்னைப் பற்றி மிக மோசமான முறையில் விமர்சித்திருந்தார்.

ஆனால் நான் தனிப்பட்ட ரீதியில் யாரையும் விமர்சிப்பதற்காக வேண்டி இவ் ஊடகவியலாளர் சந்திப்பினை ஏற்பாடு செய்யவில்லை.

நான் அவரை வேண்டுமென்று அபாண்டம் சொல்வதாக தவிசாளர் ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியிருந்தார். நான் ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கை சபையில் ஒரு போதும் விவாதிக்கவில்லை என்று ஒரு வளர்ந்த அரசியல்வாதி சிறுபிள்ளை தனமாக ஊடகங்களுக்கு கூறுவது நகைச்சுவையான விடயமாகும்.

கடந்த 28.04.2013 அன்று நடைபெற்ற அமர்வில் என்னால் அவருக்கு எதிரான குற்றப் பிரேரணை முன்வைக்கப்பட்டது. அப்பிரேரணைக்கு ஆராய்வதற்கு அவராகவே குழு அமைத்தார். அக்குழுவில் அவருடன் இருக்கின்ற இரண்டு சக உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டார்கள். இது எந்த வகையில் ஜனநாயகப் பண்பு?

இன்றுடன் கடந்த அமர்வு நடைபெற்று சுமார் 23 நாட்களாகியும் இது வரைக்கும் எதுவிதமான விசாரணைகளும் இடம்பெறவில்லை. ஆனால் நிதிக்குழுவில் இது சம்பந்தமாக ஆராய்ந்து எமது அறிக்கைகளை சபைக்கு அன்றைய அமர்வில் வழங்கியபோது அவ்வறிக்கையை தவிசாளர் ஏற்றுக்கொள்ளவில்லை.

அதில் பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்களிடம் நாம் வாக்குமூலங்களைப் பெற்றபோது அவர்களினால் மிகச்சங்கடமான சூழ்நிலையில் வெளிப்படையாக பதிலளிக்க முடியாமல் இருந்தார்கள். தொழிலுக்கு சில இடையூறுகள் ஏற்படலாம் என்ற அச்சத்திலேயே இவ்வாறு செய்தார்கள்.

உதாரணமாக சிலவற்றை சொல்லப்போனால் ஏறாவூர் நகர சபைக்கு சொந்தமான மின்பிறப்பாக்கி மற்றும் சீமெந்து கலவை இயந்திரம் போன்றவை சொந்தப் பாவனைக்காகவும் சில அரசியல்வாதிகளின் ஆதரவாளர்கள் சிலரின் பாவனைக்காகவும் மாதக்கணக்கில் வெளியில் எடுத்து செல்லப்பட்;டு தற்பொழுது பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது.

அதேபோன்று சிற்றுண்டிச் செலவுகளை செய்வதற்காக ஏறாவூர் நகர பிரதான வீதியில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலில் சிற்றுண்டி உணவுப் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டு அதற்கான பணத்திணை எவ்வித அறவீடுகளும் இல்லாமல் அங்கு கழிவகற்றுவதன் மூலம் ஈடுசெய்யப்படுகின்றது.

இவ்வாறான பல ஊழல்கள் தாண்டவமாடிக் கொண்டிருப்பதை தடுத்து நிறுத்தும் முகமாக என்னால் வினா எழுப்பப்பட்டதனால் இன்று என்னை நிதிக்குழுவிலிருந்து நீக்குவதற்கு ஏறாவூர் நகரசபை தவிசாளர் முடிவெடுத்துள்ளார்.

ஜனநாயகத்தை மதிக்கின்ற நாகரிகம் அரசியல் தெரிந்த தவிசாளர் மௌலனாவின் சாணக்கியம் இதுதானா? ஓவ்வொரு மாதமும் நடாத்தப்படுகின்ற நிதிக்குழுக் கூட்டம் இம்மாதம் நடைபெறவில்லை. மற்றும் மாதாந்த அமர்வில் என்னை நிதிக்குழுவிலிருந்து நீக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்தப் பிரச்சினை அலிசாஹிர் மௌலானாவாகிய உங்களுக்கும் பிரௌஸ் ஆகிய எனக்குமான பிரச்சினையல்ல. இது வரி செலுத்துவோரின் வரிப்பணத்தின் அமானிதத்திற்கும் அதிகார வர்க்கத்தின் நிதி துஷ்;பிரயோகத்துக்கும் இடையிலான பிரச்சினையாகும்.

எனவே, ஏறாவூர் நகரசபையில் நடைபெறுகின்ற நிதி துஷ்பிரயோகங்களை தடுத்து நிறுத்தி வெளிப்படுத்துவதே என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு என்னால் செய்யப்படுகின்ற அளப்பரிய சேவையாகும்.

அனைத்துமே வெளிப்படுத்தன்மை என்று இடத்துக்கு இடம் வாய் கிழியும் அளவு பேசுகின்றீர்கள் இதுதானா தங்களது வெளிப்படுத்தன்மை. தங்களது ஊழல்களை சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்ளப் பழகுங்கள். அதைவிடுத்து ஜனநாயகத்திற்கு முரணாக செயற்பாடுகளை செய்யாதீர்கள்.

அவரின் வாகனத்திற்கு மிதமிஞ்சிய எரிபொருள் பாவனை செய்யப்படுவதாக நான் சுட்டிக்காட்டியதற்கு தவிசாளர், நகர சபையினுடைய விவகாரங்களை பார்ப்பதற்காகவே அடிக்கடி கொழும்பு செல்வதாக பதிலளித்திருந்தார்.

இதற்கான அனுமதியை உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் போன்றவர்களிடமிருந்து எழுத்து மூலமாக பெற்றுள்ளேன் என்று பதிலளித்திருந்தார்.

தவிசாளர் அவ்வாறான ஒரு அனுமதியை சபைக்கு சமர்ப்பிக்க முடியுமா? நான் இச்சந்தர்ப்பத்தில் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளரை கேட்க விரும்புகின்றேன்.

அவ்வாறானதொரு அனுமதியை வழங்கியுள்ளார்களா? அவ்வாறு என்றால் மக்களினுடைய வரிப்பணத்தினை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது கடமை இல்லையா?

எனவே இவற்றினை கருத்திற்கொண்டு இதற்குப் பொறுப்பான அதிகாரிகளிடம் நாம் வினயமாக கேட்டுக் கொள்வது யாதெனில் இதற்கு ஏற்ற நடடிடிக்கைகளை எடுத்து இச்சபை நிதியை பாதுகாக்க  முன்வாருங்கள் எனக்கேட்டுக் கொள்கின்றேன்

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு மாதம் வழங்கப்படுகின்ற எரிபொருளுக்கான கொடுப்பணவே 40,000 ரூபாய் மாத்திரமே.
ஆனால் தவிசாளர் மௌலானாவின் வாகனத்திற்கான எரிபொருள் செலவு ரூபா. 40,000 ஐயும் மிதமிஞ்சியதாக காணப்படுகிறது. ஏறாவூர் நகரசபை தவிசாளர் மௌலானா கொழும்பு மாநகரத்திற்கு மேயரல்ல. ஏறாவூர் நகரசபைக்கே தவிசாளர் என்பதை அவர் விளங்கிக்கொள்ள வேண்டும்.

மாதம் ஒன்றில் கிழமைக்கணக்காக கொழும்பில் வசிக்கின்றார். இதனால் எமது மக்களின் தேவைப்பாடுகளின் பட்டியல் நீண்டுகொண்டு செல்கிறது. அடிக்கடி நகரசபை வாகனத்தில் கொழும்பு பயணிப்பதனால் எமது மக்கள் அடைந்த நன்மைகள் தான் என்ன? இதை  மனந்திறந்து கூறுங்கள்.

கடந்த 2012 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரைக்கும் வரவு செலவுத் திட்டத்தில் மக்களின் அபிவிருத்தி பணிக்காக எவ்வளவு ஒதுக்கீடு செய்துள்ளார்? ஆனால் அவருடைய நிர்வாக செலவுக்காக 2010, 2011 உடன் ஒப்பிடும்போது 50 வீதத்தால் அதிகரித்துள்ளது.

மக்கள் ஒன்றை மாத்திரம் மிகத் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். ஏறாவூர் நகர சபையினுடைய தற்போதைய காசு மீதியானது அதாள பாதாளத்தினை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலை இன்னும் 2 வருடங்களுக்கு தொடருமாயின் எமது சபையினுடைய கட்டிட சுவர்கள் மாத்திரமே எச்சமாகும்.

ஏறாவூர் நகர சபையின் 25 இலட்சம் நிலையான வைப்புக்கணக்கில் எம்மால் இடப்பட்டுள்ளதென்றும் கடந்த நிர்வாகத்தில் வெறுமனே இரண்டு இலட்சம் மாத்திரமே இருப்பில் இருந்ததெனவென்றும் தவிசாளர்; தனது மறுப்பு அறிக்கையில் கூறியிருந்தார்.

தவிசாளருக்கும் இச்சேமிப்புக்கும் எவ்வித தொடர்பும் கிடையாதே. இச்சேமிப்பானது 2004ஆம் ஆண்டு சேமிப்பில் இடப்பட்டவையாகும்.
அதேபோன்றுதான் ஏறாவூர் நகரத்தில் இடம்பெறுகின்ற அபிவிருத்திகள் யாவற்றிற்கும் தான்தான் பொறுப்பு என்று மார்பு தட்டி கொண்டு இருக்கின்றார்.

இவர் ஏறாவூர் நகர சபை பொறுப்பேற்றதிலிருந்து இவரின் முயற்சியினால் எதை கொண்டுவந்துள்ளார்? யார் தவிசாளராக இருந்தாலும் கிடைக்கின்ற நிதியை கொண்டுதான் இந்நகரத்தில் அபிவிருத்தி வேலைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

பி.எஸ்.டி.ஜி. தெயட கிருள , கம நெகும, நெல்சிப் மற்றும் ஜெய்கா திட்டம் போன்றவற்றின் நிதிகளை கொண்டு செய்கின்ற அபிவிருத்தி வேலைகள் மாத்திரமே இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இதற்காக தவிசாளர் மௌலானா ஒருபோதும் மார்பு தட்ட முடியாது.

இங்கு மத்திய அரசாங்கத்தின் அமைச்சர் பஸீர் சேகுதாவூத் இருக்கிறார், மாகாண அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் இருக்கிறார், முன்னால் மாகாண அமைச்சர் சுபைர்ஹாஜியார் இருக்கிறார். மற்றும் நெல்சிப் மற்றும் பி.எஸ்.டி.ஜ நிதிகள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் உரியதாகும்.

இந்நிதிகளை பெறுவதற்கு மாதம் ஒன்றிற்கு 450 தொடக்கம் 500 லீற்றர் டீசல் பாவனை செய்ய வேண்டியதில்லை. நகரசபைக்குள் சும்மா உட்கார்ந்தாலே நிர்வாகத்தினையும் சிறப்பாக செய்யலாம் அந்நிதிகளும் கிடைக்கும்.

இல்லை அவ் அபிவிருத்திகள் அனைத்தும் இவரின் முயற்சியினால் வந்தவை என்றால் எதற்காக இரவோடு இரவாக காட்சிப்படுத்தப்பட்ட பெயர்ப்பலகைளில் இவரது புகைப்படங்களை பதிக்கின்றார்.

தேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டத்தின் கீழ் 70 வீதிகள் புனரமைத்ததாக கூறியிருந்தார். இதற்கும் இவருக்கும்; என்ன சம்மந்தம்? இவர் ஏறாவூர் நகரத்திற்கு தவிசாளரா? இல்லை முழு ஏறாவூருக்கும் தவிசாளரா? இவரது அதிகார எல்லை எதுவரைக்கும் என்று புரிந்துகொள்ள வேண்டும். முழு ஏறாவூருக்கும் இவர் வீதி போட்டதாக கூறுவது எவ்விதத்தில் உண்மையானது.

கடந்த வருடம் பிரதான வீதி விஸ்தரிப்புக்கான அனுமதி வீதி அபிவிருத்தி அதிகார சபையினூடாக கோரப்பட்டபோது, அத்தீர்மானமானது ஒரு வழிப்பாதை ஏறாவூர் ஆற்றங்கரை ஓரமாகவும் மறுவழிப்பாதை ஏறாவூர் பிரதான வீதியூடாகவும் அமைப்பதென்று அவசர அவசரமாக சபை அமர்வில் ஒரு தீர்மானம் நிறைவேற்றினார்.

நான் அத்தீர்மானத்தினை மிக வன்மையாக எதிர்த்தேன்.

அன்று அவர் அவ்வாறான அத் தீர்மானத்தினை நிறைவேற்றி இருக்காவிட்டால் இன்று எமது பிரதான வீதி சன நெரிசல் நிறைந்த இடமாகவும் விபத்துக்கள் மலிந்த இடமாகவும் காணப்பட்டிருக்காது.

எமது பிரதான வீதி மிக அழகாக காட்சியளித்திருக்கும்.

தற்பொழுது எமது நகர சபை கட்டடம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்திலிருந்த கட்டடத்திற்கு சுமார் ஒன்றரை வருடத்திற்கு முன்னால் 7.5 லட்சம் செலவு செய்யப்பட்டது.

ஆனால் இன்று உறுதியான கட்டடம் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளது. உறுதியற்ற நிலையில் உள்;ள கட்டடத்தில் அலுவலக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு பல திட்டங்கள் சரியான அணுகுமுறைகள் மற்றும் திட்டமிடல்கள் இல்லாமல் மக்களின் வரிப்பணங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனது.

நேகர சபையை பொறுப்பேற்று முதலாம் அமர்வில் அவர் செய்த கொள்கை பிரகடனத்தை மறந்துவிட்டாரா? அவற்றில் சிலவற்றை நினைவூட்டலாம் என்று நினைக்கின்றேன்.

மணிக்கூட்டு கோபுரத்தை திருத்தியமைத்தல், பிரதான வீதி ஓரங்களில் பஸ் தரிப்பு நிலையங்களை நிறுவுதல், சர்வதேச தரம் வாய்ந்த பாலர் பாடசாலைகளை நிறுவுதல், வட்டாரங்கள் தோறும் நூலகங்களை அமைத்தல், நீர் விநியோக பணிகளை ஆரம்பித்தல், ஏறாவூர் பொதுச் சந்தை கட்டடத்தை அழகுபட அமைத்தல், புதிதாக தீயனைப்பு பிரிவை ஏற்படுத்தல், சுகாதார சேவைகளை மேம்படுத்தல், வீதிகள் தோறும் வர்த்தக வலயங்களை உருவாக்குதல்.

பல்தொகுதி விற்பனை நிலையங்களை அமைத்தல், உயிரியல் முறையிலான விளங்கறு மனை அமைத்தல், மையவாடிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், அவசரகால நிலமைகளை கையாளுவது பற்றி கவனம் செலுத்துதல், வட்டார ரீதியான ஆலோசனை குழுக்களை அமைத்தல், வரி செலுத்துனர் சங்கம் ஒன்றை ஆரம்பித்தல், தரம் மிக்க சிறுவர் பூங்காக்களை ஒவ்வொரு வட்டாரத்திலும் அமைத்தல், அஹமட் பரீட் விளையாட்டு மைதானத்தை நல்லதொரு விளையாட்டு மைதானமாக மாற்றியமைத்தல், ஆற்றங்கரை ஓரத்தை அழகு படுத்தல் ஆகியவைகளாகும்.

இவற்றில் எத்தனை விடயங்களை நிறைவேற்றியுள்ளார்.? இவை அனைத்துக்கும் மேலாக எமது மாடு அறுக்கும் தொழுவத்தின் இன்றைய நிலைதான் என்ன? மாட்டிறைச்சிக் கடைக்காரர்கள் மக்களுக்கு அவ் இறைச்சியை சுத்தமாகக் கொடுப்பதற்கு படுகின்ற பாட்டினை அவர்கள்தான் அறிவார்கள்.

இதுசம்பந்தமாக நான் பல அமர்வுகளில் பேசி இருக்கின்றேன். ஆனால் இதுவரைக்கும் எவ்வித தீர்வுகளுமே எமது மக்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு நகரசபை தவிசாளரே பெறுப்புக்கூறவேண்டும்.

எனவே, வெற்று அரசியலுக்காக யாரையும் விமசிக்க வேண்டிய தேவை எனக்கில்லை. அல்லாஹ் மிகச்சிறிய வயதில் எனக்கு தந்த அமானிதத்தினை பாதுகாக்க வேண்டியதும் செயற்படுத்த வேண்டியதும் எனது கடமை என்ற அடிப்படையில் பிழைகளை மாத்திரமே நான் சுட்டிக்காட்டுகின்றேன்.

இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பின் ஊடாக எனது கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்கலாம் என்ற நல்லெண்ணத்தில்தான் இச்சந்திப்பை ஏற்பாடு செய்தேன்.

நான் உண்மைக்கு புறம்பாக எதுவும் சொல்லவும் இல்லை. கடந்த காலங்களில் இருந்து சமூக சேவையில் நாட்டம் கொண்டு இந்த ஊரினுடைய அபிவிருத்தியில் நானும் ஒரு பங்குதாரராக வரவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் இந்த அரசியலில் கால்பதித்தேன்.

மற்றவர்களைப் போல் எதிரே சொல்ல முடியாமல் மொட்டையாக துண்டுப் பிரசுரங்களை வெளியிடுவதற்கு எனக்கு எந்தத் தேவையும் இல்லை. நான் எச்சந்தர்ப்பத்திலும் உண்மைக்கு புறம்பாக எதையும் பேசவேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறான எனது அறிக்கையின் பின்பு எனக்கு எதுவும் நிகழலாம். ஏன் என்று சொன்னால் இதற்கு முன்னதாகவே நான் அச்சுறுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றேன். ஆனால் எச்சந்தர்ப்பத்திலும் நான் உண்மையையும் நேர்மையையும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை. ஊழலை ஒழித்து நல்லாட்சியை ஏறாவூர் நகரத்தில் நிலைநாட்ட தனி ஒருவனாக இருந்தாலும் எனது இறுதி மூச்சுவரை போராடுவேன் எனக்கேட்டுக் கொள்கின்றேன்' என மேலும் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் எம்.முகைதீன் பாவாவும் கலந்துகொண்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .