2026 மே 06, புதன்கிழமை

காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைக்கு உரித்தாக வேண்டும்: இரா. துரைரட்ணம்

Menaka Mookandi   / 2013 மே 23 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

'தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு வழங்கப்படும் வரை 13ஆவது திருத்தச்சட்டமும் அதில் உள்ளடங்கிய காணி, பொலிஸ் அதிகாரங்களும் மாகாண சபைக்கு உரித்தாக இருக்க வேண்டும் என்ற பிரேரணையை கிழக்கு மாகாண சபையின் அடுத்த அமர்வுக்கு சமர்ப்பித்துள்ளதாக' மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெட்ணம் தெரிவித்தார்.

'இலங்கை மக்களுக்கு 13 திருத்தச் சட்டத்தினால் வழங்கப்பட்ட பிராந்திய அதிகாரப் பரவலாக்கல் நடைமுறையே சிறுபான்மை மக்களின் அரசியல் தீர்வுக்கான ஆரம்பப்படியாகும். ஆங்கிலேயர் கையளித்த சுதந்திரத்தில் இலங்கைச் சிறுபான்மையினர் கருத்தில் கொள்ளப்படவில்லை. இதனால் அகிம்சை வழியில் போராட வேண்டிய தேவை ஏற்பட்டது. இது பலனளிக்காததால் ஆயுதப்போராட்டம் உருவாகியது.

இப்போராட்டம் இலங்கையில் வாழும் ஏனைய இனங்களுக்கு எதிரானதல்ல. இது ஜனநாயக ரீதியாக தமிழர் தம் அரசியல் உரிமைகளை நிலை நாட்டுவதற்கு தோற்றுவிக்கப்பட்ட ஒன்றாகும்' என்று அவர் குறிப்பிட்டார். 

'1985இல்  திம்பு - பேச்சுவார்தை, 1987 இலங்கை -இந்திய ஒப்பந்தம், 1990 ஜனாதிபதி பிரேமதாச - புலிகள் இரகசிய ஒப்பந்தம், 1994 சந்திரிகா - புலிகள் ஒப்பந்தம், 2002 நோர்வே அனுசரணையுடன் ரணில் - பிரபா ஒப்பந்தம், 2004 சுனாமி இடைக்கால அரசு உருவாக்குல் ஒப்பந்தம் எனப் பல ஒப்பந்தங்கள்  கைசாத்திடப்பட்டிருந்தும் இவை எதுவும் தமிழ் மக்களுக்கு பலனளிக்கவில்லை' என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

'ஏனெனில் இவ்வொப்பந்தங்கள் யாவும் தமிழ் மக்களின் சுயநிர்ணயக் கோட்பாட்டை வலியுறுத்தி நின்றவையாகும். இருந்தும் 1987இல் உருவாக்கப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தில் சட்டவாக்கமானது என்பது குறிப்படத்தக்கதாகும்' என்றார்.

'இவ்வொப்பந்தத்தின் மூலம் தமழ் மக்களுக்கு அளிக்கப்பட்ட தன்னாட்சி அதிகாரங்கள் இலங்கை தீவில் வாழும் சகல மக்களுக்கும் ஏதுவாக இருந்த போதிலும் எந்த மக்களுக்காக அந்த அதிகாரம் வழங்கப்பட்டதோ அந்த அதிகாரம் கிடைப்பதை இல்லாதொழிப்பதிலேயே சிங்கள இனவாத அரசு குறியாக இருந்தது.

இதன் காரணமாக இந்த மாகாண பிராந்திய அதிகார முறையை குறிப்பாக வட - கிழக்கில் அமுல்படுத்தாமல் ஏமாற்றியது. சர்வசன வாக்கெடுப்பின் முலம் வட -கிழக்கை இணைப்பதற்குப் பதிலாக வாக்கெடுபின்றியே நிதிமன்ற ஆணை முலம் கிழக்கைப் பிரித்தது.

மேலும் மாகாணங்களுக்கு எஞ்சியிருந்த பொலிஸ் அதிகாரங்களையும் காணி அதிகாரங்களையும் கூட தற்போது இல்லாதொளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. 17ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் திவிநெகும திட்டத்தை அமுல்படுத்தி மாகாணசபை கிராமங்களில் சுயமாக மேற்கொள்ளும் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்தது.

மேலும் வடமாகாணத் தேர்தலுக்கு முன் பொலிஸ், காணி, அதிகாரங்களையும் இல்லாதொழிக்கும் நடவடிக்கையில் முனைப்புக் காட்டி வருகின்றது. இந்த வகையில் இலங்கை அரசு தமிழ் மக்கள் மத்தியில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அப்பட்டமமான இனவாத நடவடிக்கை என்பது வெளிப்படை.

ஆயினும் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட 13ஆவது திருத்தச்சட்ட அதிகாரங்களை இ;ல்லாதொழிப்பது என்பது இலகுவான காரியமல்ல இதனை இலங்கை அரசியல் யாப்பின் பிரகாரம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடனும் அல்லது 18 ஆவது திருத்தச்சட்டத்திலன் முலம் தற்போதைய இலங்கை ஜனாதிபதியின் அதிகாரத்தின் முலம் இல்லாதொழிக்க முடியும்.

இத்தகைய செயல்பாட்டின் மூலம் அயல் நாடான இந்தியாவின் இராஜதந்திர ரீதியாக முழுமையான எதிர்பை சந்திக்கவேண்டி ஏற்படும். இலங்கை தீவில் சிறுபான்மை சமூகத்தின் மத்தியில் உள்ள ஓரிருவீத செல்வாக்கையும் இழப்பதோடு வட - கிழக்கில் அரசிற்க்கு ஆதரவாக உள்ள கட்சிகளின் எதிர்ப்பையும் சம்பாதிக்க வேண்டி ஏற்படும். மேலும் தமிழர் உரிமைகள் பேசும் கட்சிகளின் முழுழைமயான எதிர்பை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும்
இத்தகைய சூழ்நிலையை உருவாக்குவதன் மூலம் தமிழ் மக்கள் விரும்பியோ விரும்பாமலோ மீண்டும் தீர்க்கமானதொரு முடிவை எடுக்கவேண்டிய நிற்பந்தத்திற்கு உள்ளாகுவார்கள்.

இத்தகைய சூழல் கிழக்கு மாகாணத்திலும் பிரதிபலிப்பை ஏற்படுத்தும் இதன்தாக்கம், சர்வதேச மட்டத்தில் அரசியல் பொருளாதார ரீதியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் இராஜதந்திர ரீதியாக ரீதியில் பல பின்னடைவுகளையும் இலங்கை அரசு எதிர்நோக்க வேண்டி ஏற்படும். இது இலங்கை தீவின் நிலையான அமைதிக்கு பங்கம் விளைவிப்பதோடு அல்லாமல் சர்வதேச ரீதியில் ஒதுக்கப்பட்ட ஒரு நாடாக கருத்தில் கொள்ளப்படும்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .