2026 மே 09, சனிக்கிழமை

த.தே.கூவிலிருந்து யாரையேனும் பிரித்தெடுக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது: யோகேஸ்வரன் எம்.பி

Kogilavani   / 2013 ஜூன் 20 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.எச்.ஏ.ஹுஸைன்


'தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எதிர்க்கட்சியில் இருப்பதன் காரணமாகத்தான் எமது மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக குரல் கொடுக்க முடிகிறது. நாங்கள் அரசாங்கத்தின் ஒரு பங்காளியாக இருப்போமானால் 'நக்குண்டான் நாவிழந்தான்' நிலைதான் ஏற்படும். இன்று அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து யாரைப் பிரித்தெடுக்கலாம் என்று பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது' என  தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

'அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் தமிழ் அரசியல்வாதிகளால் அபிவிருத்தி பற்றி மட்டுமே பேசமுடியும். உரிமைகளுக்காக போராடிக்கொண்டிருக்கும் எமது இனத்துக்காக குரல்கொடுக்க முடியுமா?' எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

மீள்குடியேற்ற கிராமமான சின்னப்புல்லுமலை பிள்ளையார் ஆலய முன்றலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'13 ஆவது திருத்தச்சட்டத்திலுள்ள அதிகாரங்களை குறைத்து 19 ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனை அரசுடன் இணைந்துள்ள தமிழ் அரசியல்வாதிகள் எவராலும் எதிர்க்க முடியாது. தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் மாத்திரமே இதற்கெதிராக குரலெழுப்ப முடியும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்க் கட்சியில் இருக்கும் காரணத்தினால் மக்களின் அபிவிருத்தி நடவடிக்கைளில் எங்களை இணைத்துக்கொண்டு செயற்படுத்துவதற்கு நிதிவளம் போதாது. எங்களுக்கு கிடைக்கின்ற சிறு உதவிகளைக் கொண்டு எமது மக்களுக்கு எம்மாலான இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எதிர்க்கட்சியில் இருப்பதன் காரணமாகத்தான் எமது மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக குரல் கொடுக்க முடிகிறது.

நாங்கள் அரசாங்கத்தின் ஒரு பங்காளியாக இருப்போமானால் 'நக்குண்டான் நாவிழந்தான்' நிலை ஏற்படும். இன்று அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து யாரைப் பிரித்தெடுக்கலாம் என்று பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  நாங்கள் நாளை அரசாங்கத்துடன் இணைந்தால் பலகோடிகளுக்கு அதிபதிகளாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களை அவர்களிடம் ஈடு வைத்துத்தான் இந்த சுகபோகங்களை அனுபவிக்க வேண்டும்.

அரசாங்கத்தினால் கிடைக்கும் கோடிக்கணக்கான சொத்துக்களுக்கோ, அமைச்சர் பதவிகளுக்கோ அல்லது ஆடம்பர வாகனங்களுக்கோ நாங்கள் ஒருநாளும் சோரம்போக மாட்டோம்.

எமது இனத்தின் விடுதலைக்காக எமது மக்கள் இந்த மண்ணிலே இத்தனை காலமும் அனுபவித்த துன்ப துயரங்களுக்கு ஒரு விடிவை நாங்கள் பெறவேண்டும். அதற்காகத்தான் எங்களை அர்ப்பணித்து இந்த பணியில் இறங்கியிருக்கிறோம்.

எமது மக்கள்தான் எங்கள் சொத்துக்கள். அவர்கள் படும் வேதனைகளையும் துன்பங்களையும் போக்கவேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. எங்களால் முடிந்தவரை மக்களுக்கு அபிவிருத்தியையும் செய்துகொண்டு வருகின்றோம்' என்றார்
இந்நிகழ்வின்போது நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன. அத்துடன் தெரிவு செய்யப்பட்ட வறிய குடும்பங்களுக்கு நிதியுதவிகளும் வழங்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .