2026 மே 07, வியாழக்கிழமை

மதுபானசாலை திறப்பதற்கு எதிராக பாலமீன் மடுவில் ஆர்ப்பாட்டம்

Kanagaraj   / 2013 ஜூன் 07 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன், எஸ்.எம்.எம்.முர்ஷித்


மட்டக்களப்பு, பாலமீன் மடு வெளிச்சவீட்டுக்கு அருகாமையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபான சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச பொது மக்களால் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இவ் ஆர்ப்பாட்டத்தினை பாலமீன் மடு சமுர்த்தி மீள் எழுச்சித் திட்ட சங்கம் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கம், சாந்தி வரையறுக்கப்பட்ட பெண்கள் சங்கம், லைட்ஹவுஸ் விளையாட்டுக்கழகம், ஸ்ரீ கிருஸ்ணா விளையாட்டுக்கழகம், பாலமீன்மடு கோயில்களின் நிர்வாக சபைகள் ஒன்றிணைந்து மேற்கொண்டன.

மேற்படி ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனீத்தம்பி யோகேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர்களான துரைரெட்ணம், இந்திரகுமார் பிரசன்னா  ஞா.கிருஸ்ணபிள்ளை, க.நடராசா மற்றும் கோவிந்தம் கருணாகரம் (ஜனா) ஆகியோரும் கலந்து கொண்டனர். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பிரசாந்தன், மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயரான திரு ஜோர்ச் பிள்ளை ஆகியோரும் வருகை தந்தனர்.

ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் மதுபான சாலைக்கு தங்கள் எதிர்ப்பினை காட்டும் வண்ணம் பதாதைகள் ஏந்திய வண்ணம் வெளிச்ச வீட்டுக்கு அருகாமையில் இருந்து நடை பவனியாக மதுபான சாலை அமையவிருக்கும்  இடத்திற்கு சென்று கோஷங்களை எழுப்பி எதிர்ப்பினை வெளியிட்டனர்.

மதுபானசாலை வேண்டாம், மதுபான சாலையை நிறுவவேண்டாம், கொடுக்கப்பட்ட அனுமதியை இரத்துச் செய்யுங்கள் எங்கள் வாழ்வாதாரத்ததை காப்பாற்றுங்கள் என பலவாறாக மக்கள் கோசங்களை எழுப்பினர்.

பின்னர் அவ்விடத்திற்கு மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி ஆர்ப்பாட்டகாரர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து கொண்டார்;. பின்னர் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன் வருகை தந்து மக்களுடன் கலந்துரையாடியதுடன்  இவ்விடத்தில் மதுபான சாலை திறக்கப்படமாட்டாது என்று உறுதியளித்தார். அதன் பின் அனைத்து பிரமுகர்களினதும் பிரதேச செயலாளரினதும் வேண்டுகோளுக்கு இணங்க ஆர்ப்பாட்டத்தினை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .