2026 மே 09, சனிக்கிழமை

வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவில் முறைகேடு; மகஜர் கையளிப்பு

Suganthini Ratnam   / 2013 ஜூன் 17 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்

'மஹிந்த சிந்தனை' திட்டத்தின் கீழ், ஏறாவூர் சதாம் ஹுஸைன் ரூபி கிராமத்தில் புனரமைக்கப்படும் 50 வீடுகளையும் பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்கும் விடயத்தில், அநீதியும் முறையற்ற தெரிவும் இடம்பெற்றிருப்பதாக தெரிவித்து ஏறாவூர் பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்று  கையளிக்கப்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை காலை (17.06.2013) பொதுமக்கள் இந்த மகஜரை கையளித்ததாக ஏறாவூர்  பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா தெரிவித்தார்.

இதேவேளை, இந்தக் கோரிக்கை அடங்கிய மகஜரை கிராமத்து மக்கள் சுமார் 30  பேர் பிரதேச செயலகத்துக்கு வந்து ஏறாவூர்  பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்ஹனீபாவிடம் கையளித்ததாக இவர்களில் ஒருவர் தெரிவித்தார்.

அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'பரம ஏழைகளாகவும் எவ்விதமான அடிப்படை வசதிகளற்றும் உள்ளோம். வீட்டு வசதி இல்லாததால் திருமண வயதைக் கூட கடந்து இந்தக் கிராமத்திலுள்ள எங்களில் பலர் வாழ்க்கையிழந்து பரிதவிக்கின்றோம்.

ஏழைகளாகிய எங்களின் நிலைமை இவ்வாறிருக்கும்போது இந்த 50 வீட்டுத் திட்டத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கும் அரசியலில் ஈடுபடுவோருக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு ஏழைகளின் பெயரால் வசதி படைத்தோருக்கு வீடுகள் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கின்றன. இது மிகப்பெரும் முறைகேடும் அநீதியுமாகும்.

எனவே ஏழைகளின் பெயரில் நிர்மாணிக்கப்பட்டு செல்வாக்கின் அடிப்படையில் அரச உத்தியோகத்தர்களுக்கும் அரசியல் பின்புலமுள்ளவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள இந்த வீடுகளை உடனடியாக இரத்துச் செய்து கிராமத்திலுள்ள ஏழைகளுக்கு மாத்திரம்  கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .