2026 மே 06, புதன்கிழமை

ஜோர்தானில் பலியான பெண்ணின் மரணம் தொடர்பில் முறைப்பாடு

Suganthini Ratnam   / 2013 மே 26 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

ஜோர்தான் நாட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றிவந்த நிலையில், துப்பாக்கிச் சூட்டில் பலியானதாகக் கூறப்படும் மட்டக்களப்பு மாவட்டதைச் சேர்ந்த பெண் ஒருவரின் மரணம் தொடர்பில் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திலும் இந்தப் பெண்ணின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.

தனது மகளின் மர்மான மரணம் தொடர்பில் விசாரணை நடத்தி உண்மை அறியப்பட வேண்டும் என்று
தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும்
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திலும் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக இந்தப் பெண்ணின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
 
வாழைச்சேனை, கறுவாக்கேணி பகுதியை சேர்ந்த நாகேந்திரன் காந்திமதி (வயது 21) என்பவர்
கடந்த 22.07.2010ஆம் ஆண்டு ஜோர்தான் நாட்டில் உள்ள வீடு ஒன்றில் பணிப்பெண்ணாக  கடமையாற்றச்  சென்றிருந்தார்.

அவரது தாயாரான நாகேந்திரன் மங்களேஸ்வரியும் (வயது 45) 4 வருடங்கள் ஜோர்தான் நாட்டில் உள்ள மற்றுமோர் வீட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து விட்டு கடந்த வருடம் 2012.08.15ஆம் திகதி நாடு திரும்பியிருந்தார்.

இந்த நிலையில், இந்தப் பெண் இந்த மாதம் 6ஆம் திகதி; தனக்குத்தானே  துப்பாக்கியால் சுட்டு மரணமடைந்து விட்டதாக இந்த மாதம் 19ஆம் திகதி பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டது.

தனது மகளின் மரணம் தொடர்பாக இந்தப் பெண்ணின் தாயாரான நாகேந்திரன் மங்களேஸ்வரி தெரிவிக்கையில்,
 
அந்த நாட்டிலுள்ள இலங்கை தூதுவராலயத்தினால் கடந்த 19ஆம் திகதி அறிவிக்கப்பட்டு இன்று சடலமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 
எனது மகள் தன்னை  துப்பாக்கியால் சூட்டு தற்கொலை செய்வதற்கு காரணம் எதுவும் இல்லை. இதனை நம்ப முடியாது. அவருக்கு துப்பாக்கியை இயக்கத் தெரியாது. இந்த நிலையில் வீட்டுக்காரர்கள் மீதே சந்தேகம் உள்ளது.
 
எஜமானும் அவரது மகனும் தன்னை கொடுமைப்படுத்துவது தொடர்பில் நான் இங்கு வந்த பின்னர் தான்;  தெரிவித்திருந்தார். அங்கு நான் தங்கியிருந்த காலத்தில் கூறியிருந்தால் எனது வீட்டு எஜமானின் உதவியுடன் மகளை மீட்டு நான் நாடு திரும்பும்போது அழைத்து வந்திருப்பேன்.
 
இறுதியாக நாடு திரும்புவதற்கு முதல் நாள் மகளை சந்தித்தபோது கூட எஜமானுடன் தான் வந்தார். மூன்று மாத சம்பளத்தை தந்த பின்னர் அடுத்த வருடம் ஜுலை மாதம் மூன்று வருட ஒப்பந்த காலம் முடிந்த பின்னர் நாடு திரும்புவது பற்றி என்னிடம் தெரிவித்திருந்தார் எனக் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .