2026 மே 09, சனிக்கிழமை

dd

விளக்கமளிக்கும் நிகழ்விலும் தமிழ் பாடசாலைகள் புறக்கணிப்பு: யோகேஸ்வரன் எம்.பி குற்றச்சாட்டு

Kanagaraj   / 2013 ஜூன் 20 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

தொழில்நுட்ப கல்லூரிகளில் கற்பிக்கும் விரிவுரையாளர்களை அழைத்து விளக்கமளிக்கும் கூட்டத்திலும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் பாடசாலைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர்  ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்த மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உயர்தரக் கல்வி கற்கும் மாணவர்களுக்கு மூன்று வருடங்களுக்கு தொழில் நுட்ப பாடம் கற்பிக்கும் திட்டம் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தொழில்நுட்ப கல்லூரிகளில் கற்பிக்கும் விரிவுரையாளர்களை அழைத்து விளக்கமளிக்கும் நிகழ்வு 2013.06.20 ஆம் திகதி அன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

உயர்தர கல்வி வகுப்பு மாணவர்களுக்கான மூன்று வருட தொழில்நுட்ப பாடம் கற்பிக்கும் செயற்றிட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் பாடசாலைகள் புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது.

தங்களது அரசாங்கத்தின் மூலம் தற்போது கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு தொழில் நுட்பக் கல்வி ஊட்டும் நோக்கோடு மூன்று வருட திட்டம் அமுல்படுத்தப்படுவதை அறிந்துள்ளேன்.

இதற்காக ஒவ்வொரு தொகுதியில் இருந்து ஒரு பாடசாலை அல்லது இரு பாடசாலை வீதம் தெரிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. ஆனால் கிழக்கு மாகாணத்தில் பாடசாலைகளை தெரிவு செய்து அனுப்பியதில் முறைகேடு நடைபெற்றுள்ளது.

அதாவது கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை தொகுதியிலிருந்து அநுராதபுர சந்தியில் உள்ள விபுலானந்த வித்தியாலயம் மாத்திரமே தமிழ் பாடசாலையாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் மூதூர் தொகுதியில் மூதூர் மத்திய கல்லூரி என்னும் முஸ்லிம் பாடசாலையும், கல்குடா தொகுதியில் ஓட்டமாவடி மத்திய கல்லூரி என்னும் முஸ்லிம் பாடசாலையும், மட்டக்களப்பு தொகுதியில் காத்தாங்குடி மத்திய கல்லூரி என்னும் முஸ்லிம் பாடசாலையும், சம்மாந்துறை தொகுதியில் சம்மாந்துறை முஸ்லிம் மகா வித்தியாலயமும், அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியும், பொத்துவில் தொகுதியில் அட்டாளைச்சேனை மத்திய மகா வித்தியாலயம் என்னும் முஸ்லிம் பாடசாலையும், கல்முனை தொகுதியில் சாஹிரா கல்லூரி என்னும் முஸ்லிம் பாடசாலையும், அம்பாறையில் ஒரு சிங்கள மகா வித்தியாலயமும், சேருவில தொகுதியில் அக்வோபுர வித்தியாலயம், கந்தளாய் மத்திய கல்லூரியும் தெரிவு செய்யப்பட்டுள்ள இவ்வேளையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்பு தொகுதி நூறு வீதம் தமிழர்களை கொண்டுள்ள நிலையில் இங்கு உள்ள எந்தப் பாடசாலையையும் நியமிக்காது. பட்டிருப்பு தொகுதியின் பெயரில் வாழைச்சேனை அந்நூர் மகா வித்தியாலயம் என்னும் முஸ்லிம் பாடசாலை தெரிவு செய்யப்பட்டுள்ளது. இது நியாயமற்ற நடவடிக்கை என்பதை குறிப்பிட விரும்புகின்றேன்.

பட்டிருப்பு தொகுதியை தனித் தமிழ் தொகுதி என்ற நிலையில் புறந்தள்ளி உள்ளமையையும், கிழக்கு மாகாணத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேலாக காணப்படும் தமிழ் மக்களின் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு பாடசாலையை வழங்கி விட்டு தமிழ் மக்களை ஒத்த சனத்தொகையை அண்ணளவாக கொண்ட முஸ்லிம் மக்களின் மாணவர்களுக்கு எட்டு பாடசாலையை வழங்கியமை திட்டமிட்ட ஒரு செயற்பாடாக உள்ளது.

இதேவேளை சிங்கள மாணவர்களின் நலன்கருதி மூன்று பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபை முஸ்லிம் பிரதிநிதிகளின் ஆட்சியில் உள்ளது என்ற காரணத்துக்காகவா? தமிழ் பகுதி மாணவர்களின் கல்வி மேம்பாட்டு திட்டங்கள் புறக்கணிப்படுகின்றது என கேட்க விரும்புகின்றேன்.

ஆனால் முஸ்லிம்கள் கல்வியில் முன்னேறுவதையோ, தொழில் நுட்ப கல்வி ஊட்டலில் முன்னலைப்படுத்துவதையோ எதிர்க்கவில்லை. ஆனால் திட்டமிட்ட வகையில் தமிழ் மாணவர்களின் எதிர்கால முன்னேற்றங்களுக்கு குந்தகம் எற்படுத்த முயல்வதை ஏற்க முடியாது.

எனவே இந்நாட்டின் தலைவன் என்ற வகையில் தயவு செய்து முஸ்லிம் பாடசாலைகளின் தெரிவுக்கு சமனான முறையில் தமிழ் மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலையின் எண்ணிக்கை ஏற்படுத்துமாறு அன்பாக கோருவதுடன், பட்டிருப்பு தொகுதிக்குரியதை அத்தொகுதியில் உள்ள உயர்தர வகுப்பு கொண்ட பாடசாலை ஒன்றுக்கு தொழில் நுட்ப பயிற்சியை பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்து உதவுமாறு அன்பாக வேண்டுகின்றேன் என அவ்மகஜரில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பிரதிகள் கல்வி அமைச்சர், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .