2026 மே 09, சனிக்கிழமை

காத்தான்குடியில் ஹஜ்ஜாஜிகளுக்கான கூட்டம்

Suganthini Ratnam   / 2013 மே 26 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


இலங்கையிலிருந்து ஏற்கெனவே ஹஜ்ஜுக்கு சென்ற ஒருவர் 10 வருடங்களுக்கு பின்பே அவர் மீண்டும் ஹஜ்ஜுக்கு செல்ல முடியும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணி;ப்பாளர் எம்.எச்.எம்.சமீல் நழீமி தெரிவித்தார்.

இந்த ஆண்டு புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக செல்லவுள்ள ஹஜ்ஜாஜிகளுக்கான கூட்டம் காத்தான்குடியில் ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

'ஹஜ் கோட்டாவை கருத்திற்கொண்டு இலங்கையிலிருந்து 10 வருடங்களுக்கு ஒருமுறை மாத்திரமே ஒருவர் ஹஜ்ஜுக்கு செல்ல முடியும் என்பதை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதேபோன்று பதில் ஹஜ்ஜுக்காகவும் செல்ல முடியாது.

இந்த முறை இலங்கையிலிருந்து ஹஜ்ஜுக்கு செல்வதற்காக 7,800 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் எமது இலங்கைக்கு, சவூதி அரேபியா அரசாங்கம் 2,800 பேருக்கு மாத்திரமே இந்த ஆண்டு ஹஜ்ஜுக்கு செல்வதற்கான கோட்டாவை வழங்கியுள்ளது.  இதை மையப்படுத்தி சில நடைமுறைகளை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பின்பற்ற தீர்மானித்துள்ளது.

அதில் இந்த ஆண்டு ஹஜ்ஜுக்கு செல்ல விண்ணப்பித்தவர்களில் புதிதாக செல்பவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குதல், முதியவர்களுக்கு முன்னுரிமையளித்தல் போன்ற நடைமுறைகளையும் எமது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடைமுறைப்படுத்தவுள்ளது. மேலும், கடந்த வருடம் ஹஜ்ஜுக்காக செல்வதற்கு விண்ணப்பித்து வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கும் இந்த முறை சந்தர்ப்பம் வழங்கப்படல் வேண்டும்.

இந்த முறை ஹஜ் பிரயாணம் மேற்கொள்ளவுள்ளவர்களுக்கான கட்டணம் பற்றி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.  கடந்த வருடம் சில முகவர்கள் கூடிய பணங்களை பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் சகல முகவர்களையும் வைத்து கலந்துரையாடலை மேற்கொண்டு இதற்கான கட்டணம் தீர்மானிக்கப்படும். சில முகவர்கள் அவர்கள் ஹாஜிகளுக்கு வழங்கும் விசேட தேவைகளை கருத்திற் கொண்டும் கட்டணங்கள் அறவிடுவர்.

ஏதும் பிரச்சினைகள் இருப்பின் அவைகள் தொடர்பில் எமக்கு அறிவித்தால், அவற்றை நாங்கள் கவனத்தில் கொள்வோம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .