2026 மே 09, சனிக்கிழமை

dd

இந்திய வீட்டுத்திட்டத்தினூடாக கிழக்கில் திட்டமிட்ட குடியேற்றம்: த.தே.கூ. கண்டனம்

Menaka Mookandi   / 2013 ஜூன் 17 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

'இந்திய வீட்டுத்திட்டத்தினூடாக கிழக்கில் திட்டமிட்ட குடியேற்றத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அறிகின்றோம். இவ்வாறானதொரு நடவடிக்கைக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் இடமளிக்காது' என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நடைபெற்றுவரும் பிரச்சினைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரனின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் இந்திய அரசின் உதவியுடன் வீட்டுத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த வீட்டுத் திட்டம் தொடர்பில்இந்திய அரசுடனும் அரச அதிகாரிகளுடனும் நாம் பலமுறை பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம்.

வடக்கு கிழக்கு பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு வீட்டு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என கேட்டிருந்தோம். அரசாங்கமும் அவ்வாறானதொரு கோரிக்கையை முன்வைத்தது. அதன்படி இந்திய அரசாங்கம் இவ்வீட்டுத் திட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளது.

இதன்பிரகாரம், வடக்கிற்கு 50,000 வீடுகளும் கிழக்கிற்கு 4000 வீடுகளும் நிர்மாணித்துக்கொடுக்க திட்டமிடப்பட்டது. இந்த 4000 வீடுகளிலே மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 2000 வீடுகளும் திருகோணமலை மாவட்டத்திற்கு 1000 வீடுகளும் அம்பாறை மாவட்டத்திற்கு 1000 வீடுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்த முடிவுகள் அனைத்தும் பொருளாதார பிரதியமைச்சர் ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லாவின் தலைமையில் மார்ச் மாதம் 7ஆம் திகதியன்று இரவு இந்திய பிரதித் தூதுவர் இல்லத்திலே வைத்து எடுக்கப்பட்டது. இதில் இந்திய தூதுவரும் கலந்து கொண்டார்.

இந்த சந்திப்பின் போது கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளையும் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டோம். இதிலே எந்தெந்த பிரதேசங்களுக்கு வீடுகள் நிர்மாணித்துக் கொடுப்பது என்பதும் தீர்மானிக்கப்பட்டது.

அந்த வகையில் போரதீவுபற்று- வெல்லாவெளி, கோரளைப்பற்று தெற்கு- கிரன், மண்முனை மேற்கு- வவுணதீவு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு கொடுப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது. அந்தவகையில் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களுக்கு நூறு நூறு வீடுகள் நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்டது.

ஆனால், அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாக இதில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு ஒரே பிரதேச செயலாளர் பிரிவில் மூன்று இடங்களில் வீடுகள் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. இந்த தீர்மானமானது, மூன்று இனங்களும் ஒருமித்து கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக செய்யப்பட்டதா என தெரியவில்லை. இப்பிரதேசத்திலே தமிழர்களும் முஸ்லீம்களும் பாதிக்கப்பட்டார்கள். ஆனால் சிங்களவர்கள் பாதிக்கப்படவில்லை என்று நான் சொல்லவில்லை. சிலவேளை பாதிக்கப்பட்டிருக்கலாம்.

இருப்பினும், மட்டக்களப்பிலே 95 வீதம் தமிழர்களே அதிகம் யுத்தத்தினால் வீடுகளை இழந்தார்கள் என்றே கூறவேண்டும். குறிப்பாக மட்டக்களப்பில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் படுவான்கரை மக்கள் தான். இருப்பினும் மூன்று இனங்களும் கலந்து கொள்ளும் வகையில் இதன் ஆரம்பகட்ட வேலைப்பாடுகள் இடம்பெற்றிருக்கின்றன. பரவாயில்லை.

பாதிக்கப்பட்டவர்கள் எந்த இனமாக இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் தலையிடாது. ஆனால் பாதிக்கப்படாதவர்களுக்கு செல்லும் போது அதை நாம் ஏற்கமாட்டோம்.

இந்த இந்திய வீட்டுத்திட்டம் இப்பகுதியிலே ஒரு திட்டமிட்ட குடியேற்றத்தை ஏற்படுத்துவதற்கு பயன்படுத்துவதை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். வடக்கில் இவ்வாறு நடைபெற்றதாகவும் கிழக்கில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருதாகவும் நாம் அறிகின்றோம். இது தொடர்பாக நாம் அரசாங்க அதிபருக்கு எமது ஆட்சேபணையை தெரிவித்திருக்கின்றோம்' என்றார். 

'இந்திய வீட்டுத்திட்டத்தினூடாக திட்டமிட்ட குடியேற்றத்தை மேற்கொள்ளும் வகையில் வடக்கிலே சில கிராமங்களில் வெளிமாவட்ட மக்களுக்கான குடியேற்றங்கள் அமைக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பனர்களின் முறைப்பாடுகளிலிருந்து நாம் அறிந்துகொண்டோம்.இதனால்தான் நாம் இது சம்பந்தமாக மிகவும் அக்கறையாக இருக்கின்றோம்.

இது சம்பந்தமாக சில பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன என கேள்விப்பட்டோம். ஆனால் எங்களால் அதனை நிருபிக்க முடியாமல் போய்விட்டது. இருப்பினும் நாங்கள் கேள்விப்பட்டவற்றை அரச அதிபரிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் முறையிட்டோம்.

இவ்வாறு இடம்பெறாமல் இருப்பது அரசாங்கத்தின் பொறுப்பு. இந்திய தூதரகத்தின் பொறுப்பு. அது மட்டுமல்லாது தமிழ் தேசிய கூட்டமைப்பினரதும் இந்த மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகளினதும் பொறுப்பு ஆகும்.

இவ்வாறான நான்கு விடயங்களுமே கடந்த இரு மாத காலத்திற்குள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் மத்தியில் பெரும் குழப்ப நிலையை தோற்றுவித்தன. இவ்வாறான செயற்பாடுகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு அவ்வப்போது சில நடவடிக்கைகளை மேற்கொண்டு அவற்றை தடுத்தும் உரிய அதிகாரிகளிடம் நடவடிக்கைகளை மேற்கொள்ள பணித்தும் இருக்கின்றோம்' என்றார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .