2026 மே 09, சனிக்கிழமை

dd

மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்; பிரச்சினை குறித்து எம்மிடம் கூறுங்கள்: இராணுவம்

Menaka Mookandi   / 2013 ஜூன் 16 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் பிரச்சினைகள் தொடர்பில் வீதிகளுக்கு இறங்குவதை தவிர்த்து தன்னிடம் முறையிமாறு இராணுவத்தின் கிழக்குப் பிராந்திய கட்டளைத்தளபதி மேஜர் ஜென்ரல் லால் பெரேரா கூறியுள்ளார்.

தன்னுடைய கவனத்துக்கு இவ்விடயங்கள் கொண்டுவரப்படும் பட்சத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டு விரைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அண்மைக் காலமாக இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சமூகம் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வெலிகந்தை இராணுவத்தின் கிழக்குப் பிராந்திய கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் என விஸ்வ ஹிந்து பரிசித்தின் கிழக்குப்பிராந்திய இணைப்பாளர் வி.கமலதாஸ் தெரிவித்தார்.

இச்சந்திப்பு தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த வி.கமலதாஸ் கூறியதாவது, 'இன்றைய தினம் காலை 10 மணிமுதல் 12 மணிவரை இரண்டு மணிநேரம் நடைபெற்ற சந்திப்பில், இந்து மக்கள் எதிர்நோக்கிவரும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பிலும், அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், எதிர்கால நடவடிக்கைகள், ஆன்மீகச் செயற்பாடுகள் பற்றியும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

இதன்போது கருத்துத் தெரிவித்த கட்டளைத் தளபதி, 'மக்கள் மத்தியில் சுமூக, சமரச, நிம்மதியான வாழ்வை ஏற்படுத்துவதே எங்களது தற்போதைய கடமையாகும். எந்த வகையான பிரச்சினைகள், அச்சுறுத்தல்கள், ஏற்பட்டாலும் உடனடியாக என்னுடைய கவனத்திற்குக் கொண்டுவந்தால் சுமுகமான தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளையும், குழப்பங்களில் ஈடுபடுபவர்களையும் கண்டுபிடிக்க ஏதுவாக இருக்கும்' என்றார்.

அத்துடன், 'குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் யாரும் ஈடுபடாது, நிதானமாக விசாரணைகளுக்கும் ஒத்துழைக்கும் போதுதான் இது சாத்தியமானதாக அமையும். இந்து மக்கள் சார்பில் பொறுப்புச் சொல்லக்கூடிய வகையில் யாரும் இல்லாத குறையொன்று காணப்படுவது மிகப்பெரும் குறையாக இருக்கிறது. இதனைத் தவிர்ப்பதற்கான ஏற்பாடுகளில் தற்போது ஈடுபட்டு வருகிறோம்.

அதேநேரம், ஆன்மீகத்தின் மூலமே நமது நாட்டில் பரஸ்பர நம்பிக்கையுள்ள மக்கள் சமூகத்தினை உருவாக்க முடியும் என்பதில் நாங்கள் நம்பிக்கையாக இருக்கிறோம். அந்த வகையில் எதிர்வரும் காலங்களில் அறநெறிப் பாடசாலைகளின் மேம்பாடுகள் சார் உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளோம்' என்றார். 

அத்துடன், இந்துக்கள் சார்ந்து செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் ஆன்மீகம் சார்ந்தும் மக்களது பிரச்சினைகள், சமூக மேம்பாடுகளுக்காகவும் ஆலோசிக்கவுள்ளோம். பிரச்சினைகளின் போது, மக்கள், சமூகம் அந்நியப்பட்டு நிற்காமல் ஒத்துழைப்புகள் வழங்குகையில் விசாரணைகளை விரைவாக முடிவுறுத்துவதற்கும் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கும் உதவியாக இருக்கும்.

விஸ்வ ஹிந்து பரிசித் அமைப்பு சர்வதேச மயப்பட்டு இயங்கும் ஒரு அமைப்பு என்ற வகையில் ஒரு சிலரது அரசியல்மயமாக்கும்  செயற்பாட்டுக்குள் உட்பட்டுவிடக்கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம். சகல மதத் தலைவர்களுடனும் பேசி வருகிறோம். அந்த வகையில் விரைவில் இந்து ஆலயங்களின் பரிபாலன சபைகளையும் சந்திக்கவிருக்கிறோம்.

இராணுவ உடை மக்களுக்கு ஒருவித பயத்தினை ஏற்படுத்துகிறது (அலர்ஜீ) என்பதனாலேயே தற்போது சிவில் உடையில் இராணுவ அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதற்காக மக்கள் அச்சங் கொள்ளத் தேவையில்லை. அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியதும், மக்களது நலன் சார்ந்து சிந்திக்க வேண்டியதும் எங்களது கடமையாகும்.

ஆன்மீக ரீதியான மேம்பாட்டின் மூலமாகவே நமது நாட்டில் நிம்மதியான வாழ்வை, சுபீட்சத்தை  ஏற்படுத்த முடியும் என்ற வகையில் ஆன்மீக ரீதியான மேம்பாட்டை மேற்கொள்வது ஒவ்வொருவரதும் கடமையாகப்பார்க்கிறேன்' எனத் தெரிவித்தார்.

இப்பேச்சுவார்த்தையில், மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியத்தின் தலைவர் ஜீ.துரையப்பா, செயலாளர் சி.புஸ்பலிங்கம், துறவியான சுவாமி மகேஸ்வர சயித்தன்ய, இந்து சேவா சங்கத்தின் எஸ்.சுதர்சணன் ஆகியோர் கலந்து கொண்டதாகவும் கமலதாஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இந்து ஆலயங்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் பேரணிகள், எதிர்ப்புச் செயற்பாடுகள் நடைபெறவுள்ள நிலையில் இச்சந்திப்பு நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • Vasu Tuesday, 18 June 2013 12:54 PM

    இராணுவத்தினர் இவ்வாறான “சிவில்“ வேலைகளில் ஈடுபடுவது எங்கேயோ நெருடுகிறது...!!! சிந்திக்க வேண்டிய விஷயம்....!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .