2026 மே 09, சனிக்கிழமை

உலமாக்களுக்கு கல்லூரி

Kogilavani   / 2013 ஜூன் 08 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


உலமாக்களுக்கான கல்லூரியொன்று இலங்கையில் முதல் தடவையாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

காத்தான்குடி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே  அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்,

ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் 25 கல்லூரிகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதில், 20 கல்லூரிகளை அரசாங்கமும், 5 கல்லூரிகளை தனியாரும் ஆரம்பிக்கவுள்ளனர்.

அந்த வகையில் ஸ்ரீலங்கா பவுண்டேசன் நிறுவனமும் இளைஞர் திறன் அபிவிருத்தி அமைச்சும் இணைந்து மலிக் அப்துல்லா எனும் இந்த கல்லூரியை ஆரம்பிக்கவுள்ளது.

இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் வைபவம் எதிர்வரும் செவ்வாய்க்கிமை காலை காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில், ஸ்ரீலங்கா பவுண்டேசன் நிறுவனத்தின் தலைவர் என்ற வகையில் நானும் இளைஞர் திறன் அபிவிருத்தி அமைச்சின் செயலாளரும் கையொப்பமிடவுளோம்.

இந்த பல்லைக்கழக கல்லூரி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இறுதிப்பகுதியில் காத்தான்குடியிலுள்ள தொழில்நுட்ப நிறுவனக் கட்டிடமொன்றில் தற்காலிகமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கான நிரந்தரக் கட்டிடம் ரெதிதென்ன பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ளது. 1500 மில்லியன் ரூபா செலவில் இதற்கான நிரந்தரக்கட்டிடம் மற்றும் விடுதிக்கட்டிடம் என்பன நிர்மாணிக்கப்படவுள்ளன. இந்த கட்டிடம் 3 தொடக்கம் 4 வருடங்களுக்குள் முடிக்கப்பட்டு அங்கு அது மாற்றப்படவுள்ளது.

இந்த கல்லூரியில் இலங்கையிலுள்ள அறபு மதரசாக்களில் மௌலவி பட்டம் பெற்று கல்விப் பொதுத்தரதர உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்த உலமாக்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளார்கள்.

தொழில் கல்வியும் மற்றும் இஸ்லாமிய உயர் கற்கை நெறியும் கற்றுக் கொடுக்கப்பட்டு டிப்ளோமா எனும் பட்டத்துடன் வெளியேறி உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உலமாக்கள் தொழில் பெறக் கூடிய வகையில் இந்த கல்லூரி ஆரம்பிக்கப்படவுள்ளது.

நமது நாட்டில் மௌலவியாக பட்டம் பெற்ற உலமாக்கள் தொழில் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். அதேபோன்று வறுமையாகவும் வாழ்கின்றனர்.

இவர்களுக்கு சிறந்த தொழில் வழிகாட்டலை எற்படுத்தும் பொருட்டும் அவர்களுக்கு இஸ்லாமிய உயர் கற்கையை ஏற்படுத்தும் பொருட்டும் இந்த கல்லூரியை நிறுவ தீர்மானித்தோம்.

உலகத்திலுள்ள சிறந்த இஸ்லாமிய பல்கலைக்கழகங்களுடன் இணைத்து அவற்றின் கல்வி திட்டத்தினையும் சேர்த்து சிறப்பான கல்லூரியாக இதை அமைக்க தீர்மானித்துள்ளோம்.

இதில் இலங்கையிலுள்ள அனைத்து உலமாக்களும் நன்மையடையமுடியும்.

படவரைஞர், நிர்மாண  மேற்பார்வையாளர், தகவல் தொழில்நுட்பம் போன்ற பாடநெறிகளுடன் இஸ்லாமிய உயர் கற்கை நெறிகளும் கற்பிக்கப்படவுள்ளன.

3 வருடங்களைக் கொண்ட இந்த டிப்ளோமா பாடநெறியில் 2 வருடங்கள் மலிக் அப்துல்லா கல்லூரியிலும் ஒரு வருடம் ரத்மலானை கல்லூரியிலும் கற்பிக்கப்படும்.

அத்தோடு உலமாக்கள் அல்லாதோருக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் இங்கு விசேட டிப்ளோமா பாடநெறிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்த கல்லூரியின் ஆளுனர் சபையில் திறைசேரியினால் நியமிக்கப்படும் ஒருவரும் மற்றும் இளைஞர் திறனாய்வு அமைச்சினால் நியமிக்கப்படும் இருவரும் ஹிறாபவுண்டேனசன் நிறுவனத்தின் தலைவர் என்ற வகையில் நானும் அதன் உப தலைவரான மாகாண சபை உறப்பினர் சிப்லி பாறூக்கும் ஆளுனர் சபையில் இருப்போம்.

அரசியல் வேறுபாடின்றி அனைவரின் ஒத்துழைப்புடன் இந்த மலிக் அப்துல்லா எனும் சவூதி அரேபியா மன்னரின் பெயரிலான கல்லூரியை இங்கு நிறுவவுள்ளோம்' என அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .